Wednesday, 8 April 2015

ளகர ரகளை - மராட்டி குஜராதி ல ள

புசாவள் ரயில் நிலையம்

குஜரத் செல்லும் போது நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில்வண்டி புசாவள் என்ற ஊரில் நின்றது. அப்பொழுது, ரயில் நிலையத்தில் மேலுள்ள படம் எடுத்துக்கொண்டேன்.

ரயில் பலகையில் ஊர் பெயர் ஹிந்தி மொழியில் இருமுறை எழுதியுள்ளது போல் தெரியும். ஆனால் கடைசி எழுத்தில் வித்தியாசம் காணலாம். மேலே பெரிய எழுத்தில் புசாவள் भुसाव என்றும், கீழே சின்ன எழுத்தில் புசாவல் भुसाव என்றும் ஊள்ளன. மேலே இருப்பது மராட்டி, கீழே இருப்பதுதான் ஹிந்தி மொழி. இரண்டு மொழிகளுக்கும் தேவநாகரியே லிபி.
மராட்டி (மராத்தி அல்ல) மொழியில் ல, ள இரண்டும் உள்ளன. பொதுவாக ஸமஸ்கிருதம் வழி வந்த ஆரிய மொழிகளில் ல என்ற மட்டுமே உள்ளது. திராவிட மொழிகளில் ல, ள இரண்டும், தமிழிலும் மலையாளத்திலும் ழகரமும் உள்ளன.

தமிழில் நாம ளகரத்தில் சரளமாக சொல்லும் பல ஸமஸ்கிருத மரபு சொற்களை, ஆரிய மொழிகளில் லகரத்தில் தான் சொல்லுவர். “காளி” தேவி ஒரு எடுத்துக்காட்டு. அவளை “காலி” என்றே வடக்கிந்தியாவில் அழைப்பர். லிபியில் கூட ल மட்டுமே உண்டு.

ஆனால் மராட்டி மொழியில் ளகரத்திற்கு லிபியில் தனி எழுத்துள்ளது – ळ. ஹிந்தி மக்கள் லகரமாய் சொல்லும் பல சொற்களை மராட்டியில் இயல்பாக ளகரமாய் உச்சரிப்பதுண்டு. ஒரு சில மராட்டிய சொற்களை பார்த்தால் ளகர ரகளை செய்து ஹிந்திக்காரரை வஞ்சிக்கின்றனரொ மராட்டியர் என்று எண்ணத்தோன்றும். இல்லையேல் கோகுல் गोकु தன் பெயரை கோகுள் गोकु என்று ஏன் எழுதவேண்டும்? இதை பஹூர் பஸ்நிலைய பலகையில் நிதி கொடுத்தோர் பட்டியல் பலகையில் பார்த்தேன்!

கோகுல் गोकु ஏன் கோகுள் गोकु ஆனார்?
அங்குள்ள தமிழருக்கு இது பழகியிருக்கும். 2011இல் அஜந்தா எல்லோரா கலை உலா சென்ற போது புசாவளில் ரயில் இறங்கி, ஔரங்காபாதிற்கு பஸ் ஏறி நால்வர் சென்றோம். பஸ் பலகையில் சிள்ளோட் (சில்லோட் அல்ல) என்ற ஊர் பெயரை பார்த்தேன். அதேபோல் ஜள்காவோன் (ஜல்காவோன் அல்ல) என்று ஒரு ஊர். ஸம்ஸ்கிருதத்தில் ஒரே ஒரு ரிக் வேத ஸ்லோகத்தில் இந்த ளகரம் இருப்பதாகவும் (அக்னிமீளே புரோஹிதம் என்று தொடங்கும் ஸ்லோகம்), மராட்டியில் ள பரவலாக உண்டு என்பதும் ஆசான் நகுபோலியன் பாடம் நடத்தும் நேரம் அடிக்கடி கூறுவார்.
मळवली மளவலீ - லள இரண்டும் பெயரில் உள்ள ஊர்
மராட்டி மொழி இப்படியென்றால், குஜராதி மொழியிலும் ளகரம் உள்ளது. குஜராதி மொழியும் ஆரிய மொழி ஆனால் அதற்கு குஜரதி லிபி இருப்பதால், தேவநாகரியில் எழுதுவதில்லை. குஜராதி மொழியோ லிபியோ எனக்கு தெரியாது ஆனாலும், நான் அங்கிருந்த பத்து நாட்களில் அவ்வப்பொழுது பலகைகளை பார்த்து படிப்பதுண்டு. ஆங்கிலத்தோடும் ஹிந்தியோடும் ஒப்பிட்டால் எளிதாய் புரிந்துவிடும். தேவநாகரி லிபியின் வழித்தோன்றலே குஜராதி லிபி. தோல்கா என்ற நகருக்கு நண்பர் ரவிசங்கருடன் சென்ற போது, ஒரு மசூதி சுவரில் தோல்கா દૉલ્કા என்றும் பஸ்நிலையத்தில் தோள்கா દૉળ્કા என்றும் எழுதியிருந்ததை பார்த்தேன். લ ળ குஜராதியில் ல ள.

