Monday, 30 May 2022

அசோகன் கல்வெட்டு - கடை நான்கும் தௌலி தம்மலிபியும்

தௌலி கல்வெட்டு 
photo: VK Sreenivasan

மௌரிய அரசன் சம்ராட் அசோகனின் கல்வெட்டின் தமிழாக்கம். இந்த கட்டுரை இரண்டாம் பகுதி, முதல் பகுதியை இங்கே காணலாம்

தம்மலிபி 11

தேவானம்பியே பியதஸி லாஜ  ஏவம் ஆஹ | நாஸ்தி ஏதாரிஸம் தானம் யாரிஸம் தம்மதானம் தம்ம ஸம்ஸ்தவோ வா தம்ம ஸம்விபாகோ வா தம்ம ஸம்பந்தோ வா | தத இதம் பவதி தாஸ படகம்ஹி ஸம்யப்ரதிபதி மாதரி பிதரி ஸாது ஸுஸ்ருஷா மிதா-ஸஸ்துத-நாதிகானாம் பாஹ்மன-ஸ்ராமணானாம் ஸாது தானம் ப்ராணானம்  அநாரம்போ ஸாது | ஏத வாதவ்யம் பிதா வா புதேன வா பாதா வா மிதாஸஸ்துதநாதிகேநவா ஆவ படிவேஸியேஹி   இத ஸாது இத கதவ்யம் | ஸோ ததா கரும்  இலோகசஸ ஆராதோ ஹோதி பரத ச அநந்தம் புண்யம் பவதி தேந தம்ம்தானேன ||

தம்மலிபி 11 தமிழாக்கம்

தேவானம்பிய பியதசி ராஜன் இதை செப்பினான். தம்மதானத்தை போல் தம்மத்தை அறிவது போல் தம்மத்தை மற்றவருக்கு அறிவுருத்துவது போல் தம்மத்தோடு சம்மந்தத்தை போல் வேறு ஒரு தானமும் இல்லை. இதனால் அடியாட்களிடம் நல்ல நடத்தையும்; மாதா பிதாவிடம் சேவையும்; நண்பருக்கும் தெரிந்தவருக்கும் பிராமணருக்கும் சமணருக்கும் நல்ல தானம் வழங்குவதும் வளரும். மிருகவதை நின்றுபோகும். இதனால் மகனாலும் தந்தையாலும் சகோதரனாலும் நண்பனாலும் தெரிந்தவராலும் ”இது நல்லது இது செய்யத்தக்கது என்று சொல்லப்படவேண்டும். இப்படி சொன்னால், இந்த தம்மதானத்தால் இந்த லோகத்திலும் பரலோகத்திலும் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்

சொற்பொருள் விளக்கம்

கதவ்யம் = கர்த்தவ்யம் = செய்யத்தக்கது
வாதவ்யம் = சொல்லப்படவேண்டும்
இலோக = இந்த லோகத்தில்
அநந்த = அளவில்லா
பரத = பர லோகத்தில்
தம்மதானேன = தம்மதானத்தால்


