Monday, 15 April 2019

ஐம்பெரும் ஓவியம் - 1 - ஆதங்கம், அறியாமை, கேள்விகள்


இலக்கிய தொகை
தமிழ் இலக்கியத்தில் ஐம்பெருங் காப்பியம் புகழ்பெற்றவை. ஐங்குறுங்காப்பியமும் அறிவோம். வடமொழியில் மூன்று பிருஹத்காவியங்கள், அதாவது, பெருங்காப்பியங்கள், புகழ் பெற்றவை; இவை பாரவி இயற்றிய கிராதார்ஜுனீயம்; மாகன் இயற்றிய சிசுபாலவதம்; ஸ்ரீஹர்ஷன் எழுதிய நைடதம். காளிதாசன் இயற்றிய ரகுவம்சம், குமாரசம்பவம் இரண்டையும் சேர்த்து, வடமொழியின் ஐம்பெருங் காப்பியமாகவும் கூறுவர். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில், அதாவது பதினாறாம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் இயற்றப்பட்டன என்று சமீபத்தில் அறிந்தேன். மற்ற இந்திய மொழிகள் இதுபோல் வரிசையை நான் கேள்விப்பட்டதில்லை.

பஞ்சபூதங்களையும் நாம் அறிவோம். உபநிடதங்களிலும் புறநாநூற்று பாடலிலும் இப் பஞ்சபூதங்களை வணங்கியும் வர்ணித்ததும் வரலாறு. பஞ்சபூத தலங்கள் என்று பாடல் பெற்ற ஐந்து சிவன் கோயில்களும் தமிழரும் மற்ற தென்னிந்தியரும் அறிந்ததே. முருகனின் அறுபடை வீடுகளை சொல்லவும் வேண்டுமா?

இசைத்தொகை
கர்நாடக இசையில் திருவாரூர் தியாகையர் இயற்றிய பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. முத்துசாமி தீட்சிதரின் கமலாம்பாள் நவாவர்ணமும் சிலர் அறிவர். விக்கிரமாதித்தியன் அரசவையில் நவரத்தினங்களாக ஒன்பது புலவர் இருந்ததும் கர்ணப்பரம்பரை. எந்த விக்கிரமாதித்தியன் என்பது கேள்விக்குறி. முகலாய மன்னன் அக்பரின் அரசவையிலும் கிருஷ்ணதேவராயர் அரசவையிலும் இதுபோல் நவரத்தினங்கள் இருந்ததும் தெரியும். நவரத்தினம் என்பதே செல்வந்தர் மகிழும் ஒன்பது ரத்தினங்கள் அல்லவா?

நான்மறை, அறுசுவை, ஏழு ஸ்வரம், எட்டு திக்கு, என்றெல்லாம் பொக்கிஷங்களை எண்ணி கணித்து கொண்டாடுவது நம் வழக்கம். அகநானூறு, ஐங்குறுநூறு, இனியவை நாற்பது, பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று இலக்கியத்தில் மிக தொன்மையான மரபை காண்கிறோம்.

கலைத்தொகை
ஐம்பெரும் ஓவியம் என்று நாம் கொண்டாடுகிறோமா? எனக்கு தெரிந்து அப்படி யாரும் ஒரு தொகுப்பை வழங்கவில்லை. ஓவியர்கள் கூட யாரும் இதை பற்றி பேசியோ எழுதியோ நான் கேட்டதில்லை. பண்டைக்கால ஓவியங்கள் பலவும் காலத்தின் கோலத்தால் அழிந்து ஒழிந்து விட்டன என்று  ஒரு வாதத்துக்கு ஒதுக்கிவிடுவோம். ஐம்பெரும் சிற்பம் என்றாவது நாம் புகழ்ந்து பாராட்டுகிறோமா? இல்லை. ஏன்?

