இந்திய கணித-ஜோதிட
வரலாற்றை ஐந்து பருவங்களாக பிரிக்கலாம். ஜோதி என்ற சொல் நட்சத்திரங்களை குறிக்கும்.
இதில் ஜோதிடம் என்று நான் சொல்வது வானியல் அல்லது விண்ணியல் என்னும் நட்சத்திர மண்டல
ஞானம், சூரிய சந்திர பாதை கணிதம், பஞ்சாங்க நிர்ணயம், கிரகண கணிதம் போன்றவையே. கல்யாண
பலன், ராசி பலன், மங்கள நேரம், தகும் பொழுது தகா பொழுது, ராகுகால யமகண்ட தவிர்ப்பு
போன்றவை சமூகத்தையும் மக்களின் செயல்களையும் அதிகம் வழிநடத்தினாலும், அவை அறிவியல்
பூர்வமானதல்ல என்ற என்னுடைய அனுமானத்தாலும், வராகமிகிரரை தவிற மற்ற முக்கிய ஜோதிட நூலாசிரியர்கள்,
அவற்றை கையாளவில்லை என்பதாலும், அவற்றை பற்றி நானேதும் எழுதிலேன்.
கீழேயுள்ளது, கே.வி.
சர்மா போன்றோர் எழுதிய நூல்களில் நான் கற்றதை வைத்தும், ஆரியபடன், வராகமிகிரன், பிரம்மகுப்தன்,
பாஸ்கரன் போன்றோர் நூல்களின் மொழிப்பெயர்ப்புகளை படித்தும் நான் என் வசதிக்கும் புரிதலுக்கும்
வகுத்த பிரிவே. அங்கீகரிக்கப்பட்ட வகுப்புகள் அல்ல.
வேத காலம்
|
வேத பருவம்
|
கிமு 1200 / கலியப்தம்
1900 (ஏறக்குறைய)
|
வேதாங்க ஜோதிட பருவம்
|
கிமு 500 – கிபி 500 / கலியப்தம்
2400 – 2900
|
சித்தாந்த பருவம்
|
கிபி 500 – கிபி 1700
|
ஆரியபடன் பருவம்
|
கிபி 1700 – இன்று வரை
|
ஐரோப்பிய பருவம்
|
வேத காலத்தில்
நிலைத்த வேதத்தை தவிற பிற இலக்கியங்களோ வர்லாற்று தொன்மைகளோ மிஞ்சவில்லை, அதிலுள்ள
வானியல் செய்திகள் மிக மிக குறைவே. வேதாங்க ஜோதிடம் என்ற நூல் லகதர் என்பவரால் இயற்றப்பட்டது.
முப்பத்தைந்து சுலோகங்களே கொண்டது. ரிக், யஜுர் வேதங்கள் இரண்டிற்கும் தனித்தனியே வேதங்க
ஜோதிட நூல்களிருந்தன, ஆனால் ஓரிரு சுலோகங்களில் மற்றுமே வேறுபட்டன. இதன் காலம் கிமு1200
என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த நூலில் எந்த கால விகிதமோ ஆண்டு குறிபோ இல்லை. லகதரை
பற்றி தகவல்களும் ஏதுமில்லை.
சித்தாந்த பருவம்
என்பது, 18 ஜோதிட சித்தாந்தங்கள் நிலவிய காலம். இதில் ஐந்து சித்தாந்தங்களை ஒப்பிடும்
நூலே வராகமிகிரரின் பஞ்சசித்தாந்தம். இவை
பதினெட்டும் வானியல் சித்தாந்த நூல்கள், மத, இலக்கிய, தத்துவ சித்தாந்த நூல்களல்ல.
இவை வகையே பிராம்ம சித்தாந்தம் (பைதாமஹ
சித்தாந்தம் என்றும் பெயருண்டு), வாசிஷ்ட சித்தாந்தம்,
பௌலீச சித்தாந்தம், ரோமக சித்தாந்தம்
(லோமச சித்தாந்தம் என்றும் பெயருண்டு), சூரிய
சித்தாந்தம் (சௌர சித்தந்தம் என்றும் பெயருண்டு).
