Wednesday, 11 November 2015

செல்வம் உடல்நலம் சுகாதாரம் அன்பு அமைதி சமத்துவம் பெருகி

மேட் ரிட்லி (Matt Ridley) மூன்று உயிரியல் நூல்களும் ஒரு பொருளியல் நூலும் எழுதியுள்ளார். (நான்கையும் படித்துள்ளேன்). சமீபத்தில் இரு துறைகளையும் கலந்து எல்லாவற்றின் பரிணாம வளர்ச்சி என்று ஒரு நூல் எழுதியுள்ளார் (இதை நான் இன்னும் படிக்கவில்லை). இவர் லண்டன் எக்கானமிஸ்ட் பத்திரிகையின் முன்னார் அறிவியல் பகுதி ஆசிரியர். இங்கிலாந்தின் துரைமார்களில் ஒருவர், ராஜசபை (House of Lords) அங்கத்தினர். இவர் நிர்வகித்த ஆர்.பி.எஸ் வங்கி 2008 பொருளாதார சரிவில் திவாலானது. நிலக்கரி சுரங்க அதிபர், வயல்களும் வைத்துள்ளார். பிரபல அமெரிக்க ஆங்கிலேய நாளிதழ்களில் கட்டுரை எழுதி வருகிறார், இவற்றை நான் அவரது வலை தளத்தில் படித்து வருகிறேன்.

[Rational Optimist என்பதை தமிழில் “பகுத்தறிவு உகமையர்” என்று எழுதவேண்டும். ஐயோ! ஸ்டாலினிஸ்ட், மார்க்ஸிஸ்ட் போல ரிட்லியிஸ்ட், சைமனிஸ்ட் என்று எதோ பெயர் சூட்டிக்கொள்ளவேண்டும் போல]

நவம்பர் ஆறாம் தேதி, கனடா தேசத்து மங்க் பல்கலைகழக்கத்தில் மனிதகுலத்தின் எதிர்காலத்தை பற்றி ஒரு விவாதத்தில் இவர் பேசியதன் கட்டுரை வடிவத்தை தன் வலைதளத்தில் ஏற்றியுள்ளார். அதை நான் தமிழாக்கி கீழே தந்துள்ளேன்.

------------------------
அமெரிக்க சினிமா நடிகர் இயக்குனர் உடி ஆலன் ஒரு முறை சொன்னார், “மனிதக்குலம் போக இரண்டு பாதைகள் விரிந்துள்ளன. ஒரு பாதையில் சென்றால் ஓயா துன்பமும் துயரமும். மற்ற பாதையில் சென்றால் இனமே அழிந்து விடும். நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் அறிவை பெற (இறைவனை) வேண்டுவோம்.”

இப்படித்தான் எதிர்காலத்தை பற்றி பலரும் பேசுகிறார். என் இளமையில் எதிர்காலம் இருண்டுகிடந்தது. மக்கட்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை; பஞ்சம் அச்சுறுத்தியது; பூச்சிமருந்துகள் புற்றுநோய் வளர்த்தன; பாலைவனங்கள் வயல்களை விழுங்கின; மண்ணெணை கிணறுகள் வற்றத்தொடங்கின; காடுகள் மறைந்தன; அமில மழை பொழிந்தது; ஓசோன் மண்டலத்து ஓட்டை வீங்கியது; என் விந்து அளவு குறைந்தது; அணு ஆயுதங்களால் அண்டமே அழிவின் வாசலில் அஞ்சித்தவித்தது.

மிகையாகச் சொல்லவில்லை. 1960களில் பொருளியல் வல்லுனர் ராபர்ட் ஹெய்ல்பிரோனர், ”மனிதக்குலத்தின் எதிர்காலம் மங்கும்; தாங்கொணா துயரம் தாண்டவமாடும்” என்று ஒரு நூலில் கட்டியங்கூறினார்.

பத்தாண்டுக்கு பின் நான் இவை எல்லாமே பூச்சாண்டி கதைகள் என்று உணர்ந்தேன். துயர்மல்கும் எதிர்காலம் இவ்வறிஞர் பயந்தபடி உதிக்கவில்லை. மக்களின் சீரும் சிறப்பும் பெருகிவருகிறது. வாழ்க்கை வளமும் நலமும் தினமும் தினமும் சிறக்கிறது.