மாமல்லபுரத்து ஐந்து ரதங்கள் மிகப்பிரபலம். பாரதத்தை தாண்டி உலக கலை ரசிகரின் மனதில் அவற்றுக்கு ஒரு சிறப்பிடம். அவை ரதங்கள் அல்ல, கோயில்கள். ஐந்து கோயில்கள் என்று யாரும் அழைத்ததில்லை. இருபதாம் நூற்றாண்டிற்கு முன் தமிழ் இலக்கியத்தில் அவை இடம் பெறவேயில்லை. தமிழ் சினிமா பாடல்களில் கோயில்களும் சிற்பங்களும் ஓடி விளையாடி நடனமாடும் நடிகருக்கு பின்புல களமே தவிற, திரைப்படங்களின் கதைக்கும் சிற்பக்கலைக்கும் தொடர்பிருக்காது. கல்கியின் சிவகாமியின் சபதம் உட்பட, மாமல்லபுரத்து ஐந்து ரதமும், அஜந்தா சித்தன்னவாசல் ஓவியங்களும் கதாநாயகருக்கு பின்புலமேயன்றி, கதையின் இணைந்த கலைகளல்ல. இவற்றை, இலக்கியமும் இசையும் திரைப்படத்துறையும் சிற்பக்கலைக்கு செய்த அவமரியாதை என்று கொள்வதா, அறியாமை என்று கொள்வதா, அவதூறு என்றே கொள்வதா?

என் அஜந்தா பயணம்
அஜந்தா ஓவியங்களை முதன்முதல் தை மாதம் 2006ல் நேரில் சென்று பார்த்தேன். இனம்புரியா கோவமும் சோகமும் என்னை ஆட்கொண்டன. ஒரு ஓவியத்திலுள்ள ஒரு பாத்திரமோ, அவர்களது கதையோ ஒன்றையும் அடையாளம் காணமுடியவில்லை. அவை யாவும் புத்தரின் வாழ்க்கை சம்பவங்களும், அதிசயங்களும், புத்தரின் முற்பிறவியான பற்பல போதிசத்துவர்களின் கதைகள் என்பதே முக்கிய காரணம். அதற்குமுன் நான் அமர் சித்திர கதை காமிக்ஸ் புத்தகங்களிலும், அம்புலிமாமா பத்திரிகை கதைகளிலும் பார்த்து ரசித்த ஓவியங்களுக்கும் அஜந்தா ஓவிய பாணிக்கும் சம்பந்தமேயில்லை. மளிகை கடைகள் இலவசமாய் தரும் நாள்காட்டியிலோ, ராஜா ரவி வர்மனின் ஓவியத்திலோ, அங்கும் இங்கும் சில கோவில்களில் கண்ட ஓவியங்களிலோ காணும் கலை வடிவங்கள், உருவங்கள், அங்க இலக்கணங்கள், ஆடைகள், நிறங்கள்... இவை ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும், அஜந்தா ஓவியங்களோடு ஒப்பிடும் போது வேறு யுகத்து வேறு நாட்டு வேறு பண்பாட்டு கலையை பார்க்கிறோமோ என்ற ஐயம் ஏற்பட்டது.

அஜந்தா குகை 17
படம் - சித்தார்த் சந்திரசேகர்

அஜந்தா குகை 2 - சேதமான ஓவியம்
படம் - ர கோபு

அஜந்தா ஓவியத்தின் கலையோ, வரலாறோ, ஓவியர்களின் திறமும் நுணுக்கமும் புறிந்துகொள்ளவோ அனுபவிக்கவோ அடிப்படை ஞானம் கூட எனக்கு அன்று இல்லை. திகைக்கவும் திண்டாடவும் மட்டுமே ஞானம் திகழ்ந்தது. அங்கு வழிகாட்டிகள் மற்றவருக்கு சொல்லும் வர்ணனைகள் ஓரிரண்டு நிமிடம் காதில் பட்டாலும், தப்பாகவே தோன்றியது. ஏதோ ராஜா, ராணி, நாட்டிய பெண், பொறாமை, போட்டி, மரண தண்டனை, என்று அவர்கள் சினிமா தொலைகாட்சி கதைகளை அங்கே கோர்த்துவிடுவதாகவே எனக்கு தோன்றியது. அங்கும் இங்கும் சிதைந்து உடைந்து கிடந்த சில ஓவியங்களின் பரிதாப நிலையும், மிஞ்சியிருந்த சில ஓவியங்கள் மேலே சமகாலத்து கயவர்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தங்கள் பெயர்களை கிறுக்கியிருந்தது வெறுப்பூட்டியது. அவர்கள் மீதும் பாரத சமூகம் மீதும் நம் கல்வி மீதும், ஏன் ஆசிரியர் கல்கி மீதும் கூட கோபம் பொங்கி வழிந்தது. என் தம்பி ஜெயராமன் அருகில் வந்து, குகை பின்சுவரிலிருந்த புத்தர் சிலையை காட்டி, “அவரே இரண்டாயிரம் வருஷமா இதை எல்லாம் பார்த்து அமைதியா இருக்கார், உனக்கு ஏன் இவ்வளவு கோபம்,” என்றான். ஓரிரு நிமிடம் புத்தரை பார்த்தேன்; அவர் முகத்தில் தோன்றும் சாந்தம் ஒரு தொத்துவியாதி; அமைதியானேன்.