தம்மலிபி 12

தேவானம்பியே பியதஸி ராஜ  ஸவ பாஸந்தானி ச பவஜீதானி ச கஹஸதானி ச பூஜயதி தானேன ச விவிதாய பூஜாய பூஜயதி நே | நா து ததா தானம் வா பூஜா வா தேவாநாம்பியோ மஞ்ஞாதே யதா கிதி ஸார-வடீ அஸ ஸவபாஸம்டானம் | ஸாரவடி து பஹுவிதா தஸ து இதம் மூலம் ய வசிகுதி கிம்தி ஆத்ப-பாஸாண்ட-பூஜ வா, பர-பாஸம்ட-கரஹா வா நோ பவே அப்ரகரணம்ஹி லஹூகா வா அஸ தம்ஹி தம்ஹி பரகரணே | பூஜேதயா து ஏவ பரபாஸம்ட தேன தேன ப்ரகரணேன | ஏவம் கரும்  ஆத்பபாஸாம்ட ச வடயதி  பர பாஸம்டஸ உபகரோதி தத் அஞாதகரோதோ ஆத்பபாஸாம்ட ச சணதி பர பாஸம்டஸ ச பி அபகரோதி | யோ ஹி கோசி  ஆத்பபாஸாம்ட பூஜயதி பர பாஸம்டஸ வா கரஹதி ஸவம் ஆத்பபாஸாம்டபதீயா கிம்தி ஆத்பபாஸாம்டம் பாடதரம் உபஹநாதி | த ஸமவாயோ ஏவ ஸாது கிம்தி அஞமஞஸ தம்மம் ஸ்ருநாரு ச ஸ்ஸும்ஸேர ச | ஏவம் ஹி தேவாநம்பியஸ இசா கிம்தி ஸவபாஸம்ட பஹுஸ்ருதா ச அஸு கலாணாகம ச அஸு | யே ச தத்ர தத்ர ப்ரஸம்நா தேஹி வதவ்யம் தேவநம்பிய நோ ததா தானம் வா பூஜாம் வா மம்ஞதே  கிம்தி ஸாரவடீ ஸர்வ-பாஸடானம் | பஹுகா ச ஏதாய அதா வியாபாத  தம்மமஹாமாதா ச இதீஜகமஹாமாதா ச வசபூமிகா ச அஞே ச நிகாயா |  அயம் ச ஏதஸ பல ஆத்ப-பாஸம்ட-வடீ ச ஹோதி தம்மஸ ச தீபனா ||

சொற்பொருள் விளக்கம்

பாஸாம்ட = பார்ஷத = மதம்
ஆத்பதபாஸாம்ட = ஆத்ம பார்ஷத = தன் மதம்
பர பாஸம்ட = பர பார்ஷத = பரமதம்
ஸாரவடீ = ஸாரவிருத்தி

தம்மலிபி 12 தமிழாக்கம்

தேவானம்பிய பியதசி ராஜன் அனைத்து மதங்களையும் முனிகளையும் இல்லறவாசிகளையும் தானங்களாலும் பலவிதை பூஜைகளாலும் கௌரவம் செய்கிறான். தேவாநம்பியன் தானத்தையும் பூஜையையும் விட பற்பல மதங்களின் ஸாரவிருத்தியை அதிகம் மதிக்கிறான். ஸாரவிருத்தி பலவகைப்படும்; ஆனால் தகுந்த காரணமின்றி தன் மதத்தை அதிகம் புகழ்ந்து பர மதத்தை அதிகம் இகழ்வதால் ஸாரவிருத்தி வளராது. பரமதங்களை பலவிதமாய் மரியாதை செய்யவேண்டும். தன் மதத்தை புகழ்வோர் தங்கள் மதத்தை பிராச்சாரம் செய்து பெரிதாக்கி மற்ற மதத்தை இழிவு படுத்தினால் அது தங்கள் மதத்தையும் இழிவுபடுத்துகிறது. ஒரு மதத்தார் மற்றொரு மதத்தார் சொல்வதை கேட்டு இழிவு படுத்தாமல் மதிக்கவேண்டும். அனைத்து மதங்களும் கல்வி பெருகி கல்யாணமாய் நடப்பதுவே தேவாநம்பியனின் விருப்பம். இவ்விருப்பம் நிறைவேற தம்ம மஹாமாத்திரரும் ஸ்த்ரீமஹாமாத்திரரும் விரஜபூமிகரும் மற்றும் பல அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் அவரவர மதங்களும் பெருகும் தம்மமும் வளரும்.


