அறிமுகம்
செயற்கை
எருவை ஹாபர்-பாஷ் படைத்த வரலாற்றை தாமஸ் ஹாகரின் புத்தகத்தில் படித்தபின் அவர் ஆய்வுக்கு
உதவிய புத்தகப்பட்டியலை அலசினேன். வஷ்லவ் ஸ்மில் என்ற பெயரை முதல் முதலில் அப்பொழுது
தான் பார்த்தேன். இணையதளத்தில் தேடினால் அவர் எழுதிய சில நூல்களின் தலைப்புகள் என்
கவனத்தையும் ஆர்வத்தையும் மிகவும் கவர்ந்தன.
உலக வெப்பமயமாதல் பற்றி பல சந்தேகங்களுக்கு எனக்கு எழும்பிய காலம். ப்யோர்ன் லோம்போர்க், ஃப்ரீமன் டைசன் ஆகியோரின் உரைகளை யூட்யூபில் கண்டு தெளிவு பெற்றேன். யூட்யூப் தளத்தில் நாம் தேடும் தலைப்புக்கு சம்பந்தபட்ட உரைகளும் அணிவரும் – அதில் வஷ்லவ் ஸ்மில் உரையும் ஒன்று. பார்த்து அசந்தேன். ஃப்ரீமன் டைசனைப்போல் இவ்வளவு தெளிவாக, இத்தனை புள்ளி விவரங்களுடன், தொழில்நுட்ப சிக்கல்களை புரிந்து, பொருளாதார் தாக்கல்களும் புரிந்து, யதார்த்த அரசியல் சமூக மனப்பான்மையும் விளக்கி, கருவிகளின் வரலாறும் அறிந்து அவர் பேசியது களிப்பும் தெளிவும் அளித்தது. விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பொதுவாக பொருளாதாரமோ, அரசியலோ, சமூக மனப்பான்மையோ தெரிந்துகொள்ளாமல் பேசுவார்கள். பொருளாதார நிபுணர்களுக்கும் நிர்வாக அதிகாரிகளும் விஞ்ஞான அடிப்படை தெரியாமல் பேசுவார்கள். அரசியல்வாதிகளுக்கும், ஊடக மேதைகளும், சுற்றுசூழல் போராட்ட தியாகிகளும் இருஞானமும் இந்தக்கவலையும் ஏதுமின்றி சூரியனும் சந்திரனும் அஞ்சி நடுங்க சூளுரைத்து முழங்குவார்கள்.
கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் வாலஸின் நூல்களையும் பொதுவாக உயிரியல் நூல்களையும் அவ்வப்பொழுது படித்து வந்தேன். ஸ்மில் புத்தகத்தை தேடினேன் – வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு நூல்கள் இருந்தன. டர்பைன்களை பற்றி, அவருடைய Prime Movers of Globalization என்ற நூலை அங்கேயே படித்தேன். குறிப்பாக நீராவி டர்பைனின்றி மின்சார உற்பத்தியும், டீசல் டர்பைன் இன்றி கப்பல்களோ விமானங்களோ ரயில்களோ இயங்காது என்றும்; அவற்றின் வரலாறும், பொறியியல் முன்னேற்றமும், இருபதாம் நூற்றாண்டில் செல்வப்பெருக்கிற்கும் அன்றாட வாழ்வில் அவற்றின் முக்கியத்துவமும் தெள்ளந்தெளிவாய் புரிந்தன. ஒரு சில இடங்களில் பொறியியல் புரியவில்லை; நான் மெக்கானிகல் இஞ்சினியரிங் படித்ததில்லை, பெட்ரோல் டீசல் இஞ்சின் பற்றி கொஞ்சமே தெரியும். டர்பைன் தத்துவம் தெரியவே தெரியாது என்று அப்பொழுது புரிந்து கொண்டேன்.
