Wednesday, 30 January 2019

தேவ்கர் தல வாழ்த்து

சமீபத்தில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை குழுவினருடன், மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஒரு வாரம் சென்றிருந்தேன். வருடா வருடம் ஜனவரி மாதம், ஒரு பாரம்பரிய தலத்தை தேர்ந்தெடுத்து, கலை உலா செல்வது எங்கள் வழக்கம். இந்த வருடம் சாஞ்சி பிரதானமான தலம்; அதை சுற்றி பல இடங்களுக்கும் கலை உலா சென்றோம். தமிழகத்தின் வட பகுதி தொண்டை நாடு அல்லவா? அதை போல், மத்திய பிரதேசத்தின் வட பகுதி  புண்டேல்கண்ட். அதில் சில பகுதிகள் உத்திர பிரதேசத்தில் உள்ளன; குறிப்பாக தேவ்கர். தேவ்கரில் குப்தர் கால பெருமாள் கோயில் உள்ளது, அதை சமீபகாலமாக தசாவதார கோயில் என்பர்.


தேவ்கர் பெருமாள் கோயில்

உருமாறா கோயில்களில், பாரத நாட்டின் மிகப்பழமையான இந்து மத கோயில் என்பது கலைவரலாற்று  வல்லுனரின் கருத்து. அது என்ன உருமாறா கோயில்? ஒரு காலத்தில் கோயில்கள் செங்கலிலும் மரத்திலும் சுதையிலும் கட்டிவந்தனர். தமிழ்நாட்டில் சங்க கால கோயில்கள் இவ்வகை. பின்னர் குப்தர் காலத்தில் வடக்கிலும், பல்லவர் காலத்தில் தமிழகத்திலும், கடம்பர் காலத்தில் கர்நாடகத்திலும், கருங்கல், சுண்ணாம்புக்கல், மணற்கல், போன்ற பாறைகளை வெட்டி கோயில் கட்டும் மரபு தொடங்கியது.

தாம் ஆண்ட தேசங்களில் பல செங்கல் தளிகளை கற்றளியாக்கினர் சோழர்.  பிறகு இப்படி உருமாறிய கோயில்களை பாண்டியர், விஜயநகர் மன்னர்கள், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் புனரமைத்தனர்; விரிவாக்கினர், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பினர். ஆனால் சில பல்லவர் கால சோழர்கால கற்றளிகள், பிற்காலத்தில் உருமாறவில்லை. அதைப்போல் தேவ்கர் கோயிலும் குப்தர் காலத்தில் உருவானபின் உருவம் மாறவில்லை. உருமாற்றாமல் ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பெற்ற தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.

இந்த கோவிலின் மேற்கில் கருவறையின் நுழைவாயில். மற்ற மூன்று புற சுவர்களில் மையத்தில் மிக அழகான மூன்று சிற்பங்களை காணலாம். வடக்கே கஜேந்திர மோட்சம்; கிழக்கே நர நாராயணர்; தெற்கே அனந்தசயனர்.

 இந்த மூன்று சிற்பங்களையும் வர்ணித்து, இந்த கோயிலுக்கு நான் ஒரு வாழ்த்து பாடல் இயற்றியுள்ளேன். பாடல் அறுசீர் விருத்தம். நண்பர் சுதர்சனம் இயற்றிய ஒரு பாடலின் யாப்பையும் சில் சொற்களையும் களவாடி, கழித்து கூட்டி களித்து படைத்த கவிதை. என் கவிதைக்கு வசதியாக முதல் காட்சியாக அனந்தசயனரையும், அடுத்து அவருக்கு அபய குரல் ஒலித்த கஜெந்திரனையும், கடைசியாக நரமுனியோடு உறவாடும் நாராயணனாகவும் கால வரிசை படுத்தியுள்ளேன்.

நாகத்தின் மேல்கிடந்து போகத்தில் வீற்றிருந்த ஊகத்தின் உருவானமால்
சோகத்தில் ஓலமிட்ட நாகத்தின் துயர்தீர்க்க வேகத்தின் கதியேறியே
மேகத்தை போலவெழு நாகத்தை ஆழியெடு வேகத்தில்  வென்றவழகன்
நாகத்தின் அவதாரம் யாகத்தோன் நரமுனியின் யோகத்தில் தோன்றுதலமே

அனந்தசயனர்
கஜேந்திர மோட்சம்
 நர நாராயணர்

பொழிப்புரை 
ஆதிசேடன் என்னும் நாகத்தின் மேல் போகமாக வீற்றிருந்த திருமால், சோகத்தில் ஓலமிட்ட கஜேந்திரன் எனும் நாகத்தின் துயரம் தீர்க்க, வேகம் என்ற சொல்லுக்கே விளக்கமான கருடன் மேலேறி, மேகம்போல் நீரிலிருந்து எழுந்து காட்சியளித்த நாகத்தை (கஜேந்திரனை கவ்விய மகரநாகத்தை) தன் சுதர்சன சக்கரம் (ஆழி) எடுத்து, அதன் வேகத்தில் வென்ற  அழகன் (திருமால்), பின்னர் ஆதிசேடன் என்னும் நாகத்தின் அவதாரமான நரமுனியுடன் நட்பு (யோகம்) கொண்ட நாராயண முனியாக, வதரி ஆசரமத்தில் தோன்றும், சிற்பங்கள் கொண்ட தலம், தேவ்கர்.

ஊகத்தின் உருவானமால் என்று முதல் வரி சொற்றொடர், பர்த்ருஹரியின் ஒரு சுலோகத்திலிருந்து எனக்கு தோன்றியது. திக்காலாதியனவச்சின்னானந்தசின்மாத்ரமூர்த்தயே என்ற அவரது முதல் வரியில், “ஆனந்த சித்” - “இன்ப எண்ணம்” என்பது மட்டுமே இறைவனின் வடிவம் என்கிறார். “இன்புருகு சிந்தை” என்னும் பூதத்தாழ்வார் மங்கலக்கிளவியும், இதற்கு தமிழ் உதாரணம். ஒரு ஊகம் என்பது ஒரு எண்ணம்; அதற்கு வடிவம் இல்லை. ஊகத்திற்கு வடிவமென்றால் அது திருமால் உருவமே என்று பர்த்ருஹரி, பூதத்தாழ்வாரை பின்தொடர்ந்து, இந்த சீர்கள்.

படங்கள்
க. தேவ்கர் கோயில் - ர.கோபு.
ங. மூன்று சிற்பங்கள் - வி.கே. ஸ்ரீநிவாசன்.

பாடல்களில் சிற்பங்கள்
தமிழிசையில் மிளிரும் சிற்பங்கள் - அசையும் பொருளில் இசையும் சிவனே

கவிதைகள்

தாலாட்டும் காவேரி
சலைவன்வாழ்த்து – திணை கமழும் உதகை வனம்

4 comments:

 1. அற்புதமான பதிவு

  ReplyDelete
  Replies
  1. அற்புமான பதிவு. படங்களும் பாடலும் பதிவு செய்த கருத்தும் அழகு.
   பாடல் அஸ்வதாடி என்ற சந்தமாகும் த்வாதச ப்ராசம் என்றழைக்கபபடும் பன்னிரு எதுகை காணலாம்.
   எழுசீர் விருத்தம்.
   ஆறு காய்ச்சீர்கள். ஈற்றுச்சீர் கனி.

   Delete
  2. அறுசீர் ஐந்து காய் ஆறாவது கனி

   Delete
 2. ஒரு வார்த்தை சுடுக்கு எடுக்கும் மகாலஷ்மியை சொல்லியிருக்கலாம் :-)

  ReplyDelete