மசூதி சுவரில் ”தோல்கா” દૉ કા

பஸ்நிலையத்தில் தோள்கா દૉ કા 

ஹிந்தி மராட்டி குஜராதி பெயர் பலகைகளை பற்றி தனியாக எழுதவேண்டும். அவற்றின் எழுத்துவித்தைகளை பாணினி பார்த்தால் புரண்டு புரண்டு அழுவார். அவர் தூதாண்டிகோல் கொடுக்க, தொல்கப்பியர் அகத்தியர் இந்திரர் காத்யாயனர் என்று இலக்கண நூலாசிரியரெல்லாம், வீரமாமுனிவரையும் மதச்சார்பின்மைக்கு சேர்த்துக்கொண்டு, மணிக்கொருவர் அழலாம்.

(இப்படி இந்திய மொழிகளை அவற்றின் தற்கால லிபியில் எழுதும் வசதி செய்து, அற்புதமாக என்.ஹெச்.எம் ரைட்டர் NHM Writer மென்பொருளை தயாரித்த கிழக்கு பதிப்பகத்திற்கும், அவர்களது மென்பொருள் பொறியாளருக்கும், நாத்திக பிரம்மா பத்ரி சேஷாத்ரிக்கும் மனமார்ந்த நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்து).

பின் குறிப்பு 1

ரீச் நிறுவன பரிசு விழாவில் பரிசு பெற்ற கிரீத் மன்கொடியை, எனக்கு ரவிசங்கர் அறிமுகம் செய்தார். கோபு பல்லவ கிரந்தம் படிப்பார் என்று ஷாஷ்வத்தும் ஷியாமும் அவருக்கு சொன்னார். மன்கொடி என்னை பிராமி படிக்க சொன்னார். பிராமி படித்தால் எல்லா இந்திய லிபியும் எளிது என்றார். கற்கவேண்டும்.

பின் குறிப்பு 2

இன்று செய்தியில் மகாராஷ்டிரத்தில் இனிமேல் எல்லா சினிமா அரங்கிலும் ஒரு மராட்டி படம் நிச்சயம் திரையிடவேண்டும் என்று மாநில அரசு கட்டளை அலசப்பட்டது. எல்லா வடக்கிந்தியரையும் ஹிந்தி பித்தராய் ஹிந்தி அரக்கராய் நினைக்கும் சில தமிழருக்கு இது அதிர்ச்சியாக இருக்கும். சில வருடங்களுக்கு முன் ராஜ் தாக்கரே நடத்தும் மகாராஷ்டிர நவநிர்மண் சேனா கட்சியினர், பிஹாரிலிருந்து உத்திர பிரதேசத்திலிருந்தும் வேலைத்தேடி வந்தவரை, ஒழுக்கமில்லாதவர் என்று குற்றம் சாட்டி அவரவர் சொந்த மாநிலத்திற்கு விரட்ட முயன்றது நினைவிருக்கலாம். “வடக்கிந்தியரே வெளியேறு” என்ற தாக்கரே முழங்கினார். “ஓகோ நீங்கள் வடக்கிந்தியர் இல்லையா? அவர்கள்தான் வடக்கிந்தியாரா?” என்று தொலைகாட்சிகளில் தமிழர் பலர் வியந்ததும் குழம்பியதும் நினைவிருக்கலாம். இதை மும்பைவாழ் தமிழ் நண்பர் கணேஷிடம் சொன்னபோது அவர் தமிழரின் வியப்பை நினைத்து அதிர்ந்து போனார். ஒருகாலத்தில் தென்னிந்தியர் அனைவரையும் மதறாசி என்று வடக்கிந்தியர் அழைப்பதையும், நம்மில் ஹிந்தி தெரியாதவரை தேசதுரோகி போல் சிலர் நினைத்ததும் நடத்தியதும் 1990க்கு முன் பிறந்தவருக்கு நினைவிருக்கலாம்.
பயணம் தெளிவுக்கு ஒரு வழி.

தொடர்புடைய பதிவுகள்

1. தமிழில் பிற மொழி ஒலியும் எழுத்தும்
2. Caldwell on Dravidian and Munda languages
3. Deciphering grantha 

No comments:

Post a Comment