அறியாமை
ஜாரட் டைமண்டின் மனதின் முன்வராலாற்று நூலையும், தாமஸ் ஃப்ரீட்மனின் உலகமயமாக்கல் நூலையும், கல்கியின் சிவகாமியின் சபதம் படித்து, என் அறியாமை இவ்வளவு பெரிதா என்று வியந்தேன், வெட்கப்பட்டேன். சார்ல்ஸ் ஆலனின் நூலும், தாமஸ் ட்ரௌட்மனின் நூலும், ஹாகரின் நூலும், ஆலன் பெட்டியின் கட்டுரை தொகுப்பும் இதே தாக்கத்தை வெட்கத்தை ஏக்கத்தை ஏற்படுத்தின. ராமசந்திர குஹாவின் “இந்தியாவிற்கு பின் காந்தி” வரலாற்று நூல் வெளிவந்தது – நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க் புத்தகக்கடையில் அவர் உரை கேட்டேன். புத்தகத்தில் பசுமை புரட்சி பற்றியோ நார்மன் போர்லாக் என்ற பெயரோ இல்லை. இது என்ன வரலாற்று புத்தகம்? சலித்தது. குஹாவிற்கு ஈமெயில் அனுப்பினேன், சொத்தையாய் பதில் கிடைத்தது. சிந்தித்ததில் எல்லா வரலாற்று நூல்களும் பொதுவாக அரசியலோ கலையோ தழுவி தான் உள்ளன, விஞ்ஞானம் தொழில்நுட்பம் செல்வபெருக்கம் தழுவி வருவதில்லை என்று தோன்றியது.
நம்
பள்ளிகளில் விடுதலை போராட்டம் மட்டும் தானே படிக்கிறோம். மின்சாரமும், மோட்டர் காரும்,
தொழிற்சாலைகளும், காகிதமும், பாலமும், ரயிலும் ஏதோ நாட்டை அழித்த நயவஞ்சக வெள்ளையன்
சதிபோலவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
“இருபதாம்நூற்றாண்டை படைத்த கதை” என்ற வஷ்லவ் ஸ்மில்லின் நூலை தேர்ந்து படித்தேன்.
மிரட்சி.
எடிசனின் சாதனை எத்தகையது. அவர் எப்படி வரலாற்றில் பிரமாண்டமாக நிற்கிறார்.
மின்
விளக்கும் ஒலித்தட்டும் எடிசனின் சாதனை என்று நாம் பள்ளிப்பாடத்தில் படிக்கிறோம். மின்விளக்கல்ல,
ஆராய்ச்சி பிறிவை படைத்ததே எடிசனின் மாபெரும் வரலாற்று காணிக்கை என்று வாதிடுவோரும்
உண்டு. ஸ்மில்லின் எழுத்தில் எடிசனின் தொலை நோக்குப் பார்வையையும், திட்டமிடும்
திறமையையும் அற்புதமாய் சொல்கிறார்.
எடிசனின் சாதனை
மின்
விளக்கு தயாரிக்க பலர் முயன்றனர். ஆனால் ஒரு விளக்கு எறிந்தால் போதாது. நீண்ட நேரம்
எறிய வேண்டும். மின்சார உற்பத்திக்கு டைனமோ ஜெனரேட்டர் வேண்டும், நிலக்கரி வேண்டும்.
மின்கம்பி வேண்டும். மின்சாரம் வோல்டேஞ் எகிரிகுதித்தால் சேதமாகாமல் தடுக்க ஃப்யூஸ்
வேண்டும். கம்பெனி நடத்தி லாபம் செய்ய முதலீடு வேண்டும், மின்வணிகம் தொடர மின் பயன்
அளந்து கட்டணம் வசூலிக்க மின்சார மீட்டர் வேண்டும். இவை எல்லாவற்றையும் வேண்டும் என்று
உணர்ந்த ஒரே விஞ்ஞானி, மனிதன் எடிசன் மட்டும் தான்.