தம்மலிபி 13

அடவஷாபிஷிதஷா தேவாநம்பியஸ பியதஸினே லாஜினே கலிக்யா விஜிதா | தியடா மிதே பாணஷதஷஹஸே  யே தபா அபவுதே ஷதஸ்ஹஹஸ்மிதே தத ஹதே பஹு தாவதகே வா மடே | ததோ பசா அதுனா லதேஷு கலிக்யேஷு திவே தம்மவாயே தம்மகாமதா தம்மானுஷதி சா தேவாநம்பியஸா | ஸே அதி அனுஷயே     தேவாநம்பியஸா விஜிநிது கலிக்யாநி | அவிஜிதம் ஹி விஜிநமநே எ ததா வத வா மலநே வா அபவஹே வா ஜனஷா ஷே பாட வேதனியமுதே குலுமுதே சா தேவாநம்பியஸா | இயம் பி சு ததோ குலுமததலே தேவாநம்பியஸா யே ததா வஷதி பாபன வா ஷாமனா வா அனே வா பஸம்ட கிஹிதா வா யேஷு விஹிதா ஏஷ அகபுதி ஷுஷுஷா மாதாபிதி ஷுஷுஷா கலு ஷுஷுஷா மித சம்துத ஸஹாய நாதிகேஷு தாஷபடகஷி ஷம்யபடிபதி திடபதிதா தேஷம் ததா ஹோதி உபகாதே வா வதே வா அபிலதாநாம் வா விநிகாமனே | யேஷம் வா பி ஷுவிஹிதாநாம் ஸினேஹே விபஹினே ஏதாநாம் மிதஸம்துத ஸஹாய நாதிக்ய வியஷனம் பாபுநாதி ததா ஸே பி தானமேவ உபகதே ஹோதி |  படிபாகே சா ஏஷ ஸவமனுஷாநம் குலுமதே சா தேவாநம்பியஸா | நாதி சா ஸே ஜனபதோ யதா நதி இமே நிகாயா ஆநதா யோனேஷு பம்ஹனே சா ஷமனே சா | நதி சா குவாபி ஜனபதஷி யதா நதி மனுஷான ஏகதலஷி பி பாஷதஷி நோ நாம பஷாதே | ஸே அவதகே ஜனே ததா கலிங்கேஷு லதேஷு ஹதே சா மடே சா அபவுடே சா ததோ ஷதே பாகே வா ஷஹஷபாகே வா அஜ குலுமதே வா தேவாநம்பியஸா |

யோ பி ச அபகரேயதி க்ஷந்திதவ்யமதே வா தேவாநம்பியஸ யம் ஷகோ க்ஷமநயே | ஸெ ச புனா லதே தேவாநம்பியஸா ஹித ச ஸவேஷு ச அதேஷு அ ஷஷு பி யோஜன ஷதேஷு அத அதியோக நாம யோனலாஜா பலம் சா தேன அம்தியோகேனா சதாலி 4 லாஜனே  துலமயே நாம அம்தெகினே நாம மகா நாம அலிக்யஷுதலே நாம நிசம் சோட பாண்டியா அவம் தம்பபம்நியா ஹேவமேவா | ஹேவமேவா ஹிதா லாஜவிஷவஷி யோன காம்போஜேஷு நாபக நாபபம்திஷு போஜபிதினிக்யேஷு அதா-பாலாதேஷு ஸவதா தேவானம்பியஷா தம்மாமுஷதி அனுவதம்தி |

யத பி துதா தேவானம்பியஸா நோ யம்தி தே பி ஸுது தேவானம்பியஸா தம்மவுதம் விதநம் தம்மானுஸதி தம்மம் அனுவிதியம்தி அனுவிதிஸம்தி சா | யே ஸே லதே ஏதகேன ஹோதி ஸவதா விஜயே பிதிலஸே  ஸே |

கதா ஸா ஹொதி பிதி தம்ம விஜயஸி | லஹுகா சு கோ ஸா பிதி | பாலம்திக்யாமேவா மஹாபலம் மம்நதி தேவானம்பியே | ஏதயே சா அடாயே இயம் தம்மலிபி லிகிதா கிதி புதா பபோதா மெ அஸு நவம் விஜய மா விஜயதவிய மனிஷு ஷயலஷி யோ விஜயஷி கம்தி சா லஹுதம்டதா சா லோசேது தமேவ சா விஜயம மனது யே தம்மவிஜயே ஷே ஹிதலோகிக்ய பலலோகிக்யே | ஷவா   ச கம் நிலதி ஹொது உயாமலதி ஸா ஹி ஹிதலோகிக்ய பலலோகிக்யா ||

