எப்படியாவது
அது எனக்கு கிடைக்கவேண்டும்.
அந்த
இளைஞனின் கண்ணில் உறுதி மின்னியது. உறுதியா? பேராசையோ?
இப்பொழுது
சாத்தியமில்லை. கொஞ்சம் பொறுமை வேண்டும். நிச்சயம் கிடைக்கும். ஒரு வேளை வேறு யாருக்காவது…
இல்லை. இந்த சின்ன ஊரில் எனக்கு போட்டியில்லை. அந்த பொக்கிஷம் எனக்குதான். அவன் மனதை
படிக்க முடிந்திருந்தால் பார்ப்பவருக்கு பேராசை என்றே தோன்றியிருக்கும். உறுதி கலந்த
பேராசை.
அதையே
பார்த்துக்கொண்டிருந்தால்… வேறு யாருக்காவது அதே எண்ணம் வந்துவிடுமோ? சட்டென்று பொறமையும் ஒரு சின்ன அச்சமும் அவன் மனதில் உதித்தன. சுற்றும் முற்றும் பார்த்தான். இவனையோ இவன்
கண்ணை கவர்ந்ததையோ யாரும் கவனிக்கவேயில்லை.
சே
சே, இந்த ஊரிலா? நமக்கு போட்டியேயில்லை.
சரி
சரி மற்றதை கவனிப்போம்.
நாட்கள்
நகர்ந்தன. சம்பவமற்ற வாழ்க்கை தொடர்ந்தது.
ஒரு
நள்ளிரவு. நட்சத்திரங்களின் மங்கலான ஒளியில் வீடுகளின் நிழல்களும் மங்கலாகவே தெரிந்தன.
சின்ன ஊர்தானே. வசதிகள் குறைவே. ஏதோ கடமைக்கு உட்கார்ந்திருந்த அந்த போலீசுகாரருக்கு
சலித்தது. நம்ம ஊரில் ஒன்றுமே சுவாரசியமாக நடப்பதில்லையே.
சமூகத்துக்கு நல்லதுதான். ஆனாலும்... அவ்வப்பொழுது ஏதோ குடிகாரன் தெருவில் ஆட்டம் போடுவான். அவ்வளவுதான். அவனை கண்டுக்காமல்
இருப்பதே மேல். திருடன் ஏதுமில்லை என்பது நல்ல விஷயம் தானே. நமக்கும் இதனால் நல்ல பெயர்.
இவன் காவலில் ஒன்றும் நடக்காது என்று மக்களுக்கு ஒரு நம்பிக்கை.
அதெல்லாம்
சரி. ஆனால் எத்தனை நாள் இப்படி சும்மா பூனை மாதிரி விழித்துகிடப்பது. ஒரு கோப்பை… லேசாக
புன்னகைத்தான். மனம் ஒரு குரங்கு. சும்மா இருக்கும் புத்தி விபரீதமாக எதை எதையோ நினைக்கும்.
மாநகரத்தில் இருந்தால் இப்படி தெருவெல்லாம் இரவில் வெறிச்சுக் கிடக்காது. நள்ளிரவிலும்
அங்குமிங்கும் ஆள் நடமாட்டம் இருக்கும். அவர்களை பார்த்துக்கொண்டாவது ஏதாவது கற்பனை
தேரை நடத்தலாம். இங்கு காற்றசைவே இல்லாமல் செடியை மரத்தையும் பார்த்து என்னதான்…
ஒரு
உருவம் விறுவிறு என்று தூரத்தில் நடப்பது தெரிந்தது. அவனுக்கு தூக்கிவாரி போட்டது.
பிரமையா? சட்டென்று எழுந்தான். இருட்டுமட்டுமே தெரிந்தது. உற்றுப்பார்த்தான். அதோ!!
ஒரு ஆள் நடப்பது போல்? இல்லை இல்லை. அந்த திசையை நோக்கி நடந்தான். மங்கின இருளில் சரியாக
தெரியவில்லை.
அதோ!
ஆகா! நிழல்களுக்கு நடுவே ஒரு உருவம் விறுவிறுவென்று நடந்து சென்றது. குடிகாரன் இல்லை.
இவன் யார் இரவு மூன்று மணிக்கு நடப்பது?
“நில்”
– போலீசு குரலில் கம்பீரமாக சொன்னான். அவன் நிற்பதாக தெரியவில்லை. என்ன திமிர்! என்ன
வேகமாக நடக்கிறான். அவன் தோள் மீது ஏதோ மூட்டைபோல்! நிச்சயம் திருடன் தான்!! விடாதே
பிடி.