தன் கையிலிருந்த திராட்சை பையை திருடிய குரங்கின் மேலுள்ள கோபத்தையும், குகை குகையாய் ஏறி இறங்கிய கோபத்தையும் என் தங்கை தேவசேனா மீது அவள் மகள் சினேஹா செலுத்தினாள்; அவளுக்கு புத்தர் சாந்தம் அளிக்கவில்லை; தேவசேனா மணிமேகலையாக மாறவேண்டியிருந்தது.

சுமார் ஐந்து வருடத்திற்கு பின் ஐப்பசி மாதம் நவம்பர் 2010ல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் அஜந்தா எல்லோரா கலை உலாவின் பயிற்சி உரைகள் தொடங்கின. முப்பது ஆண்டுகளாக பற்பல அஜந்தா புத்தகங்களை படித்து, அவற்றின் கலையின் ஆழமும் நுணுக்கமும் வரலாறும் உணர்ந்த பேராசிரியர் சுவாமிநாதன், எங்கள் வழிகாட்டி. வைகாசி மாதம் (ஜூன்) அவரிடம் அவர் எழுதிய அஜந்தா புத்தகத்தை வாங்கி படித்தேன். ஓரிரு மாதம் கழித்து திருப்பி கொடுக்கும் போது, நீதான் இந்த புத்தகத்தை படித்த முதல் ஆள் என்றார். சின்ன ஆனந்தமும் பெரிய ஆதங்கமும் அவர் குரலில் தொனித்தன. நான் திகைத்து நின்றேன். “உனக்கு முன்னாடி எங்க அண்ணா படிச்சார் ஆனால் அது பிழை நடை பார்த்து திருத்தும் பணி.” அவர் அண்ணா கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி, வங்காள மொழியில் சாதனைகள் படைத்து பெரும் விருதுகள் பெற்ற எழுத்தாளர்.

அஜந்தாவை மட்டுமல்ல, இந்திய ஓவிய மரபை, அதன் மகத்துவத்தை புரிந்துகொள்ள சுவாமிநாதன் புத்தகம் ஈடற்றது. ஆனந்த குமாரசாமி, சிவராமமூர்த்தி, அரவிந்த கோஷ், ஸ்டெல்லா கிராம்ரிச் போன்ற கலைஆய்வு ஜாம்பவான்கள் எழுதிய நூல்கள் மட்டுமல்ல, மதன்ஜீத் சிங், பெனாய் பெஹல், லேடி ஹெர்ரிங்காம், வால்டர் ஸ்பிங்க், டெய்டர் ஷிங்லாஃப், புத்த ஜாதக கதைகள், இந்திய தொல்லியல் துறை, என்று நீண்ட வரிசையாக அஜந்தாவை மட்டும் விவரித்த நூல்களை படித்து ஆய்ந்து ஒரு நூலை படைத்துள்ளார் சுவாமிநாதன். கிட்டத்தட்ட உவேசா சங்க இலக்கியத்துக்கு எழுதிய விளக்கவுரை போல் அஜந்தா ஓவியங்களை ஒரு ஆர்வலன் புரிந்துகொள்ள உதவும் அரும்பத உரை.