சொற்பொருள் விளக்கம்

அடவஷாபிஷிதஷா அஷ்ட வர்ஷ அபிஷிக்த = (பட்ட)அபிஷேகம் நடந்த எட்டாம் வருடம்
கலிக்யா = கலிங்கா
விஜிதா = வென்றான்
ஷதஷஹஸே = ஷத ஸஹஸ்ர = நூறு ஆயிரம்
ஹதம் = கொல்லப்பட்டனர்
லதேஷு கலிக்யேஷு = லப்தேஷு கலிங்கேஷு = கலிங்கம் வென்றபின்
யோனேஷு = யவனதேசம்
யோன லாஜா =  யவன ராஜா
அதியோக நாம யோனலாஜா = அந்தியோகன் எனும் யவனராஜன்
சதாலி லாஜனே = சத்வாரி ராஜன் = நான்கு அரசர்கள்
துலமயே அம்தெகினே மகா அலிக்யஷுதலே = தாலமி அம்திகின் மகா அலிக்யஷு
சோடபாண்டியா = சோழ - பாண்டியர்
தம்பபம்நியா = தாம்ரபர்ணி (இலங்கை)
காம்போஜேஷு = காம்போஜ நாடு
நாபக நாபபம்திஷு = நாபக, நாபபங்க்தி நாடுகள்
போஜபிதினிக்யேஷு = போஜ, பிதினிக நாடுகள்
அதா-பாலாதேஷு = ஆந்திர பாரத நாடுகள்
 
அனுஷய = வருத்தம்
க்ஷந்திதவ்யமதே = மன்னிக்கவேண்டும்
யம் ஷகோ க்ஷமநயே = மன்னிக்க முடிந்தவரை
பிதி = ப்ரீதி = விருப்பம்
லஹுகா = லகு = இலகு = சிறிது
புதா = புத்திரா = மகன்கள்
பபோதா = பிரபௌத்ரா = கொள்ளுப்பேரன்கள் (வம்சாவளியினர்)
கம்தி = க்ஷந்தி = மன்னிபு (கருணை)
லஹுதம்டதா = லகுதண்டதா = சிறு தண்டனை

 

தம்மலிபி 13 தமிழாக்கம்

எட்டாம் ஆட்சி வருடம் தேவானம்பிய பியதசி ராஜன் கலிங்கத்தை வென்றான்.

ஒன்றை லட்சம் ஆட்கள் சிறைபிடிக்கப் பட்டனர். நூறாயிரம் (சதசஹஸ்ரம்) ஆட்கள் கொல்லப்பட்டனர். நூறாயிரம் இறந்துபோனர்.

அதன்பின் தேவானம்பியன் தர்மத்தின்பால் ஈடுபெற்று, தம்மகாரியம் செய்ய, தம்ம அனுசஷ்டிக்க விரும்பினான். கலிங்கத்தை வென்றபின் தேவானம்பியன் வருந்தினான் (அனுஷய).

ஒரு நாட்டை வெல்வதால் வதமும் மரணமும், மனிதர் இடம்பெயர்த்லும் தேவானம்பியனுக்கு பெரும் வேதனை தருகிறது.

அங்கு பிராமணர் சமணர் மன்றத்தினர் கிரகஸ்தர் வாழ்கின்றனர். அவர்களும் முதியவரை மதித்து தாய் தந்தை மதித்து, நண்பர் உறவினர் தெரிந்தவர் (ஞாத) அடிமைகள் (தாச) வேலை ஆட்கள் (ப்ருதக) இவர் அனைவரிடமும் அன்புகொண்டு, நடப்பவர். அவர்களுக்கும் போரினால் மரணமும் உற்றார் உறவினார் சிறைப்பெற்றும் தவிக்கின்றனர். அவர்களின் துன்பகள் தேவானம்பியனுக்கு பெரும் வேதனை தருகிறது.

யவன தேசத்தை தவிர பிராமணர் சமணர் இல்லாத தேசமே இல்லை. ஏதோ ஒரு மன்றத்தில் (சமயக்குழு) சேராத மனிதரும் எங்கும் இல்லை. அவர்கள் துன்பபடக்கூடாது.

