Showing posts with label ஆங்கிலம். Show all posts
Showing posts with label ஆங்கிலம். Show all posts

Thursday, 23 April 2020

மெக்காலே – கல்வி மொழி - சம்ஸ்கிருதமா ஆங்கிலமா?

Macaulay on Sanskrit education - This essay in English


“நான் இந்தியா முழுவதும் பயணித்தேன். ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ இந்த நாட்டில் பார்த்ததில்லை. இந்தியாவில் உள்ள செல்வமும், உயர்ந்த பண்பும், மக்களின் தரமும் கண்டபின், இந்தியாவின் முதுகெலும்பை முறித்தால் தவிற இந்த நாட்டை நாம் கைப்பற்ற மாட்டோம். இந்தியவின் கலாச்சார மரபும் ஆன்மீகமும் அதன் முதுகெலும்பு. இந்தியாவின் மிக தொன்மையான கல்விமுறையை ஒழித்து ஆங்கில கல்வியை புகுத்தி, இந்திய நாட்டின் பண்பையும் மரபையும் விட ஆங்கிலயேர் செய்தது யாவும் சிறந்தது என்று நம்பவைத்தால், இந்தியர்கள் தங்கள் சுய மரியாதையையும் கலாச்சாரத்தையும் இழந்துவிடுவர். பின்னர், நாம் விரும்புவது போல அடிமை நாடாக மாறிவிடுவர்.”
- தாமஸ் மெக்காலே துரை, பிரிட்டன் பாரளுமன்ற உரை, பிப்ரவரி 2, 1835

இப்படி ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் அனுப்பி, உண்மையா என்று கேட்டார். சென்னையில் ஸீ-டிவி Zee-TV குழுவின் நிறுவனர் சுபாஷ் சந்திரன் இதை எடுத்துக்காட்டி ஒரு முறை பேசும் போது நான் அரங்கில் இருந்தேன்.

மெக்காலே இதை சொல்லவில்லை. இந்தியாவின் தொன்மையான மரபை ஆங்கிலம் சீரழித்துவிட்டது என்று நினைக்கும் பலர், சம்ஸ்கிருதம் அவரால் தான் வழக்கொழிந்தது என்று நினைக்கும் பலர் இதை நம்பி, பகிர்வதுண்டு.

ஏன் மெக்காலே? அவர் கவர்னர் ஜெனரலாக பதவி வகிக்கவில்லை. அந்த பதவியை வகித்த ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்க்ஸ், கார்ண்வாலிஸ், டல்ஹவுசி என்று வேறு யாரும் செய்யாததை மெக்காலே எப்படி செய்யமுடியும்? மேலும், இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் கல்வி அறிக்கை எனும் புகழ் பெற்ற உரையை மெக்காலே பேசியபோது இதை சொன்னார் என்பது குற்றச்சாட்டு. ஆர்வத்தில் அந்த கட்டுரையை இணையத்தில் தேடி நான் படித்தேன். இதை எதிர்த்து பலரும் எழுதியுள்ளனர். குறிப்பாக மிச்செல் டனினோவின் கட்டுரையை படிக்கலாம்.

“ஒரு திருடன் ஒரு பிச்சைக்காரன்” என்ற சொற்றொடரே இது ஒரு புருடா என்று சிந்தித்து படிக்கும் எவருக்கும் எச்சரிக்கை. உலகில் பிச்சைக்காரரோ திருடரோ இல்லாத நாடே இல்லை, வரலாற்றில் இருந்ததும் இல்லை.
மெக்காலே ஒரு ஆங்கிலேய ஆதிக்கவாதி. இந்திய இலக்கியத்தை, மரபை, அறிவியலை காழ்ப்புடன் நோக்கினார். ஒட்டுமொத்த சம்ஸ்கிருத இலக்கியம் ஒரு அலமாரி அடுக்கில் உள்ள ஆங்கில நூல்களுக்கு சமமாகாது என்று நினைத்தார். அது அவரது அறியாமை. ஒரு மாமேதையின் செருக்கில் பிறந்த அறியாமை. அவர் இந்தியாவை சிறந்த நாடாகவோ ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு ஆபத்தான சக்தியாகவோ நினைக்கவில்லை. தாழ்மையான இந்திய கலாச்சாரத்தில் மேன்மையான ஆங்கில கலாச்சாரத்தால் முன்னேற்ற வேண்டும் என்பதே மெக்காலேவின் வாதம்.

இந்திய நிர்வாகத்திலும் சட்ட அமைப்பிலும் பல மாற்றங்களை அவர் அறிமுகப்படுத்தினார். இதில் இந்தியர்களுக்கு பிடிக்காவிட்டால் என்றோ நாம் தூக்கி எறிந்திருக்கவேண்டும். நாம் அதை எல்லாம் வைத்துக்கொண்டு தான் ஜனநாயக இந்தியாவை நடத்துகிறோம்.