புராணங்களில் மேரு
மலை எண்பத்திநாலாயிரம் யோஜனைகள் உயரம். தட்டையான பூமியின் நடுவே ஓங்கி நிற்கும் மலையே
மேரு. தலைகீழ் கூம்பாக, அதாவது அடிவாரத்தில் கூர்மையாகவும், மேலே தட்டையாகவும் விளங்கும்
மலை மேரு. அதன் உச்சியில் தேவலோகம் உள்ளது, தேவர்கள் அங்கே வசிக்கின்றனர். மேரு மலையடிவாரத்தில்
தாமரை இதழ்களை போல் நாலுபுரமும் நாலு கண்டங்கள் உள்ளன; வடக்கில் குரு; கிழக்கில் பாத்ராஷ்வா,
தெற்கே பரதம், மேற்கே கேதுமாலா. இந்த படத்திலுள்ளது போல் பூமியை கருதினர். இது ஒரு
கருத்து; வேறு சில புராணங்கள் பூமியை வேறுவிதமாக கருதி வர்ணித்தன.
மேரு மலையும், கண்டங்களும் புராண கால பூமியின் வர்ணனை படம்: ர. விஸ்வநாதன் |
புராண காலத்தில்
யோஜனை என்பது எத்தனை தூரம் என்று தெரியவில்லை. ஆனால் ஆரியபடர் ஒரு யோஜனை எட்டாயிரம்
ந்ரு [ नृ ] என்கிறார். ஒர் ந்ரு என்பது ஒரு நரன், அதாவது, மனிதனின் உயரம் என்பது உரையாசிரியர்களின்
விளக்கம். இது ஒரு தெளிவான அளவில்லை; கணிதத்தில் பல புதுமைகள் தந்து, ஒரு புதிய பருவத்திற்கே
காரணமாயிருந்த ஆரியபடர் ஏன் இப்படி தெளிவற்ற அளவை தருகிறார் என்று தெரியவில்லை. ஒரு
மனிதனின் உயரம் ஒண்றரை மீட்டர் என்று எடுத்துக்கொண்டாலும், ஒரு யோஜனை சராசரியாக பன்னிரண்டு
கிலோமீட்டர். இந்த கணக்கில் எண்பத்திநாலாயிர கிமீ உயர மேரு மலை பூமியை விட பல மடங்கு
பெரிதாக இருக்கவேண்டும். புராணங்கள் குறிப்பிடும் ஒரு யோஜனை எவ்வளவு என்று தெரியவில்லை.
[அளவுகள் காலாகாலம் மாறிவந்தன; உதாரணத்திற்கு வேதாங்க ஜோதிடத்தில் ஒரு யுகம் ஐந்து
சூரிய ஆண்டுகளே; ஜோதிட நூல்களிலோ ஒரு யுகம் 4,32,000 சூரிய ஆண்டுகள்.] மேரு மலையை சூரிய
சந்திர நட்சத்திரங்கள் சுற்றிவருகின்றன, இந்த மிகப்பெரிய மேருவுக்கு பின்புரம் சூரியன்
செல்வதால் இரவு உண்டாகிறது என்பதும் புராண மரபு. விந்திய மலை வளர்ந்து சூரியனை தடுத்த
கதையும், அகத்தியனுக்காக நின்றதும், இம்மரபை சார்ந்ததே.
இதை ஆரியபடர் கண்டுகொள்ளவே
இல்லை. வட துருவத்தை அவர் மேரு என்று கூறி அது ஒரு யோஜனை உயரமே என்றும் கூறிவிட்டு,
அதன் உச்சியில் தேவர்கள் வாழ்வதை மட்டும் மறுக்காமல் அவர் ஆரியபடீயத்தில் எழுதியுள்ளார்.
தான் புராணத்திலிருந்து மாறுபடும் விளக்கமோ, மேரு மலையை நேரில் பார்த்தாகவோ, எந்த நூலோ
சாட்சியோ ஆதாரம் தரவில்லை. புராண மரபை இவ்வாறு ஆரியபடர் மறுப்பதால் நூறாண்டு பின்வந்த
பிரம்மகுப்தர் இவரை மிகவும் சாடுகிறார்; ஆனால் அவரும் விளக்கமேதும் தரவில்லை.