ஒருவன் தவறு செய்தாலும் அவனை மன்னிக்க முடிந்தால் மன்னிக்கவேண்டும்.

தேவானம்பியனுக்கு ராஜ்ஜியத்திலுள்ள காட்டுவாசிகளிடமும் இந்த தம்ம வழி அனுதாபத்தோடு கூறப்படுகிறது. அவர்களிடம் தேவானம்பியனின் வருத்தமும் வருந்தினாலும் பலம் குறையவில்லை என்பது கூறப்படுகிறது.

தம்ம விஜயமே தேவானம்பியனால் பெரும் விஜயமாக கருதப்படுகிறது.

அறுநூறு யோஜனைகளுக்கு அப்பால் ஆளும் யவன ராஜன் அந்தியோகனின் நாட்டிலும், அவனை தாண்டி துலமய நாம, அந்தேகின நாம, மகா நாம, அலிகசுதர நாம நான்கு அரசர்களின் நாடுகளிலும், கீழே சோழ, பாண்டிய, தாம்பபண்ணி அரசரின் நாடுகளிலும் தேவானம்பியன் தம்மவிஜயம் வென்றான்.

 

தன் ராஜ்ஜியத்திலும் யோனர், காம்போஜர், நாபகர், நாபபங்க்தியர், போஜர், பிதினிகர், ஆந்திரர், பாரதர் இவர்கள் நாட்டிலும் தேவானம்பியனின் தம்மானுஷஸ்தயம் சென்று கடைப்பிடிக்கப்படுகிறது. தேவானம்பியனின் தூதுவர்கள் செல்லாத நாடுகளிலும் அவனது தம்மலிபி கேள்விப்பெற்றுள்ளது.

 

எங்கும் பெற்ற இந்த தம்மவிஜயம் பிடித்துள்ளது (ப்ரீதி). ஆனால் இது சிறிய ப்ரீதி. அடுத்த உலகில் பெறப்படுவதே பெம் பலன். அதற்காக  தேவானம்பியனின் மகன்களும், பேரன்களும் பின்வருவோரும் படையெடுத்து வெல்லாமல் தம்மவிஜயம் தேடுவதே என் விருப்பம். மீறி படையெடுத்தாலும் கருணை காட்டி சிறுதண்டனைகளையே விதிக்கவேண்டும். அதுவே இந்தலோகத்திலும் பரலோகத்திலும் பலன் தரும்.

 

தம்மலிபி 14

அயம் தம்மலிபி தேவாநம்பியேந பியதஸிநா ராஞா லேகாபிதா | அஸ்தி ஏவ ஸம்கிதேந அஸ்தி மஜமேந அஸ்தி விஸ்ததேந | ந ச ஸர்வம் ஸர்வத கடிதம் மஹாலகே ஹி விஜிதம் பஹு ச லிகிதம் லிகாபாயிஸம் சேவ |  அஸ்தி ச ஏதகம் புந புந வுதம்  தஸ தஸ அதஸ மாதூரதாய கிம்தி ஜனோ ததா படிபாஜேத | தத்ர ஏகதா அஸமாதம் லிகிதம் அஸதேஸம் வா ஸசாய காரணம் வா அலோசேத்பா லிபிகராபரதேன வா ||

சொற்பொருள் விளக்கம்

ஸம்கித = ஸம்க்ஷிப்தேந = சிறிது
மஜம = மதயமே = மத்தியமாகவோ
விஸ்தத = விஸ்த்ரத = நீளமாகவோ
= இல்லை
ஸர்வம் = எல்லாம்
ஸர்வத = ஸர்வத்ர = எங்கும்
புநபுந வுதம் = புந புந உக்தம் = மீண்டும் மீண்டும் கூறப்பெற்றது
மாதுரதாய = மாதுர்யதாய = இனிமையானவை      
சங்க்யயா ஆலோச்ய = ஆழ்ந்த சிந்தித்த பின்பு
லிபிகார அபராதேன = எழுத்துப்பொறித்தவன் பிழையால்

 

தம்மலிபி 14 தமிழாக்கம்

இந்த தம்மலிபி தேவானம்பிய பியதசி ராஜனால் எழுதப்பட்டது. இந்த தம்மலிபிகள் சிறிதாகவோ (சம்க்ஷிப்தம்) மத்தியமாகவோ மிகநீளமாகவோ (விஸ்த்ரத) உள்ளன.