மின்
விளக்கு ஆய்வு நடக்கும் போதே இக்கருவிகளையும் உருவாக்கும் ஆய்வையும் எடிசன் மேற்கொண்டார்.
படிக்க படிக்க அடுக்கடுக்காய் மிரண்டேன். நிலக்கரி சக்தியில் நீராவி செய்யும் இயந்திரங்களை
தயாரிக்கும் கம்பெனிகள் அன்றே இருந்தன : ஜேம்ஸ் வாட் தொடங்கி வைத்த தொழிற்சாலை புரட்சியால்.
ஆனால் அவற்றை வைத்து மின்சாரம் செய்யும் டைனமோ செய்யவேண்டும். அன்று காரும் லாரியும்
கிடையாது, நிலக்கரி சுரங்கத்திலிருந்து ரயிலிலும், ரயிலி நிலையத்திலிருந்து குதிரை
வண்டியிலும் இந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு வர வேண்டும்.
மிக
முக்கியமாக, மற்றவரெல்லாம் இரு அடிப்படை மின்சார கொள்கைகளை உள்வாங்கவில்லை. சீரீஸ் பேரலெல் மின்சார வித்தியாசம் ஒன்று. பேரலில் (பக்க இணைப்பில்) எல்லாம் ஒரே வோல்டேஜ்ஜில் இயங்கும், தனித்தனியாக்
ஸ்விட்ச் வைக்கலாம், மீட்டர் வைக்கலாம். இரண்டாம் கொள்கை மெல்லிய கம்பி, உயர்ந்த ரெஸிஸ்டன்ஸ்:
கம்பி செலவு குறையவும், கனமின்றி இருக்கவும், பளிச்சிட்டு ஒளிவீசவும், இவை முக்கியம்.
இது
மட்டுமின்றி வேகமாக சூடாகி மிளிர வேண்டும், சீக்கிரம் எரிந்து விட கூடாது, மலிவாக இருக்கவேண்டும்.
எடிசனின்
வெற்றிகள் மட்டும் போதவில்லை மின்சார புரட்சிக்கு. டைரக்ட் கரண்ட் (நேரோட்டம்) பிடிவாதத்தில் எடிசனுக்கு
வரலாற்றில் கெட்டபெயர்; எடிசனுக்கும் சிந்தை சருக்கும். இதில் நிக்கோலா டெஸ்லாவின்
ஆல்டர்ணெட்டிங் கரண்ட் (மாறுதிசை மின்னோட்டம்) வழி வகுத்தது. இண்டக்ஷன் மோட்டார் டெஸ்லாவின் மற்றொரு பங்கு
: எடிசனை விட பெரும் மேதாவியாகவும், தொலைநோக்குள்ளவராகவும், எடிசனால் ஏமாற்ற பட்டவருமாக
டெஸ்லாவை பலர் இன்று கருதுவதும் உண்டு. இது அபாண்டம் என்றே நான் நினைக்கிறேன். மற்றும்,
சத்தமின்றி இயங்கும் ட்ரான்ஸ்ஃபார்மர்களின் பங்கையும் வகலச் ஸ்மில் விளக்குகிறார்.
டர்பைன் இன்றி இவ்வளவு மலிவில் மின்சாரம் இல்லை என்பதை எண்ணோடும் படமோடும் விலையோடும்,
அவற்றை ஆய்ந்த அளித்து அறியப்படாத சார்ல்ஸ் ஆல்கர்னான் பார்ஸன்ஸ் பற்றியும் நன்றாய்
எழுதியுள்ளார்.
இலக்கிய பஞ்சம்
இதற்கு
எழுத தமிழில் சொற்களின்றி தவிக்கிறேன் : மற்று பல மொழிகளிலும் இல்லையென்றே யூகிக்கிறேன்
– இதை பற்றி அறியவோ படிக்கவோ தமிழ் சமுதாயத்திற்கு 100 ஆண்டு ஆர்வம் இல்லாததால்.