பூமி ஒரு கோளம்,
அதாவது உருண்டை, தட்டையல்ல, என்பதை ஆரியபடர் ஒரு உவமையால் விளக்குகிறார். ஆரியபடீயத்தின்
கோளம் என்ற மூன்றாம் அத்தியாயத்திலுருந்து நான்கு சுலோகங்களை காண்போம்.
यद्वत् कदम्बपुष्पग्रन्थिः प्रचितः समन्ततः कुसुमैः ।
तद्वद्धि सर्वसत्त्वैर्जलजैः स्थलजैश्च भूगोलः ॥ 8 ॥
யத்³வத் கத³ம்ப³புஷ்பக்³ரந்தி²꞉
ப்ரசித꞉ ஸமந்தத꞉
குஸுமை꞉ .
தத்³வத்³தி⁴ ஸர்வஸத்த்வைர்ஜலஜை꞉ ஸ்த²லஜைஶ்ச பூ⁴கோ³ல꞉ [8]
தத்³வத்³தி⁴ ஸர்வஸத்த்வைர்ஜலஜை꞉ ஸ்த²லஜைஶ்ச பூ⁴கோ³ல꞉ [8]
விளக்கம் எவ்வாறு(யத்³வத்) கதம்பபுஷ்ப கொத்து(க்ரந்தி) எங்கும்
சமமாக(ஸமந்தத) விளங்கி, அதன் மொட்டுக்கள் எல்லாதிசையிலும் மேல்நோக்கி நிற்கின்றனவோ,
அவ்வாறே(த்தவத்), பூகோளத்தில் நிலவாழ்(ஸ்த²லஜை:)
நீர்வாழ்(ஜலஜை꞉) உயிர்கள் எல்லா திசையிலும் மேல்நோக்கி வாழ்கின்றன
என்கிறார். இந்த உவமைக்கு புவியீர்ப்பு சக்தி என்று ஒரு விளக்கம் தேவையில்லை என்பதை
காண்க.
ஆனால் இது உவமை
தான், அறிவியல் பூர்வமான விளக்கமில்லை என்றும் காண்க. பூமி ஒரு கோளம், உருண்டை என்பதற்கு,
கிரகண நிழல்களின் வட்ட வடிவத்தை கண்டும் காட்டியும், வராஹமிஹிரரே சரியான அறிவியல் ரீதியான விளக்கமளித்தார்.
கதம்ப மலர் |
स्वमेरू स्थलमध्ये नरको बडवामुखं च जलमध्ये ।
अमरामरा मन्यन्ते परस्परमधःस्थितान् नियतम् ॥ 12 ॥
ஸ்வமேரூ
ஸ்த²லமத்⁴யே நரகோ
ப³ட³வாமுக²ம்ʼ ச ஜலமத்⁴யே .
அமராமரா மன்யந்தே பரஸ்பரமத⁴꞉ஸ்தி²தான் நியதம் [12]
அமராமரா மன்யந்தே பரஸ்பரமத⁴꞉ஸ்தி²தான் நியதம் [12]
விளக்கம் நிலம்சூழ்ந்த (ஸ்தலமத்யே) வடதுருவம் தேவலோகம்(ஸ்வ)
மேரு, நீர்சூழ்ந்த (ஜலமத்யே) தென்
துருவம் நரக படவாமுகம்; இது அசுரர் வாழுமிடம், என்கிறார் ஆரியபடர். இருதுருவ நிலங்களிலும்
வாழும் தேவரும்(அமரா) அசுரரும்(மரா) ஒருவரை ஒருவர் (பரஸ்பரம்) தங்களை விட கீழே (அத:)
இருப்பதாக (ஸ்தி²தான்)
கருதுகின்றனராம் (மன்யந்தே).
उदयो यो लङ्कायां सोऽस्तमयः सवितुरेव सिद्धपुरे ।
मध्याह्नो यवकोट्यां रोमक विषयेऽर्धरात्रं स्यात् ॥ १३ ॥
உத³யோ யோ லங்காயாம்ʼ
ஸோ(அ)ஸ்தமய꞉
ஸவிதுரேவ ஸித்³த⁴புரே
.