எல்லா தம்மலிபியும் எல்லா இடத்திலும் எழுதப்பெறவில்லை. என் ராஜ்ஜியம் மிகப்பெரிது. அதிகம் எழுதியுள்ளேன். இன்னும் அதிகம் எழுதுவேன்,

சில தகவல்களின் அர்த்தம் இனிமையா என்பதாலும் மக்கள் அதை பின்பற்றவும் மீண்டும் மீண்டும் கூறப்பெற்றன.

சில தகவல்கள் முழுதம் கூறாமல் இருக்கலாம். தேசத்திற்கு ஏற்பவை என்றோ, ஆழ்ந்த சிந்தித்த பின்போ (சங்க்யயா ஆலோச்ய), எழுத்துப்பொறித்தவன் பிழையாலோ (லிபிகார அபராதேன) இதற்கு காரணம்.

தௌலி (தோஸலி) தனி தம்மலிபி

தேவாநம்பியஸ வசநேந தோஸலியம் மஹாமாதா நகல வியோஹாலகா வதவிய :

அம் கிசி தகாமி ஹகம் தம் இசாமி கிம்தி கம்மன படிபாதயேஹம் துவாலதே ச ஆலபேஹம் | ஏஸ ச மே மோக்ய மாத துவால ஏதஸி அடஸி  அம் துபேஸு அனுஸதி | துபேஹி பஹுஸு   பாந சஹஸேஸு ஆயத பனயம கசேம ஸு முனிஸானம் | ஸவே முனிஸே பஜா மமா | அதா பஜாயே இசாமி ஹதம் கிம்தி ஸவேன ஹித சுகேன ஹிதலோகிக பாலலோகிகேன யூஜேவு தி ததா ஸவ முனிஸேஸு பி இசாமி ஹகம் | நோ ச பாபுநாத ஆவ கமுகே  இயம் அடே | கேச வ ஏக புலிஸே பாபுநாதி ஏதம் ஸெ பி தேஸம் நோ ஸவம் |

தேகதா ஹி துபே ஏதம் ஸுவிஹிதா பி நிதியம் ஏக புலிஸே பி அதி ஏ பந்தனம் வ பலிகிலேசம் வா  பாபுநாதி | தத ஹோதி அகஸமா தேந பதநம்திகா அம்நே ச பஹு ஜனே தவியே துகீயதி | தத இசிதவியே  துபேஹி கிம்தி மஜம்  படிபாதயேமா தி | இமேஹி து ஜாதேஹி நோ ஸம்படிபஜதி  இஸாய ஆஸுலோபேந நிடூலியேந தூலநாய அநாவூதிய ஆலஸியேந கிலமதேந | ஸே இசிதவியே கிம்தி ஏதே ஜாதா நோ ஹுவேவு மமா தி |  ஏதஸ ச ஸவஸ  மூலே அனாஸுலோபே அதுலான ச | நிதியம் தே கிலம்தே ஸியா ந தே உகசே ஸஞ்சலிய்ஹவியே து வடிதவியே ஏதவியே வா | ஹேவம்மேவ ஏ தகேய துபாக தேந வதவியே ஆனம்னே தேகதா ஹேவம் ச தேவம் ச தேவாநம்பியஸ அனுஸதி ஸே மஹாபலே எ தஸ ஸம்படிபாத மஹா அபாயே அஸம்படிபதி விபடிபாதயமினே ஹி ஏதம் நதி ஸ்வகஸ ஆலதி நோ லாஜாலதி | துஆஹலே ஹி இமஸ கம்மஸ மே குதே மனோ அதிலேகே ஸம்படிபாஜமீனே சு ஏதம் ஸ்வகம் ஆலாதயிஸத மம ச ஆநநிய, ஏஹத | இயம் ச லிபி திஸ நகதேன ஸோதவியா |