அயல்நாட்டு ஓவியங்கள்
லியோனார்டோ டா வின்சியின் மோனா லிசா, கடைசி விருந்து (லாஸ்ட் சப்பர்), மைக்கேல் ஏஞ்செலோவின் சிஸ்டைன் சேப்பல் விதான ஓவியம், பிகாஸோவின் லா குயர்ணிகா, ரெம்பிராண்டின் அல்லிமலர்கள், வேன் கோவின் சுயஓவியம் போன்ற ஐரோப்பிய ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை. இதைப்போல் இந்திய ஓவியங்கள் ஏதேனும் புகழ்பெற்றவையா? பண்டைய சீன பாரசீக எகிப்திய கிரேக்க ஓவியங்கள்? வெகு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறேன்.

வினா பட்டியல்
வாசகரே, இப்பொழுது சில கேள்விகள் கேட்கிறேன். எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரியும் என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 

 1. அஜந்தாவில் சராசரியாக எத்தனை ஓவியங்கள் உள்ளன?
 2. அவை எந்த காலத்தவை?
 3. ஓரிரு ஓவியர்களின் பெயர் சொல்லமுடியுமா?
 4. ஐந்து அஜந்தா ஓவியங்களின் பெயர்கள் சொல்லமுடியுமா?
 5. அஜந்தவை போல் பாரத நாட்டில் வேறெங்கு அவ்வளவு சிறப்பான ஓவியங்கள் உள்ளன? மூன்று இடங்கள் சொன்னால் போதும், இவற்றை க,ச,ட என்று வைத்துக்கொள்வோம்
  1. க - ?
  2. ச - ?
  3. ட - ?
 6.   க, ச, ட இடங்களிலுள்ள ஒரு சில ஓவியங்களின் பெயர் என்ன (மோனா லிஸா, கடைசி விருந்து போல).
 7.  அவை எந்த காலத்தவை? நூற்றாண்டு தெரிந்தால் போதும்
 8.  வரைந்த ஓவியர்கள் யார்?
 9. அஜந்தாவை போலவோ, க,ச,ட தலங்களை போலவோ, அதே காட்சியையோ கருத்தையோ காட்டும் ஓவியங்கள், வேறு எங்காவது இந்தியாவிலோ, வெளி நாடுகளிலோ உள்ளனவா?(அருங்காட்சியகத்தில் இருப்பினும் பரவாயில்லை)
 10. ஓவியங்களை பற்றி ஏதேனும் புத்தகத்தை படித்துள்ளீர்களா?


இந்திய ஓவியக்கலை பற்றிய இந்த எளிய வினாத்தாளில் எத்தனை விடைகள் தெரிந்தன? 

பதில் தெரியாத சிலருக்கு, இந்த கேள்விகள் காழ்ப்பையோ சோர்வையோ தூண்டலாம். மன்னிக்கவும்; இந்த வினாக்காளில் ஒரு கேள்விக்கும் 2010க்கு முன் எனக்கு பதில் தெரியாது; அந்த ஆதங்கமும் அறியாமைமும் வருத்தமும் தான் இந்த கட்டுரையை எழுதத்தூண்டின. இந்த கேள்விகள் என்னை இரண்டு மூன்று வருடங்களாக என்னை வாட்டுகின்றன. 

யாம் பெற்ற கடுப்பு இவ்வையகமும் பெற…

இந்திய அறிவியல் மரபிலும் வரலாற்றிலும் இதே ஆதங்கமும் வருத்தமும் தோன்றி சில வருடங்களாகின. அது வேறு கதை.
சரி; அடுத்த துன்புறுத்தல். இதே பத்து கேள்விகளில் ஓவியம் என்ற சொல்லுக்கு பதில் சிற்பம் என்று போட்டுக்கொண்டு, அஜந்தாவுக்கு பதில் மாமல்லபுரம், எல்லோரா, கோனாரக், பாதாமி, என்று ஏதோ பிடித்த அல்லது தெரிந்த இடத்தை போட்டுக்கொண்டு, மீண்டும் விடை எழுதுங்கள். எத்தனை பதில்கள் கிடைத்தன?

அடுத்த கட்டுரையில் எனக்கு தெரிந்த பதில்களை அளிப்பேன். நான் ஐம்பெரும் ஓவியம் என்று கருதுபவை யாவை என ஓரிரு பட்டியலை தருவேன். உங்கள் விடைகளையோ மறுப்புகளையோ பிடித்த பட்டியலையோ கீழே எழுதவேண்டுகிறேன்.