வாரன் ஹேஸ்டிங்கஸ் ஆட்சிக்காலம் முதல் கிழக்கிந்திய கம்பெனி வேத பாடசாலைகளுக்கும் இஸ்லாமிய மதராஸா பள்ளிகளுக்கும்  பாடம் நடத்த சன்மானம் கொடுத்துவந்தது. கம்பெனி ஆட்சிக்கும் முன் மன்னர்கள் ஆட்சியில் நடந்த வழக்கத்தை கம்பெனி தொடர்ந்து வந்தது. அதை ஒழிக்கவேண்டும் என்பதே மெக்காலேவின் திட்டம். சம்ஸ்கிருத பாரசீக அரபு மொழிகளில் கல்விக்கு கம்பெனி சன்மானம் அளிக்கக்கூடாது. ஆங்கில மொழிக்கல்வியை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து ஐரோப்பிய கணிதம், அறிவியல், சட்டம் எல்லாம் நடத்த வாதிட்டார். அதனால் சென்னை, கல்கத்தா, பம்பாய் நகரங்களில் மூன்று மாநில கல்லூரிகளும் உருவாகின.

ஹோரேஸ் வில்சன், ஜேம்ஸ் பிரின்செப் போன்ற வங்காள ஏசியாடிக் சங்கத்தின் உருப்பினர்கள் மெக்காலேவின் கல்வி திட்டத்தை எதிர்த்தனர். இந்தியர்கள் தங்கள் கல்விமேலும் மொழிமேலும் கலாச்சாரத்தின்மேலும் கொண்ட அபிமானத்தை இழப்பார்கள், என்று இவர்கள் தான் எச்சரித்தனர். இவர்கள் இந்தியாவிற்கு செய்த பணி அபாரமானது, அற்புதமானது. இந்த மாமேதைகளின் பெயர்களும் பணிகளும் படைப்புகளும் எல்லா இந்திய மொழிகளிலும் பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும். கட்சி மாறினாலும் காட்சி மாறாமல் இதை மறைப்பது இந்திய அரசாங்கத்தின் போலித்தனத்தையும் குறுகிய மனப்பான்மையையும் மெக்காலே போன்ற அறியாமையையும் காட்டுகிறது.

நூறு வருடம் கழித்து மோகன்தாஸ் காந்திக்கும் ரவீந்திரநாத் தாகூருக்கும் இதை போன்று ஒரு விவாதம் நடந்தது. ஆங்கில மொழி இந்தியாவிலிருந்து அரவே ஒழியவேண்டும், ஜனநாயகம் தேர்தல் இவையாவும் இந்தியாவுக்கு தகாத ஆட்சிமுறை, ரெயில்வண்டிகளினால் இந்தியாவில் சோம்பலையும் ஒழுக்கமின்மையும் பரவுகின்றன, மேற்கத்திய மருத்துவத்தை புரக்கணிக்கவேண்டும் என்றெல்லாம் காந்தி கட்டுரைகள் எழுதினார். நீதிமன்றங்களை முழுவதும் புறக்கணிக்கவேண்டும், வக்கீல் தொழில் விபச்சாரத்துக்கு சமம், அந்த தொழிலையே இந்தியர்கள் செய்யக்கூடாது என்றும் ஆக்ரோஷமாக வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் அப்படியே செய்தனர்,. ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், மௌலானா அபுல் கலாம் ஆசாத் தங்கள் செல்வமீட்டும் வக்கீல் தொழிலை தியாகம் செய்தனர்.  ஆனால் காங்கிரசுக்கு வெளியே இருந்த இரண்டு முக்கிய அரசியல் தலைவர்கள் இதை ஏற்கவில்லை. தங்கள் வக்கீல் தொழில்களை விடவில்லை – முகமது அலி ஜின்னாவும். பீமராவ் அம்பேத்கரும்.