“டேய்!
யாரங்கே? போலீசு! நில்! ஓடாதே, நில்!” கர்ஜித்தான். சட்டென்று அந்த உருவம் ஒரு தெருவில்
திரும்பியது. தப்பித்துவிடுவானோ? ஐஐயோ! தைரியமான திருடன்! அவனை துரத்தி ஓடினான். மூச்சிரைக்க
அவன் சென்ற தெருவில் திரும்புவதற்குள் மறைந்துவிடுவானோ?
இல்லை!
அதே விறுவிறுப்புடன் அதோ நடக்கிறான். என்ன கர்வம்? என்ன மிடுக்கு? சின்ன ஊர் போலீஸ்காரன்
என்ற ஏளனமா? மீண்டும் கத்தினான். “போலீஸ்! நில்! நில், சுட்டுவிடுவேன்!”
உருவம்
நிற்பது போல் தெரிவதில்லை. வேறு வழியில்லை. துப்பாக்கி எடுத்து குறி பார்த்து சுட்டான்.
சத்தம் இரவை இடி போல் பிளந்தது. அந்த உருவம் உறைந்து நின்றது.
அந்த பயமிருக்கட்டும்.
அந்த பயமிருக்கட்டும்.
ஆனால்
தோளில் உள்ள பொட்டலத்தை கீழிறக்கவில்லை. மூச்சிரைக்க வந்த போலிஸ்காரனுக்கு ஆத்திரம்.
திருடனின் மென்னியை பிடித்தான். “சுட்டா தான் பயம் வருமோ? எங்க ஓடற? என்ன பொட்டலம்?”
அந்த
இளைஞன் அதிர்ச்சியில் பதிலேதும் சொல்லவில்லை. திருதிருவென்று விழித்தான். முதல் தடவை
திருடன் போலிருக்கு. விறுவிறு என்று நள்ளிரவில் நடந்த மிடுக்கெல்லாம் துப்பாக்கி ஒலியில்
கரைந்துவிட்டது. என்ன திருடியிருக்கான்?
“இறக்கி
வை!” பொட்டலம் இறங்கியது.
“திற!”
திறந்தான்.
புத்தகங்கள்.
பத்து பன்னிரண்டு புத்தகங்கள்.
அடச்சீசீசீசீ!
“என்ன
இது?”
“புத்தகங்கள்”
“நள்ளிரவில்
எந்த முட்டாள் புத்தகங்களை… இந்த வேளை எங்கே போகிறாய்?”
“வீட்டுக்கு”
போலீஸ்காரனுக்கு
குழப்பம்.
“நடு
ராத்திரி தான் வீட்டுக்கு போவது பழக்கமா?”
“ஆமாம்.
இப்பொழுது தான் வேலை முடிந்தது.”
“நான்
நில் என்று கத்தினேன். ஏன் நிற்கவில்லை? உனக்கென்ன செவிடா?”
இளைஞனின்
முகம் கொஞ்சம் தொங்கியது. “ஆமாம். நான் கொஞ்சம் செவிடு. துப்பாக்கி சத்தம் கேட்டுதான்
நின்றேன்.”
பெருமூச்சுவிட்டான்
போலீசுக்காரன். நல்ல வேளை, ஒரு அப்பாவியை சுடவில்லை. ஒரு குடும்பம் ஒரு மகனை இழந்திருக்கும்.
நானும் மன நிம்மதியை இழந்திருப்பேன். இந்த புத்தக மூட்டையை போய் ஏதோ பொக்கிஷம் என்று
நினைத்து…
“நல்ல
வேளை என் குறி தப்பியது. எங்கே உன் வீடு?”
“இதோ
இங்கே தான்.”
“அதென்ன
ராத்திரி இரண்டு மணி வரைக்கும் வேலை??”
“அது
வந்து – தந்தி ஆபிஸ்.”
“ம்ம்ம்…
உன் பெயர் என்ன?”
“எடிசன்.
தாமஸ் எடிசன்.”
பின்குறிப்பு இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை. “எடிசனின் வாழ்வும்
படைப்புகளும்” என்ற நூலில் லூயிவில் என்ற ஊரில் அவர் தந்தி தொழில் செய்த காலத்தில்
இச்சம்பவம் நடந்தது.
தொடர்புள்ள பதிவுகள்