  1.  கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம், ஒரு நாளுக்கு ஐந்து மணிநேரம் வளர்கிறது!
    (அதாவது ஐம்பதாண்டுகாலத்தில் சராசரி மனிதன் ஆயுட்காலம் 50*365*5=91250 மணிநேரம் நீண்டுள்ளது. இது  3802 நாட்களாகும் (91250 / 24). அதாவது பத்து ஆண்டுகள் ஐந்து மாதங்கள் நீண்டுள்ளன. 1965 வாழ்ந்த சராசரி மனிதனினை விட, 2015 வாழ்பவர் பத்து ஆண்டுகள் ஐந்து மாதங்கள் அதிகம் வாழ்வார்!)
  2. பிறப்பிலேயே இறக்கும் சிசுக்களின் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக (66 சதவிகிதம்) குறைந்துள்ளது
  3. மலேரியா நோயால் இறப்பவரின் எண்ணிக்கை பதினைந்து ஆண்டில் அறுபது சதவிகிதம் குறைந்துள்ளது
  4. எண்ணை கப்பல்களில் சிந்தி கடலை பாழாக்கும் எண்ணை 1970 முதல் 90 தொண்ணூறு வதவிகிதம் குறைந்துள்ளது
  5. கைப்பேசி (செல் ஃபொன்) மூலம் பேசலாம், அஞ்சல் அனுப்பலாம், படம் பார்க்கலாம், வரைபடம் பார்த்து வழிசெல்லலாம், அவரவர் கருத்தை உலகுக்கு பறைச்சாற்றலாம்.

மோசமாவன என்னென்ன? போக்குவரத்து நெரிசல், உடல் பருமன். இவை செல்வத்தால் வரும் பிரச்சினைகள், வறுமையாலும் பஞ்சத்தாலும் அல்ல.

ஒரு விசித்திரம் என்னவென்றால் பல முன்னேற்றங்கள் மெதுவாக வளர்வதால் செய்தியில் அடிபடுவதில்லை. விபத்துகளே செய்தியின் சாராம்சம். விமானம் விழுந்தால் செய்தி. சிசு மரணங்கள் எண்ணிக்கையில் விழுந்தால் செய்தி இல்லை.

வருடா வருடம் சராசரி மனிதனின் செல்வம் பெருகி, உடல்நலம் பெருகி, அறிவும் பெருகி, சுகாதாரம் பெருகி, அன்பும் பெருகி, சுதந்திரம் பெருகி, பாதுகாப்பு பெருகி, அமைதி பெருகி சமத்துவம் பெருகி வாழ்கிறான்.

சமத்துவம் பெருகியா?

ஆம் உலகெங்கும் சமத்துவம் வளர்கிறது. அதிவேகமாக. ஏன்? செல்வ நாடுகளில் செல்வந்தரின் செல்வம் வளரும் வேகத்தைவிட ஏழை நாடுகளில் ஏழைகளின் செல்வம் வேகமாக வளர்கிறது.

சமீபத்தில் பொருளாதாரம் வளர்ந்துள்ள ஆசிய நாடுகளை போல், ஆப்பிரிக்க நாடுகளில் பொருளாதாரம் அமோகமாக வளர்கிறது. 2008 முதல் மொசாம்பிக் நாட்டு பொருளாதாரம் 60% வளர்ந்துள்ளது. எத்தியோப்பிவின் பொருளாதாரம் வருடா வருடம் பத்து சதவிகிதம் வளர்கிறது.

1945 இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், 2014 வரை, ஒரே ஒரு முறை தான் உலகப்பொருளாதாரம் சரிந்துள்ளது. 2009இல் ஒரு சதவிகிதம் சரிந்து பின் ஐந்து சதவிகிதம் வளர்ந்தது. வளர்ச்சி தொடர்வது மட்டுமின்று, அது வேகத்தில் கூடுகிறது

வருவதை எண்ணி வளரும் என் நம்பிக்கை, வரலாற்றை வைத்து மட்டும் போடும் கணக்கல்ல, வளர்ச்சியை இயக்கும் காரணத்தையும் வைத்தே போட்ட கணக்கு.

சிந்தனையும் செயல்திட்டங்களும் கலந்து புணர்ந்து புதுமைகளை உருவாக்கின்றன. அதனால் மேலும் சிந்தனைகள் பிறந்து கலந்து புணர்ந்து புதுமைகளை பிறப்பிக்கின்றன. இது வற்றாத நதி. மனிதரின் அறிவே இந்த நதிமூலம். அவை கலந்து புணரும் வழிகள் எண்ணற்றவை.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தோன்றும் புதுமைகளை நம்பும் காலத்தை கடந்துவிட்டோம். சிந்தனை புணர்ச்சியின் வேகத்தை இணையதளம் மேலும் ஊக்குவிக்கும்.

வேப்பிங் என்று ஒரு புதுமை. எலக்ட்ரானிக் மின்னணு சிகரெட். இங்கிலாந்தில் வேப்பிங் வந்த பின் முப்பது லட்சம் மக்கள் புகைபிடிப்பதை கைவிட்டனர். புகைப்பழக்கத்தை கைவிட நாம் படைத்த சாலச் சிறந்து யுக்தி, இதுவே.

ரசாயனமும் மின்னணுவியலையும் அறிந்த ஹான் லிக் என்ற சீனரால் இது படைக்கப்பட்டது.