அந்தலா பி ச திஸேந கநஸி கநஸி ஏகேந பி ஸோதவிய | ஹேவம் ச கலந்தம் துபே சகத ஸம்படிபாதயிதவே | ஏதாயே அடாயே இயம் லிபி லிகித ஹித ஏந நகலவியோஹாலகா ஸஸ்வதம் ஸமயம் யுஜேவூ தி ஏந ஜனஸ அகஸ்மா பலிபோதே வா அகஸ்மா பலிகிலேஸே வா நோ ஸீஅ தி | ஏதாயே ச அடாயே ஹகம் மஹாமாதம் பஞ்சஸு பஞ்சஸு வஸேஸு நிகாமயிஸாமி ஏ அககாஸே அகண்டே சகிநாலம்பே ஹோஸதி ஏதம் அடம் ஜானிது ததா கலம்தி  அத மம அனுஸதீ தி | உஜேநிதே பி சு குமாலே ஏதாயே வ அடாயே நிகாமயஸதி  ஹேதிஸமேவ வகம் நோ ச அதிகாமயிஸதி திம்நி வஸாநி | ஹேமேவ தகஸிலாதே பி | அதா அ** தே மஹாமாதா நிகாமிஸம்தி அநுசயாநம் ததா அஹாபயிது அதநே கம்மம் ஏதம் பி ஜானிஸம்தி தம் பி ததா கலம்தி அத லாஜினே அனுசதீ தி ||

சொற்பொருள் விளக்கம்

தோஸலி = (இன்று) தௌலி
நகல வியோஹாலகா = நகர வியவஹாரக = நகர அதிகாரிகள்
தகாமி ஹகம் = பஷ்யாமி அஹம் = நான் பார்க்கிறேன்
துவாலத = துவாரத = வாசலில்
துபேஸு அனுஸதி = யுஷ்மாஸு அனுஷஸ்தி = உங்களுக்கு கட்டளை
ஸவே முனிஸே = சர்வே மனுஷ்யா = அனைத்து மனிதர்களும்
பஜா மம = ப்ரஜா: மம = என் மக்கள்
பாபுநத = ப்ராப்நுத = புரிந்த
 
ஸுவிஹிதா பி = ஸுவிஹிதா அபி = குற்றம் செய்யாதவரும்
பந்தனம் = கட்டப்பட்டு (சிறைப்பட்டு)
பரிக்லேஸம் = துன்புருத்தப்பட்டு
அகஸ்மா = அகஸ்மாத் = காரணமின்றி
பஹுஜன = பல மக்கள்
துகாயந்தே = துக்கத்துக்கு உள்ளாகின்றனர்
மஜம் படிபாதயேம = மத்யம் ப்ரதிபாதயேம = நடுநிலை நின்று (நியாயமாக)
ஸம்படிபாத = பின்பற்றுவது
மஹா அபாயே = பெரும் அபாயம்
அஸம்படிபதி = பின்பற்றாதது
திஸ நகதேன = திஷ்ய நக்ஷத்ரேண = பூசம் நட்சத்திரத்தில்
ஸோதவியா = ஷ்ரோதவ்ய = கேட்கவேண்டும்
பஞ்சஸு பஞ்சஸு வஸேஸு = பஞ்சஸு பஞ்சஸு வர்ஷேஷு = ஐந்து வருட்த்திற்கு ஒரு முறை
உஜேநிதே குமாலே = உஜ்ஜையிநிதே குமாரே = உஜ்ஜையினிலிருந்து இளவரசன்

தௌலி தனி தம்மலிபி தமிழாக்கம்  

தேவானம்பிய பியதசி ராஜனின் ஆணையால் தோசலி நகரத்து மகாமாத்திரர்களுக்கு இடும் கட்டளை :

நான் காண்பதை இந்த வாசல் வழியாக உங்களுக்கு கட்டளையிடுகிறேன். இந்த வாசல் முக்கியமானது. இதன் பல்லாயிரம் மக்களிடம் சென்று அவர்களுடைய பெறுவது உங்கள் கடமை.

