Wednesday, 13 December 2017

காஞ்சி மகாமணி - பேச்சுக் கச்சேரி

நகரேஷு காஞ்சி என்று பாடினார் புலவர் பாரவி. சாளுக்கிய நாட்டின் தலைநகராம் வாதாபியில் வாழ்ந்து கிராதார்ஜுனீயம் என்ற மாபெரும் காப்பியத்தை இயற்றிய புலவர், சாளுக்கியர் தங்களது இயற்கை பகைவராக (பிரக்ருதி ஆமித்திரர்) கருதிய  பல்லவரின் தலைநகராம் காஞ்சியை, ஏன் "நகரங்களில் சிறந்தது" என்று புகழ்ந்தார்?

கல்வியில் கரையிலா காஞ்சி என்று அப்பர் பெருமான் திருநாவுக்கரசரும், தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்று ஔவையும் வானுயர்த்திய தொல் நகரம் காஞ்சிபுரம்.
இன்று பட்டுபுடவைக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாக அறியப்படிகிறது. அங்குள்ள காமாட்சி, ஏகாம்பரர், வரதராசர், கந்தக்கோட்டம் கோயில்களுக்கும் அலை மோதும் அடியார் கூட்டங்களுல், பெருமாளை விட புனித பல்லியை நம்பி வருவோர் அதிகமோ என ஐயமூட்டும்.

அங்குள்ள பற்பல அற்புதமான ஈடில்லாத கோயில்களையும், அவற்றின் சிற்பங்களையும் ஓவியங்களையும் கல்வெட்டுகளையும் காஞ்சியில் வாழ்ந்த மாபெரும் புலவர்களையும் வெகு சிலரே அறிவர். தமிழ்நாட்டில் படித்து வளர்ந்த எனக்கும், கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் நாவல் படிக்கும் வரை காஞ்சியின் மகிமை தெரியாது.

ஆழ்வார்கள் பாடிய பதினாங்கு கோயில்களும், நாயன்மார்கள் பாடிய ஐந்து கோயில்களும், காஞ்சியில் உள்ளன. மதுரை, குடந்தை, உறையூர், தஞ்சை எந்த தொல்தமிழ் நகரிலும் இத்தனை பாடல் பெற்ற கோயில்கள் இல்லை.

ஏழாம் நூற்றாண்டு முதல் நம் காலம் வரை வெவ்வேறு காலங்களை பரிணமித்து பழமை தொனித்து கலை வளமை செழித்து கற்பனை திறமை பொலித்து கட்டிட கலைக்கு பாடமாய் திளைக்கும் ஆலயங்கள் வேறு எங்கும் இல்லை. எந்தையும் தாயும் முந்தை முனிவரும் புலவரும் மன்னரும் மக்களும் மகிழ்ந்து குலாவிய மாநகர்.
மிருத்யுஞ்சேஷ்வரர்

பிறவாஸ்தனம்

மாமல்லபுரத்துக்கு போட்டியாக சிற்பக்கலையில் திகழும் ஒரு ஊர் எனில் அதை காஞ்சி என்பேன். ஓவியக்கலையில் அஜந்தாவிற்கு சமகால ஓவியங்கள் மிளிர்வதும் காஞ்சியில். எங்கு பார்க்கினும் கண்ணை கவரும் மற்ற கலைகளால், சித்தன்னவாசலின் புகழ் அவற்றிற்கு கிட்டவில்லை. பிற்காலத்து நாயக்கர் ஓவியங்களையும் ரவிவர்மா ஓவியங்களையும் பழகி ஓவியச்செம்மை அறியா நமக்கு, தெய்வமெனில் எந்த சிற்பத்தையும் அழகென்று குணம் நாடாமல் பார்க்கும் பலரின் பார்வைக்கும் காஞ்சியின் பல்லவர் காலச் சிற்பங்கள் வியப்பூட்டும்.

மைக்கலாஞ்சலோவும் லியோர்ணாடோ டாவின்சியும் பிகாசோவும் தெரிந்த அளவுக்கும் அவர்களது படைப்புகளையும் அறிந்த நம்மக்களுள் பலருக்கு நம் மரபில் வந்த சிற்பியர் பெயரோ ஓவியர் புகழோ தெரியாதது வரலாற்று கொடுமை. அவர் சமைத்த கலைகளையாவது தெரிந்து கொள்வோமே. கைலாசநாதர், வைகுண்ட பெருமாள், ஜ்வரஹரேச்சுரர், மாதங்கேஷ்வரர், பிறவாஸ்தனம், மிருத்யுஞ்சேஷ்வரர் கோயில்களை பார்த்து மலைக்கவேண்டாமா?