மத்⁴யாஹ்னோ யவகோட்யாம்ʼ ரோமக விஷயே(அ)ர்த⁴ராத்ரம்ʼ ஸ்யாத் [13]
மத்⁴யாஹ்னோ யவகோட்யாம்ʼ ரோமக விஷயே(அ)ர்த⁴ராத்ரம்ʼ ஸ்யாத் [13]
விளக்கம் இலங்கையில் சவித்துர் (சூரியன்) உதிக்கும்போது,
சித்தபுரத்தில் அஸ்தமனம். யவகோடியில் மத்தியானம், ரோமகவிஷயத்தில் அர்த்தராத்திரி (நள்ளிரவு
மட்டுமல்ல, சரியாக நடு இரவு).
ரோமக என்பது ரோமாபுரி,
விஷயம் என்பது நாடு. சித்தபுரம் யவகோடி எந்த ஊரையோ நாடையோ குறிக்கிறது என்பது காலப்போக்கில்
அற்றுப்போன செய்தி. அன்னிய வணிகர், பயணிகள் சொல்லும் செவிவழி செய்தியாலோ இன்று கிட்டாத
புத்தகம் போன்ற சான்றோ அக்காலத்தில் நிலவி இன்று மறைந்திருக்கலாம்.
படம் : சானக்கிய நீதி யூட்யூப் வீடியோவிலிருந்து |
ஆனால் இலங்கை இன்றைய ஸ்ரீலங்கா இல்லை. இது அடுத்த வரிகளில் தெளிவு.
स्थलजलमध्याल्लङ्का भूकक्ष्याया भवेच्चतु्भागो ।
उज्जयिनि लङ्कायाः तच्चतुरंशे समोत्तरतः ॥ १४ ॥
ஸ்த²லஜலமத்⁴யால்லங்கா பூ⁴கக்ஷ்யாயா ப⁴வேச்சது்பா⁴கோ³
.
உஜ்ஜயினி லங்காயா꞉ தச்சதுரம்ʼஶே ஸமோத்தரத꞉ [14 ]
உஜ்ஜயினி லங்காயா꞉ தச்சதுரம்ʼஶே ஸமோத்தரத꞉ [14 ]
விளக்கம் நிலநீர் நடுவே உள்ள இலங்கை (ஸ்த²லஜலமத்⁴யால்லங்கா) பூகக்ஷ்யத்தை நான்கு பாகமாய் (சது்பா⁴கோ³) பிரிக்கிறது. இலங்கை முதல் வடதுருவம் வரையுள்ள இதன் பகுதியை
உஜ்ஜயின் நான்கில் ஒரு அம்சமாக (சதுரம்ʼஶே)
வகுக்கிறது.
கக்ஷ்யா என்பது சுற்றுவட்டம். பூகக்ஷ்யா என்பது பூமியை சுற்றும்வட்டம். ஆங்கிலத்தில்
இதன் பெயர் மெரிடியன். ஈகுவேட்டர் என்னும் பூமத்தியரேகைக்கு, வடமொழியில், குறிப்பாக
ஜோதிட நூல்களில் விஷுவத் என்பது மற்றொரு
பெயர்.