மின்விசிறி,
தொலைபேசி, வானொலி பெட்டி, தொலைக்காட்சி, துணி தோய்க்கும் இயந்திரம், குளிர் பெட்டி
ஃப்ரிட்ஜ், குளிர் சாதன ஏசி, கணிணி இவை யாவும் செல்வந்தரின் சொகுசில்லை அன்றாட வாழ்வின்
யதார்த்தம். மிகச்சாதாரணமான அற்புதங்களை நாம் பாராட்டுவதில்லை, கொண்டாடுவதில்லை. ஏன்?
அறிவாற்றல் போதாது என்றோ உணர்ச்சி பரவசம் ஏற்படவில்லை என்றோ இயந்திரத்தின் மேல் ஈர்ப்பு
இல்லை என்றொ சொல்லலாம். நான் ஏற்கவில்லை. அதற்கேற்ற இலக்கியமும், சொல்வளமும், ரசிப்பு
திறனும், உவமைகளும், உன்னதத்தை சொல்லும் புலவர்களும் கலைஞர்களும் இல்லை என்றே நினைக்கிறேன்.
விஞ்ஞானத்திற்கு,
குறிப்பாக பொறியியலுக்கு ஒரு வால்மீகி இல்லை. ஜுல்ஸ் வெர்ணும், ஆர்த்துர் கிளார்க்கும்
ஓரளவே இதை செய்தனர். ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலேஸ் உயிரியலின், பரிணாம தத்துவத்தின் வால்மீகி,
டார்வினை மிஞ்சி. எனக்கு வஷ்லவ் ஸ்மில் எடிசனின் வால்மீகியாய் தெறிகிறார். மைக்ரோசாஃப்ட்
நிறுவனர் பில் கேட்ஸ், சமீபத்தில், “நான் மிகவும் எதிர்ப்பார்த்து படிப்பது வஷ்லவ் ஸ்மில்லின் புத்தகங்களையே” என்று அரைகூவி, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். நண்பர் வி.எஸ்.எஸ்
ஐயர், எடிசனையும் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸையும் ஒப்பிட்ட வஷ்லவ் கட்டுரை படித்து
புல்லரித்து போனார். நீங்களும் படிக்கலாம்.
1. மின்சாரத்தின் ஆரம்பகால வரலாறு - ஜெஃப் பீஸாஸ் உரை
2. உயிரியலின் அறுவடை - வஷ்லவ் ஸ்மில் நூலின் பில் கேட்ஸ் விமர்சனம்
21 மார்ச் 2016 : திருத்தம் இதுநாள் வரை அவர் பெயர் உச்சரிப்பு வக்லவ் என்று தவறாக நினைத்தேன். வஷ்லவ் என்பதே சரியான உச்சரிப்பு என்று இந்த வீடியோ காணும்போது தெரிந்தது. மாற்றிவிட்டேன்.
தங்கள் வாசிப்பு ஆச்சரியத்தைத் தருகிறது.
ReplyDeleteதருமி: நான் வாசித்த நூலை எழுதிய வஷ்லவ் ஸ்மில்லை அல்லவா மெச்ச வேண்டும். அதையும் தாண்டி அவரை தூண்டிய பொறியாளரையும் சாதனையாளரையும் மெச்ச வேண்டும். என் வாசிப்பில் ஆச்சரியமா?
ReplyDeleteகட்டுரை மிக அழகாக இருக்கிறது.
ReplyDeleteதமிழில் நல்ல பொறியியல், விஞ்ஞான, கணித நூல்கள் இல்லை. விஞ்ஞானத் தத்துவத்தை விளக்கச் சரியான கலைச் சொற்கள் கூடப் பயிலத் துவங்கவில்லை.
நாம் உழைக்க வேண்டும்.
இந்நிலை மாறவேண்டும்.