உலகளந்த பெருமாள் கோவிலில் பரிமேலழகர் உரை எழுதினார் என்றும், கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை கந்த கோட்டத்தில் அரங்கேற்றினார் என்றும், வேதாந்த தேசிகர் மூன்று மொழிகளில் எண்ணற்ற நூல்களை இயற்றியதும், பாரவிக்கும் காளிதாசனுக்கும் ஈடான தண்டின் கச்சியில் வாழ்ந்த பெருந்தகை என்பதும் தெரியுமா? சான்றோருடைத்து என்று இவர்களை தான் ஔவை பாடினளோ?

முகலாய வம்சமும், மௌரிய வம்சமும் ஓரளவு பள்ளி புத்தகத்தில் படித்த எனக்கு, பல்லவ வம்சத்தையே சிற்பமாக பரமேச்சுர விண்ணகரத்தில் காணமுடியும் என்பது இன்ப அதிர்ச்சி.
பல்லவ வம்சம்
சமணக்காஞ்சி எனும் திருப்பருத்திக்குன்றத்தில் பல்லவர் கால சமண கோயிலும் பிற்கால திரைலோக்யநாதர் கோயிலொன்றும் உள்ளன. இதில் சில அருகர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மண்டப விதானத்தில் காணலாம். அவற்றுள் நடுவே யதுகுல கண்ணனின் சில ஓவியங்களும் உண்டு. பார்த்தால் ஒன்றும் புரியாது.



அருகர் வாழ்க்கை வரலாறு
யதுகுல கண்ணனின் சில ஓவியங்கள்

இது போன்ற பல அற்புத தகவல்களை கச்சி மாநகரின் வரலாறும் கலையும் கோயிலும் சமயமும் தறிகளும் தொழிலும் இலக்கியமும் கல்வியும் தொன்மையும் விளக்கி விவரித்து பேச, தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை இரண்டு நாள் பேச்சு கச்சேரி நடத்தவுள்ளது. நான் கைலாசநாதர் கோவிலை பற்றி பேசுவேன்.

இரண்டு நாளும் வந்து ரசித்து களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நடக்கும் அரங்கம் தமிழ் இணைய கல்விக்கழகம், காந்தி மண்டபம், சாலை, கோட்டூர்புரம், சென்னை.

வலைத்தளம் - https://thtpechchukkachcheri.wordpress.com
முகநூல் தளம் – https://www.facebook.com/events/309154459591297/

16 டிசம்பர் 2017 – சனிக்கிழமை

நேரம்தலைப்புபேச்சாளர்
காலை 9:00காஞ்சியின் பெருமை
ஒரு ரசிகமணியின் பார்வை
டாக்டர் ஆர். நாகஸ்வாமி
காலை 10:30பரமேஸ்வர விண்ணகரம் அதுவே
வைகுந்த பெருமாள் கோயில்
டாக்டர் சித்ரா மாதவன்
காலை 11:30அருகன் அணிநிறத்து ஆலயம்
திருப்பருத்திக்குன்றம் – ஜைன காஞ்சி
திரு ஷ்யாம் ராமன்
மதியம் 2:00விண்ணகரம் மன்னுகின்ற பொன்னகரம்
விஷ்ணு காஞ்சி
டாக்டர் கே தயாநிதி

17 டிசம்பர் 2017 – ஞாயிற்றுக்கிழமை

நேரம்தலைப்புபேச்சாளர்
காலை 9:00காவிய தரிசனம்
தமிழ் இலக்கியத்தில் காஞ்சி
டாக்டர் சா பாலுசாமி
காலை 10:30கண்ணுதலோன் உறைகின்ற கச்சி மூதூர்
சைவ காஞ்சி
பேரா. மதுசூதனன் கலைச்செல்வன்
காலை 11:30அதிமானம் அதி அற்புதம்
கைலாசநாதர் கோயில்
ரங்கரத்னம் கோபு
மதியம் 1:30தறி நூலழகின் உரை
காஞ்சியின் நெசவுத் தொழில்
ஶ்ரீமதி மோஹன்