Tuesday, 12 June 2018

சென்னை நகரத்து நூலகங்கள்தீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த்தியும் பிரியா தியாகராசனும் பபாசி நிறுவனத்தின் சார்பில் கேட்டனர். மகிழ்ந்தே ஒப்புக்கொண்டேன். ஒரு சில நூலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலர்களோடு பேசி, சில தகவல்களை சேகரித்தேன். 

சிறு வயதிலேயே கன்னிமாரா நூலகத்திற்கு என் தாய் புஷ்பாவுடன் சென்றுள்ளேன். அம்மா எத்திராஜ் கல்லூரியில் எம்.ஃபில். பொருளியல் படித்துவந்தாள். சில சனிஞாயிறு அன்று கன்னிமாரா செல்லும்போது என்னையும் அழைத்துச்செல்வாள்.

கன்னிமாரா நூலக புதிய கட்டத்தில்
கன்னிமாரா நூலக பழைய கட்டத்தில்

மதறாஸ் இலக்கிய சங்க நூலகம்

 அக்காலத்தில் தமிழ் படிக்கும் ஆர்வமேதும் இல்லை. குமுதம் கல்கி ஆனந்தவிகடன் பத்திரிகைகளில் வரும் துணுக்கு ஓவியங்களை (கார்ட்டூன்) மட்டும் படித்து ரசிப்பேன். எப்பொழுதாவது பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகளை வாசித்து காட்டுவாள்; ரசகுண்டு பேரை கேட்டாலே சிரிப்பு வரும். எனக்கு ஒன்பது வயதிருக்கும். ஆங்கிலத்தில் படிப்பதிலும் ஆர்வமில்லை. ஆனால் சென்னையிலிருந்து புனே செல்லும் ரயிலில், பொழுது போக்க யாரோ கருடன் எனும் அமர் சித்ர கதா ஓவியக்கதையை (காமிக் புத்தகம்) வாங்கி கொடுக்க, காமிக்புக் மோகம் பிறந்தது. ஆங்கிலம் மட்டுமே. முப்பது வயது வரை தமிழில் ஆர்வம் வரவில்லை.

சிறுவயதில் தந்தையுடன் ஓரிரு முறை மயிலை ரணாடே நூலகத்திற்கு சென்றுள்ளேன் – ஏதோ ஒரிரு மாலை வேளை ஏதாவது சில மாதாந்திர பத்திரிகை அல்ல செய்தித்தாளை படிக்க போவார். அதன் வாசலில் நிற்கும் நடமாடும் தபால்வண்டியை (சிவப்பு வேன்) ஒரு முறை அவர் காட்டினார். வாய்பிளந்தேன்.

கடந்த சில வருடங்களாய் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திலும் அடையாறு கே.வி.சர்மா நூலக்த்திலும் பற்பல நாட்கள் நாலைந்து மணிநேரம் படிக்கும் இன்பத்தில் மூழ்கியுள்ளேன். உவேசா நூலகத்திற்கு நரசையா அழைத்து சென்று தமிழ் தாத்தாவின் கையெழுத்தும் சன்னதும் ஓலைச்சுவடிகளையும் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வாழ்த்தையும் பார்த்தது மறக்க முடியாத திருநாள். அங்கு நண்பர் உத்திராடம் பணியாற்றி வருகிறார்; அவரைக் கண்டதும் ஒரு இன்ப அதிர்ச்சி. அவர் சென்னை கிறுத்துவ கல்லூரி பேராசிரியர் பாலுசாமியின் மாணவர்; பல முறை பேசி பழகியுள்ளோம். உவேசா நூலகத்தை பற்றிய பல தகவல்களை அளித்ததுடன், தே.சிவகணேஷ், ஐ.சிவகுமார் எழுதிய “சென்னை நூலகங்கள்” என்ற புத்தகத்தையும் காட்டினார். கைத்தல நிறைகனி! எல்லா நூலகத்திலும் வாசலிலே வரவேற்கும் மாவிலைத் தோரணம் போல இந்நூலை காட்சி வைக்கலாம்.

இருளில் ஒலித்த குரல்

ஒளிமயமான பிரதீப் உரை

நண்பர்கள் ராம்கி, சேவாலயா முரளிதரன், காந்தி நிலையம் அண்ணாமலை ஆகியோர் அறிவுருத்தி சைதை காந்தி நூலகம் பற்றி அறிந்தேன். அதன் நிறுவனர் மகாலிங்கத்தின் மகன் நித்தியானந்தரை பலமுறை டக்கர் பாப்பா காந்தி நிலையத்தில் புதன்கிழமை நூலாய்வுகளில் சந்தித்துள்ளேன். மகாலிங்கம் ஆச்சரியமானவர். கல்கி, ராஜாஜி, மாபொசி, ராஜம் ராமசாமி, கண்ணதாசன், பரளி சு நெல்லியப்பர் என்ற பல ஜாம்பவான்கள் தன் நூலகத்திற்கு வந்த வரலாற்று சம்பவங்களை பேசி நெகிழ வைத்தார். 