தாகூர காந்தியின் வாதத்தை ஆவேசமாக எதிர்த்தார். பரந்த மனப்பான்மை வேண்டும் இப்படி குறுகிய சித்தாந்தம் தகாது என்று காந்தியை சாடினார். “அனைத்து நாட்டு கலாச்சார காற்றும் இந்தியா எனும் இல்லத்தில் ஜன்னல்கள் வழியே வீச வேண்டும். ஜன்னலடைத்த ஒரு சித்தாந்த சிறைச்சாலையாக இந்தியா மாறிவிட கூடாது,” என்றார் தாகூர்.
சுதந்திரம் கிடைக்கும் வரை காந்திவழி சென்ற நேருவும், காங்கிரசும், 1947க்கு பின் இந்த கொள்கையில் தாகூரையே பின்பற்றியது.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் போது தேசிய மொழி ஹிந்தியா சம்ஸ்கிருதமா என்ற ஒரு வாதம் நடந்தது. சம்ஸ்கிருதத்தை ஆச்சாரமான ஹிந்துக்கள் தான் ஆதரித்தனர் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அம்பேத்கரும், நாம் மறந்துவிட்ட முஸ்லிம் ஒருவரும் சம்ஸ்கிருதமே கல்வியிலும் பாண்டித்தியத்திலும் தொன்மை மரபுள்ள மொழி, ஹிந்தி ஒரு கடைத்தெரு பேச்சு மொழி மட்டுமே, ஹிந்தியில் சட்ட நூல்கள், அறிவியல் நூல்கள் ஏதுமில்லை என்று பறைசாற்றினர். ஹிந்தியை தாய்மொழியாய் கொண்டவர்கள் மற்ற தாய்மொழி பேசுவோரை இரண்டாம் தர குடிமகன்களாக நடத்தும் நிலைமை நாட்டில் அமையக்கூடாது என்றும் அவர்கள் வாதாடினர். சம்ஸ்கிருதம் அனைவருக்கும் கற்க கடினம் என்பதால் அதில் அந்த பிரச்சனை இல்லை என்றனர்.

தேசிய மொழி விவகாரம் அரசியலமைப்பு பேரவையில் வாக்கெடுப்பில் முடிந்தது. இரண்டு மொழிகளும் சமமாக வாக்குகள் பெற்றன. தன் தலைமை வாக்கை ஹிந்தி மொழிக்கு ராஜேந்திர பிரசாத் அளித்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியானது.

நணபர் பாலாஜி தண்டபாணி இந்த தகவலை அனுப்பினார்.

அன்புள்ள கோபு, அரசியலமைப்பு பேரவையில் சம்ஸ்கிருதத்திற்கு குரல் கொடுத்த முஸ்லிம் மேற்கு வங்காளத்தின் நிஸாமுதின் நஸிருத்தின் அகமது. அவையில் அவர் சொன்னது:

“ஒரு மொழியை தேர்ந்தெடுத்தால் உலகின் மிக சிறந்த மொழியை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவுக்கு வெளியே சம்ஸ்கிருதத்திற்கு எத்தனை மரியாதை இருக்கிறது என்பதை இந்தியர்கள் அறியாதது மிகவும் வருத்தமான நிலைமை. ‘சம்ஸ்கிருதம் ஈடு இணையில்லாத செல்வமும் தூய்மையும் கொண்ட மொழி,’ என்று டபிள்யு. சி. டெய்லர் கூறுகிறார். இதுவே உலகின் அதன் அந்தஸ்துக்கு சான்று.”

இன்னுமொரு தகவல். மதறாஸ் மாநில உறுப்பினர் டாக்டர் பி. சுப்புராயன், லத்தீன எழுத்தமைப்பில் (தேவநாகரி அல்ல) ஹிந்தி மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்று வாதிட்டார்!

ஒரு நாட்டை ஆளும் வர்கங்கள் தங்களை சிறப்பித்தும் தமக்கு முந்தியவரை தாழ்த்தியும் பேசுவது உலக வழக்கம்.
நம் பல்வேறு பிரச்சினைகளுக்கு 1947ல் பெற்ற சுதந்திரத்தின் பின்னும் ஆங்கிலேயர்களை பழி சொல்கிறோம். ஆனால் அவர்கள் செய்த மிகச்சிறந்த நற்காரியங்களை விட்டுவிடுகிறோம். நம் ஆட்சி முறை, சட்டம், நிர்வாகம், நீதித்துறை, கல்வித்துறை, மருத்துவம், ராணுவம் என்று அனைத்தும் ஆங்கில ஐரோப்பிய தழுவல்களாக வைத்துக்கொண்டு இந்த மாதிரி வாதங்கள் அபத்தமானவை.

நாம் மட்டும் செய்யவில்லை. எல்லா நாடுகளும் செய்கின்றன

குறிப்பு, ஏப்ரல் 29, 2020. திரு “ஒத்திசைவு” ராமசாமி அவர்களின் விளக்கத்தை இந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் இன்று படித்தபின், மேற்கு வங்காள உறுப்பினரின் பெயர் நஸிருத்தின் அகமது (நிஸாமுத்தின் அல்ல) என்று தெரிந்து கொண்டேன். திருத்தி விட்டேன்.

அவரது மிக விவரமான பின்னூட்டத்தை படிக்குமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

சுட்டிகள்