எல்லா மனிதரும் என் மக்கள் (சர்வே மனுஷ்யா ப்ரஜா: மம) என் மக்களுக்கு (குழந்தைகளுக்கு) இவ்வுலகிலும் பரலோகத்திலும் எந்த நன்மையும் சுகமும் விரும்புவேனோ, அனைத்து மனிதருக்கும் அதையே நான் விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் இது இன்னும் புரியவில்லை. புரிந்தவருக்கும் கொஞ்சமே புரிந்துள்ளது, முழுதும் புரியவில்லை,

தவறு செய்யாத சிலரும் சிறைப்பட்டோ துன்புருத்தப்பட்டோ தவிக்கின்றனர். காரணமின்றி சிலர் சிறையில் வாடுவதால் அவரை நம்பிய பலரும் துன்பப்படுகின்றனர்.

இப்படி ஆகாமல் நீங்கள்  சரியாக நடுநிலை நின்று கடமையாற்றவேண்டும்

பொறாமை(ஈர்ஷ்ய), கோவம்(ஆஷுரோப), கொடூரம்(நைஷ்டுர்ய), அவசரம்(த்வரண), அக்கறையின்மை(அனாவ்ருத்ய), சோம்பல்(ஆலஸ்ய), களைப்பு(க்ளமத) என்று பல காரணங்களால் சிலர் கடமையை சரியாக செய்வதில்லை. இவை நம்மில் தோன்றாமல் கவனமாக இருக்கவேண்டும். கோவமும் அவசரமும் மற்றவைக்கு மூலக்காரணங்கள்.

உங்களில் இதை புரிந்துகொண்டவர்கள் மற்றவருக்கு ”இதுவே தேவானம்பியனின் கட்டளைகள்; இதை பின்பற்றுவது பெரும் பலன் தரும்; தவறுவது பெரும் அபாயம் தரும்; கடமை தவறினால் சுவர்கமும் அடைய இயலாது அரசனும் மகிழ்ச்சியும் கிடைக்காது.

கடமை செய்வது இரு நன்மைகளை தரும்.

இந்த தம்மலிபி அனைவரும் சேர்ந்து திஷ்ய நட்சத்திரத்தின் (பூசம்) போது கேட்க வேண்டும் (மாதாமாதம்). மற்ற நாட்களில் யாராவது விரும்பினாலும் வாசிக்க வேண்டும்.

மக்கள காரணமின்றி சிறை செல்வதையும் மற்றவிதத்தில் துன்பபடுவதும் தடுக்கவே இந்த தம்மலிபி இங்கே எழுதப்படுகிறது.

இதற்காக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை முரட்டுத்தனமற்ற (அகர்கஷ), கொடூரமற்ற (அசண்ட), மென்மையான மகாமாத்திரரை அனுப்பிவைப்பேன்.

இதே காரணத்திற்கு உஜ்ஜையினியில்ருந்து இளவரசனும் மூன்று வருடத்திற்கு ஒரு முறை இதுபோன்ற அதிகாரிகளை அனுப்பிவைப்பான். தக்ஷசீலாவிலிருதும் இவ்வாறே. மஹாமாத்திரர் இதை அரசகட்டளை என்று ஏற்று அலுவல் செல்லும் போது இதை மனதில் வைத்து தம் காரியம் கெடாமல் இதையும் செய்து வைப்பார்.

 

தொடர்புடைய பதிவுகள்

அசோகன் கல்வெட்டு - முதல் பத்து தம்மலிபிகள்

காரவேலன் கல்வெட்டு 

அந்தியோக நகரம் – விசித்திர சித்தன் குஸ்ரோ

எல்லீசனின் தமிழ் கல்வெட்டு 

வரலாறு கட்டுரைகள் 

அசோகன் காரவேலன்கல்வெட்டுகள் – பேச்சு கச்சேரி வீடியோ


No comments:

Post a Comment