வடதுருவம் முதல்
தென் துருவம் வரை பூகோளத்தின் மேல் ஒரு கோடு வரைந்து, அதை அந்த கோளத்தின்மேல் மறுபக்கம்
மீண்டும் வடதுருவம் வரை வரைந்தால் அது பூகக்ஷ்யா எனும் மெரிடியன். இங்கிலாந்து நாட்டின்
தலைநகரம் லண்டன் அருகே உள்ள கிரீன்விச் வழியாக இந்த வட்டமான் கோட்டை (வளையத்தை) வரைந்தால்,
அது கிரீன்விச் மெரிடியன். இதை பூஜ்ய மெரிடியன் என்று ஆங்கிலேயர்கள் நிறுவ, அதை உலகம்
இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. பூகோளத்தின் மறுப்பக்கம், கிரீன்விச் மெரிடியனுக்கு நேர்
எதிராக 180 டிகிரி தள்ளி, பசிபிக் பெருங்கடல் வழியாக வரையும் மெரிடியனுக்கு சர்வதேச
தேதி கோடு என்று பெயர். ஒவ்வொரு நாளும் இங்கேயே தொடங்குவதாக உலக நாடுகள் அனைத்தும்
ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆங்கிலேய (கிறுத்துவ) புத்தாண்டை ஜனவரி முதல் நாள் கொண்டாடும்
போது, இந்த சர்வதேச தேதிக்கோட்டை மிக ஒட்டியுள்ள கிரிபாட்டி தீவுகளில் வானவேடிக்கை
பட்டாசுகள் வெடித்து தொடங்குவதும் சில ஆண்டுகளாக வழக்கம். அடுத்தடுத்த அரை மணிக்கு
ஒவ்வொரு நாடாக பட்டாசு வெடித்து தொலைக்காட்சியிலும் இணையத்திலும் நாம் சகஜமாக படங்களை
காண்கிறோம். ஆனால் இங்கிலாந்து ஆட்சியிலும் அறிவியிலலிலும் வல்லரசாகுமுன் எது பூஜ்ய
மெரிடியன்?
பாரத நாட்டின் ஜோதிடர்கள், உஜ்ஜயின் மெரிடியனை இந்திய நாட்டின் மைய மெரிடியனாக,
பூகக்ஷ்யா என்று கருதி அதற்கேற்ப சித்த்தாந்த நூல்களையும், கரணங்களையும், பஞ்சாங்ககளையும்
படைத்தனர். ஆரியபடன் காலத்துக்கு முன்பே, அதாவது, சித்தாந்த பருவம் என்று நான் குறிப்பிட்ட
கிமு ஐநூற்றுக்கும் கிபி ஐநூற்றுக்கும் இடைப்படட் காலத்தில் இந்த வழக்கம் தோன்றியிருக்கலாம்.
இந்த இலங்கை என்பது
சரியாக விஷுவத் எனும் பூமத்தியரேகையின் மேல் இருப்பதாக கருதப்படும் தீவு. அந்த இடத்தில்
தீவிருப்பதாக ஒரு விவரமும் எந்த நூலிலுமில்லை. அது ஒரு குறியீடு மட்டுமே. பூஜ்ய டிகிரி
தீர்க ரேகையான உஜ்ஜயின் பூகக்ஷ்யா, பூஜ்ய டிகிரி அட்ச ரேகையான விஷுவத்தை சந்திக்கும்
குறியிடம் இந்த இலங்கை.
ஏன் உஜ்ஜயின்?
முக்கிய முக்தி நகரம், வரலாற்று புகழ் பெற்ற நகரம் என்பது ஒரு காரணம். ஆனால் காசி,
அயோத்தியை, மதுரா, இந்திரபிரஸ்தா, காஞ்சிபுரம், ராஜகிரகம் என்று பல நகரங்களுக்கு இந்த
தகுதியுள்ளது. ஜோதிடர் ஒத்துக்கொள்ளும்படி என்ன முக்கியத்துவம்?
உஜ்ஜயினி லங்காயா꞉
தச்சதுரம்ʼஶே
ஸமோத்தரத꞉
என்னும் பதினாலாம்
சுலோக வரியில் விளக்கம் காணலாம். லேட்டிட்யூட்
எனும் அட்சரேகையில் பூமத்தியரேகை பூஜ்ய டிகிரி, துருவங்கள் தொண்ணூறு டிகிரி அல்லவா?
இலங்கைமுதல் மேருவரை வடக்கே செல்லும் பூகக்ஷ்யாவில் சதுரம் (நாலில் ஒரு பங்கு) அதாவது
இருபத்திரண்டரை டிகிரியில் உஜ்ஜயின் உள்ளது. டிராபிக்
ஆஃப் கேன்சர் (Tropic of
Cancer) எனும் 23-1/2 டிகிரி
அட்சரேகை, உத்தராயணத்தினின் வட எல்லை, உஜ்ஜயின் நகரம் என்று கணித்தார் ஆரியபடர்.