ஒரு கேள்வி எழலாம். இந்த முன்னேற்றமெத்தால் சுற்றுச்சூழல் சீரழிகிறதல்லவா? இல்லை. மாறாக, மாசுகள் குறைந்து பசுமை வளர்கிறது. நீர் நிலைகள் சுத்தமாகின்றன, காற்று மாசுப்பொருட்கள் குறைந்துள்ளன, காடுகள் வளர்கின்றன, வன விலங்குகள் பெருகிவருகின்றன.

செல்வமிகை நாடுகளில் சுற்றுச்சூழல் வேகமாகவே தூய்மையாகிறது. ஏழை நாடுகளிலே தான் மாசு கேடுகள் அதிகம்.

மக்கட்தொகை? என் வாழ்நாளில் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இரண்டு சதவிகிதத்திலிருந்து ஒரு சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆப்பிரிக்காவிலும் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்துவருகிறது. இருபதாம் நூற்றாண்டில் உலக மக்கட்தொகை நான்கு மடங்காக பெருகியது. இருப்பத்தோராம் நூற்றாண்டில் அது இரட்டிக்குமா என்பதே சந்தேகம். ஐநா சபை மக்கட்தொகை 2080இல் வளராமல் நிற்கும் என்று கருதுகிறது.

போரும் நோயும் பஞ்சமும் பெருகியே மக்கட்தொகை தடுமாறும் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் மால்தூஸ் பயமுறுத்தினார். அவ்வாறின்றி, கல்வி செல்வம் சுகாதாரம் பெருகுவதால் மக்கட்தொகை வளர்ச்சி குன்றும். இது ஒரு அழகான எளிமையான விவரம். சிசுப்பருவத்தில் குழந்தைகள் சாகாமலிருந்தால் மக்கள் சின்ன குடும்பங்களோடு குழந்தைபேறை நிறுத்திவிடுகிறார்கள்.

மக்கட்தொகை வளர்ச்சி சுருங்க, வயல்களின் விளைச்சலும் பெருக, பஞ்சம் தவிர்ப்பது எளிமையாகிறது. ஐம்பதாண்டுக்கு முன் தேவைப்பட்ட நிலத்தில் பாதியில் இன்று 68% அறுபத்தெட்டு சதவிகிதம் அதிகமாக பயிர் வளர்க்க முடிகிறது. மீதி நிலத்தில் இயற்கையாய் காடு வளரலாம்.

கனடா நாட்டு ஒண்டாரியோ மாநிலத்தின் பரப்பளவில் உலகத்துக்கு போதுமான பயிர் வளர்த்து, மற்றதை இயற்கை நிலமாக விட்டுவிடலாம்.

பூமியின் பசும் போர்வை  வளர்கிறது. விண்ணிலிருந்து எடுக்கும் படங்களில் முப்பது வருடதுக்கு முன்னை விட இன்று பதிநான்கு சதவிகிதம் அதிகம் பசும் போர்வை விரிந்துள்ளதை காட்டுகிறது.

ஒரு வேளை நான் மிகையாக சொல்கிறேனா? நூறு மாடி கட்டடக்கூரையிலிருந்து குதித்துவிட்டு தரையில் விழுந்து சாகும் முன் “எனக்கு ஒண்ணும் ஆகவில்லை” என்னும் முட்டாள் ஜம்பத்தில் பேசுகிறேனா? இல்லை.

இந்த விவாததில் திருப்புமுனை பற்றி பேச்சு எழும். இந்த தலைமுறை தன் பெற்றோரை விட மோசமாக இருக்கும் என்று எதிர்கட்சியினர் சொல்வார்கள்.

ஒவ்வொரு தலைமுறையும் இப்படி பேசுகிறது. மெக்காலே சொன்னது : “ஒவ்வொரு காலத்திலும், அது வரை முன்னேற்றத்தை கண்டவரும், அடுத்த தலைமுறையில் முன்னேற்றம் ஏற்படாது என்று நம்புகின்றனர். நாம் ஆகவே முடியாது என்று நிரூபிக்க முடியாது. ஆனால் இதை தான் நம்முன் வந்தவர் அனைவரும் சொல்லிவந்துள்ளனர்.”

இறந்த காலத்திலிருந்து நல்ல நினைவுகளையும் எதிர் காலத்திலிருந்து பூச்சாண்டி ஆரூடங்களையும் வடிகட்டி எடுக்கிறோம்.

நம் தலைமுறைக்கு வரலாற்றில் ஈடில்லை என்பது, ஒரு விசித்திர கர்வம்.
மீண்டும் மெக்காலேவை முன்மொழிகிறேன் : “எந்த கொள்கையின் அடிப்படையில், கடந்த காலத்தில் முன்னேற்றமே தெரியும் போது, எதிர்காலத்தில் சீரழிவை மட்டும் எதிர்பார்ப்பது?”

குறிப்பு
“நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது” என்ற தலைப்பில் எழுதியிருக்கவேண்டும்.

தொடர்புள்ள கட்டுரைகள்


No comments:

Post a Comment