கல்விக்கூடத்தில் கலைகளின் நிலைமை
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதேசி, இந்தியன் என்ற பெருமையும் ஆவலும் கொண்ட சமூகமாக இருந்தால் இந்த கேள்விகள் அனைத்திற்கும் நமக்கு விடை தெரிந்திருக்கும். மதச்சார்பின்மை என்பது இந்துமத கலைகளை பெரிதுபடுத்தாதது என்ற வைத்துக்கொள்வோம். அப்பொழுது இந்து மரபில் பெருமை, இந்துத்வா என்ற எண்ணமே இருந்தவர்களுக்காவது சமீபத்திலாவது இந்த கேள்விகளின் விடைகள் தெரிந்திருக்கும். ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு சுதேசி என்ற பெருமையோ ஹிந்து மரபு என்ற பெருமையோ இரண்டுமே இல்லைபோலும்.

அரசு நிர்ணயிக்கும் கல்வி திட்டங்களில் மட்டுமல்ல, சமூகத்தின் எண்ண ஓட்டத்திலேயே இந்த சிந்தனைகள் இல்லை. ஆர்வம் இல்லை. தாகம் இல்லை. அச்சு பத்திரிகைகளிலோ, தொலைகாட்சியிலோ, சினிமாவிலோ ஏதும் இல்லை. பாரம்பரிய ஓவிய சிற்ப கலையை ரசிக்கும் இந்தியர்கள் மிக மிக சிறிய சமூகமாகவே உள்ளனர். நாங்கள் தேசத்தின் மனசாட்சி என்று தங்களுக்கே பட்டம் வழங்கிக்கொண்ட எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மரபோடு உறவில்லா செயற்கை தீவுகளாக வாழ்கிறார்கள் என்று தோன்றுகிறது. நம்மை விட, இருநூறு ஆண்டுகளாய் இந்திய சிற்பங்களையும் ஓவியங்களையும் ஆராய்ந்து, பல நூல்கள் எழுதி, கற்று கற்பித்து களிக்கும் ஐரோப்பியர்களே அதிகம். கிழக்காசியாவில் ஒரு சிலர் தேரலாம். நம் கல்லூரிகளும் பள்ளிகளும் ஐரோப்பிய கலை ஆர்வலரை தான் வளர்க்கின்றனவோ?

காலனிய ஆதிக்க நாடுகளாகிய இங்கிலாந்து பிரான்சு நெதர்லேண்டு பெல்ஜியம் இவையோடு காலனி ஏதுமற்ற  இத்தாலி ஜெர்மனியில் உதித்த தொழில் புரட்சி, இந்தியாவிலும் தோன்றாத குறையை தீர்க்க, இந்திய அரசும் மக்களும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் காட்டி, நம் கல்வி திட்டத்தில் கலைகளை மிக பின்தள்ளிவிட்டோம். ஆரம்பப் பள்ளிகளிலேயே இந்த ஓரவஞ்சனை தொடங்கிவிடுகிறது. பொறியியல் மருத்துவம் சட்டம் நிர்வாகம் ஆகிய தொழில்களுக்குள்ள சமூக மரியாதையும் அந்தஸ்தும் மற்ற தொழில்களுக்கு பொதுவாக இல்லை. சமீபத்தில் சில மருத்துவர்களின் ஊழலினாலும், சில வக்கீல்களின் ரௌடித்தனத்தினாலும், சில பொறியாளர்களின் திறமையின்மையாலும் சம்பளச்சரிவினாலும் இது பிரம்மாண்டமாக மாறுகிறது. ஒருவேளை இதனால் நம் கல்வி அமைப்பும் மாறலாம். கலைக்கு பள்ளிக்கூடங்களில் கொஞ்சம் இடம் கிட்டலாம்.
ராமு அரக்கட்டாளை பேராசிரியர் பாலுசாமிக்கு வேதவல்லி விருது அளித்த நிகழ்விலும், சென்னை அருங்காட்சியகத்திலுள்ள அமராவதி சிற்பங்களை பற்றி தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையில் நான் ஆற்றிய உரையிலும் இந்த கேள்விகளை கேட்டேன். தூண்டிய சலனம் அன்றே அடங்கிவிட்டது.

தொடரும்.


No comments:

Post a comment