சூரிய சித்தாந்ததில்
வரும் ஒரே பூகக்ஷையின் நகரங்கள் ராக்ஷஸாலயம்(இலங்கை), தேவகுலசைலம்(மேரு), ரோஹிதகம்,
உஜ்ஜையினி, ஸந்நிஹிதஸஹ (குருக்ஷேத்திரம்). தவறான இலங்கையை பட்டியலிடுவது நோக்கத்தக்கது.
லல்லர் எழுதிய
நூல் தரும் பட்டியல் இலங்கை, குமரி, காஞ்சி, பரநாட, கிருஷ்ணா நதி, ஷ்வேதஷைலம், வாத்ஸ்யகுல்மம்,
உஜ்ஜயினி, கர்கராத், ஆஷ்ரய, மாலவநகரம், சயுரிவ,
ரோஹிதகம், குருக்ஷேத்திரம், ஹிமவான், மேரு. இந்த பட்டியலில் காஞ்சி இடம்பெருவது ஆச்சரியம்.
ஒரு முழு நதியும், மலைத்தொடரும் இடம்பெறுவதும் விசித்திரம்.
வேறு ஒரு நூல்
தரும் பட்டியல் கரநகரம், சீதாருகேஹ, பாணாட, மிஸிதபுரி, தபர்ணி, சீதாவர, வாத்ஸ்யகுல்மம்
(உதயணன் வாழ்ந்த கௌசாம்பி), வனநகரி, அவந்தி
என்னும் உஜ்ஜயினி, ஸ்தானேஷ, மேரு.
வேதாங்க ஜோதிடம் எனும் நூல் “காலவிதானஷாஸ்த்ரம்”, அதாவது
“காலத்தை கற்பிக்கும் சாத்திரம்” என்று ஜோதிடக்கலையை வர்ணிக்கிறது. மேலும் “யோ ஜ்யோதிஷாம்
வேத ஸ வேத யஞான்” என்ற சுலோகம் உள்ளது. இதன் பொருள், “எவன் ஜோதிடம் அறிவானோ அவனே வேதம்
அறிவான்.” வருடம், அயனம், ருது, மாதம், பக்ஷம் (வளர்பிறை தேய்பிறை), திதி, நட்சத்திரம்,
முகூர்த்தம், நாடி, விநாடி யாவும் சரியாக கணித்து, தகுந்த நேரத்தில் வேள்வி, சந்தியாவந்தனம்,
பண்டிகை, திவசம், தர்ப்பணம், கட்டுமானம், உத்சவம், புதுமனை புகுதல், பட்டாபிஷேகம்,
திருமணம், பூனூல் அணிவித்தல், கல்வி ஆரம்பம், ஆகியவை தொடங்க வேண்டும். இன்றுபோல் பாரதம்
முழுதும் ஒரே பூகக்ஷ்யத்தை (மெரிடியனை) நிர்ணயித்து, அந்த நேரத்தையே நாடு முழுதும்
பயன்படுத்தவில்லை. அப்படி செய்ய இயந்திர கடிகாரங்கள், தொலைபேசி, தொலைதொடர்பு கருவிகள்
சமீபகாலம் வரை இல்லை. உஜ்ஜயின் நகரத்திற்கு சூர்யோதயம், திதி, நட்சத்திரம், குரு பெயர்ச்சி,
சனி பெயர்ச்சி, சங்கராந்தி போன்றவை கணித்து, அதன் கிழக்கே மேற்கே உள்ள ஊர் நாடு கிராம
நகரங்களுக்கு ஏற்ற முகூர்த்த, நாடி, விநாடி கூட்டியோ கழித்தோ கணித்து கரணம், பஞ்சாங்கம்
தயார் செய்து, கால நேர்மை பேணப்பட்டது.
சென்னை தீர்கரேகை (மதறாஸ் மெரிடியன்)
உஜ்ஜயின் தீர்கரேகையை
கைவிட்டு, உடனே பாரத நாடு மக்கள் இன்றைய இந்திய மெரிடியனை (82-1/2 டிகிரி) தழுவவில்லை.