அதே போல் திருவல்லிக்கேணி கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்து நிறுவனர்கள் நரசிம்மன்னும் பார்த்தசாரதியும் அன்பாக பேசியதோடு, இதே ஜாம்பவான்கள் தங்கள் நூலகத்துக்கு வந்ததை சொல்லி அசரவைத்தனர். எம்.எஸ்.விசுவனாதனுக்கு “மெல்லிசை மன்னர்” என்ற பட்டத்தை அளித்ததே இவர்களது திருவல்லிக்கேணி கலாச்சார மன்றமே என்று தெரிந்ததும், நூலகத்தில் புத்தகத்தை தாண்டி எத்தனை அதிசயங்கள் உள்ளன என்பதை புரியவைத்தது.

அந்நாளில் சேப்பாக்கத்தில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கிய அரசு கீழ்திசை சுவடி நூலகத்திற்கு சென்றபோது, அதன் இயக்குனர் சந்திரமோகன் அவர்களே பொறுத்து பல தகவல்களை அளித்தார். இந்த சுவடி நூலகம் சமீபத்தில் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்கு இடம் மாறியுள்ளது. வரலாற்று புகழோடு அரிதான களஞ்சியமாக திகழும் நூலகம் என்பதால், ஓலைச்சுவடிகளையும் அவற்றின் பாதுகாப்பு முறைகளையும் படமெடுத்துக்கொள்ளலாமா என்று அனுமதி கேட்டேன். மறுத்துவிட்டார். ஆனால் தன்னுடைய கணினியில் வைத்திருந்த படங்களை படமெடுக்க அனுமதித்தார். அடுத்த நாள் அடையாறு நூலகமும் இதைப்போல் அனுமதி மறுத்தது. பின்னாளில் அடையாறு நதி வரலாற்று தேடலின் போது நண்பர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அனுமதி பெற்று, அடையாறு நூலகத்து அரிய நூல்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முகமதிய நூலகத்தின் மேலாளரை பார்த்து தகவல்கள் பெற்றுக்கொள்ள நண்பர் கோம்பை அன்வர் அறிவுருத்தினார். மூன்று முறை சென்றும் அவரை சந்திக்க முடியவில்லை. மயிலை ராமகிருஷ்ண மடத்து நூலகத்திலும் மேலாளர் சென்ற போது இல்லை, அவர் அனுமதியின்றி ஒன்றும் செய்ய முடியவில்லை, படம் கூட எடுக்கவில்லை.

ஒரு மணி நேர உரைக்கு தயாரான பின் நாற்பது நிமிடமாக சுருங்கியது. கொஞ்சம் வேகவேகமாக பேசினேன். 1950களோடு நிறுத்திக்கொள்ளும் நிலமை, சில நூலகங்களை பற்றி பேச இயலவில்லை. இணையமே இன்று அனைவருக்கும் நூலகமாயினும், காகித புத்தக நூலகங்கள் வழக்கொழியவில்லை.

காணொளி பதிவாகவில்லை என்பதால் ஒலிப்பதிவுடன் படங்களை சேர்த்து காணொளியை நான் படைத்து இணையத்தில் ஏற்றியுள்ளேன். கீழே காணலாம்.

வத்தல்குழம்பு சம்பவம், சின்ன மழையில் தவித்தாலும் பெருவெள்ளத்தில் தப்பித்த நூலகம், ஆங்கிலேய உவேசா என்று அழைக்க தகுந்தவர் யார், எகிப்து மன்னர் கொடுத்த பரிசு, நூலகவியலின் தந்தை, அவர் வகுத்த ஐந்து விதிகள், தமிழில் மருத்துவ நூலை எழுதிய அமெரிக்கர், சிவலிங்க வடிவிலுள்ள ஓலைச்சுவடி நூல், திபெத்திய திபிதகம் என்று பல சுவையான தகவல்கள் இவ்வுரையாய்வு தேடலின் போது கிடைத்தன. இதையெல்லாம் காணொளியில் பார்க்கலாம். இந்த நூலகங்களுக்கு நேரில் சென்றும் காணலாம்.  

 சென்னை நகரத்து நூலகங்கள் - video

உறவுடை சுட்டிகள்

ஞானதேவதைகள்அமெரிக்க தேசிய நூலகத்து ஓவியங்கள்
ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய உவேசா வாழ்த்து
ஒரு ஆங்கிலேயனின் தமிழ் கல்வெட்டு
இந்த உரையின் ஒலிப்பதிவு


No comments:

Post a comment