மதறாசபட்டினம் என்னும் சென்னை நகரத்தில் நுங்கம்பாக்கத்தில் தொடங்கிய சென்னை வானியல்
மையத்தில், கிபி 1792 கலியப்தம் 4893 மைக்கல் டாப்பிங், கிரீன்விச் மெரிடியனை மையமாக
வைத்து, சென்னையின் தீர்கரேகையை கணித்தார். இதை கணித்த நினைவுத்தூண் சென்னை நுங்கம்பாகத்தில்
அந்த மையத்தில் இன்றும் உள்ளது. லத்தீனம், தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் ஐந்து
மொழிகளிலும் கல்வெட்டை பொறிவித்தார் டாப்பிங்.
மைக்கல் டாப்பிங் நிறுவிய நினைவு தூண் நுங்கம்பாக்கம், சென்னை |
டாப்பிங் தூணில் கல்யப்தம் 4893, கிபி 1792 கல்வெட்டு |
இதன்படி நேர நிர்ணயம்
செய்த கிழக்கிந்தியா கம்பெனி, புனித ஜார்ஜ் கோட்டையில் சூரிய உதயம் அஸ்தமனம் இரண்டு
நேரத்திலும் பீரங்கி செலுத்தி ஊருக்கு நேரம் தெரிவித்தனர் (ஆங்கிலத்தில் கன் டைம்).
பிற்காலத்தில் மணிக்கூண்டுகளை கட்டினர். சுமார் ஐம்பதாண்டுகள் இது சென்னைக்கு மட்டுமே
பொருந்தியது. 1850களில் ரயில் போக்குவரத்து தொடங்கிய பின், வெவ்வேறு ஊர்களில் கடிகாரங்கள்
வெவ்வேறு நேரம் காட்டியதால், ரயில் வரவு, புறப்பாட்டில் குழப்பங்கள் தோன்றின. எல்லா
ஊர்களுக்கும் ஒரே நேரத்தை பேணிணால் இதை தவிர்க்கலாம், பிரிக்கப்படாத பாரதம் முழுக்க
ஒரே ரயில் அட்டவணை தயாரிக்கலாம் என்று ரயில் நிர்வாகம், அரசு முடிவெடுத்து, மதறாஸ்
மெரிடியனை, சென்னையின் நேரத்தை பாரத நாட்டு மைய நேரமாக அறிவித்தது.
உஜ்ஜையினியில்
பாய்ந்த கால ஓடை, சில வருடங்கள் சென்னையிலும் பொசிந்தது.
படங்கள்
1. மேரு மலையும் கண்டங்களும் - சாக்கோட்டை ர.விஸ்வநாதன், ஓவிய ஆசிரியர், சென்னை கல்லூரி, ஆவடி
2. யவகோடி, ரோமக, சித்தபுர வரைபடம் - சானக்கிய நீதி யூட்யூப் வீடியோ
ஆதார நூல்கள் / செவிவழி கேள்வி
- “ஆரியபடீயம்”, ஸ்ரீ சாரத கல்வி கழகம், 1974, கே.வி.சர்மா, கே.சி.சுக்லா
- ஒலியின் வேகம் அறிய மதறாஸில் நடத்திய பரிசோதனைகள், ஜெ. கோல்டிங்காம் (Experiments for Ascertaining the velocity of Sound, at Madras in the East Indies, J. Goldingham, 1823)
- ஸ்ரீராம் வெங்கடகிருஷ்ணன் கல்லூரி சாலை மரபு நடை, ஆகஸ்ட் 2014.
ஜோதிடம்/வானியல் கட்டுரைகள்
- வராகமிஹிரரின்
கிரகண சான்று
- வராகமிஹிரரின்
அகத்தியர் துதி
- சில விண்ணியல் ஸ்லோகங்கள் – பொருள் விளக்கம்
- ஹேவிளம்ப புத்தாண்டு - சில விண்ணியல் குறிப்புகள்
- தமிழ் புத்தாண்டு - சித்திரா பௌர்ணமி
- ஆரியபடன் - ஒரு கட்டுரை
- பண்டை நாகரீகங்களின் வானியலும் கணிதமும் (காணொளி)
சென்னை கட்டுரைகள்
1. சென்னை - இந்தியாவின் முதல் நவீன நகரம் (ஆங்கிலத்தில்)
2. சென்னை நகரத்து நூலகங்கள்
No comments:
Post a Comment