Saturday, 28 March 2020

லண்டன் சுத்தமாகிய வரலாறு


The Thames and the Cooum (ஆங்கிலத்தில் இந்த கட்டுரை)


எச்சரிக்கை சாக்கடை, நோய், சாணி என்று பல விஷயங்களை அலசும் கட்டுரை. சாப்பாட்டு வேளையில் படிப்பதை தவிர்க்கவும்.

கூவம் நதி

இன்று பாரதத்தை வருமை வாடும் நாடாகவும், ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா ஜப்பான் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை தூய்மையான பணக்கார நாடுகள் என்றும் உலகம் கருதுகிறது. ஓரளவுக்கு இது நிதர்சனம். பொது இடங்களில் குப்பை, தெருவோரத்திலும் தண்டவாள ஓரத்திலும் மலஜல கழிப்புகளும் பாரதத்தில் தினசரி காட்சி.

சென்னையில் ஓடும் கூவம் ஒரு மோசமான சாக்கடை. அடையாறு நதியும் பக்கிங்காங் கால்வாயும் சாக்கடையாக திகழ்வதால் பலரால் கூவம் என்றே அழைக்கப்படுகின்றன. சென்னையில் ஓடும் மற்ற சாக்கடைகளும், கால்வாய்களும், கூவம் என்று அழைக்கப்படுகின்றன.

சினிமாவிலும் டிவியிலும் லண்டன் நகத்தை காணும் போது வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த சீர்மல்கும் நகரத்தில் நீரோடும் தேம்ஸ் நதியையும் பல பாலங்களையும் காணலாம். அந்த தூய்மை நம் நாட்டிற்கு என்று வரும் என்று ஏங்காதவரில்லை.

சென்னையில் கூவம் நதி
ஆனால்... பத்தொன்பதாம் நூற்றாண்டில் லண்டன் இன்றைய பாரதத்து நகரங்களை விட மிக அசுத்தமாக இருந்தது. இன்றைய கூவத்தை விட லண்டனில் ஓடும் தேம்ஸ் நதி பன் மடங்கு மோசமான சாக்கடையாக இருந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் ரோமாபுரி சீர்குலைந்தது. அதற்கு பின் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் முதல் மாநகரமாக லண்டன் வளர்ந்து வந்தது. உலகின் மிகப்பெரிய குப்பைக்கூடமாகவும் லண்டன் திகழ்ந்தது. அன்று லண்டன் நகரில் மட்டுமல்ல மேலை நாடுகள் எங்கும் இன்று போல் நவீன கழிப்பிடங்களோ, பாதாள சாக்கடையோ கிடையாது.

மன்னராயினும், செல்வந்தராயினும், வீட்டில் ஒரு பானைதான் அவர்களது கழிப்பிடம். காலைகடன்களை கழித்த பின் வீட்டு வேலைக்காரர்கள் இந்த பானைகளில் உள்ள மலஜலங்களை ஜன்னல் வழியாக தெருவில் வீசுமளவு பல மோசமான சம்பவங்கள் நடந்தன. பெரும்பான்மையாக, மலங்கள் சேகரிக்கப்பட்டு வண்டிகளில் ஏற்றி ஊருக்கு வெளியே வயல்களுக்கு எருவாக எடுத்து செல்லப்பட்டது.

மற்றவரெல்லாம் வீட்டுக்கு வெளியே வயலிலோ தோப்பிலோ மலம் கழிக்கவேண்டும். காகிதம் இல்லை. வருடத்தில் ஆறு மாதங்கள் கடும் குளிர் காலம், உரைந்து போன நீரால் சுத்தம் செய்துகொள்ள முடியாது. குளிப்பதே அபூர்வம். பதினாறாம் நூற்றாண்டு வரை நிலக்கரி கிடைக்கவில்லை. விறகு வாங்கி நீரை கொதிக்கவைத்து தான் குளிக்கவே முடியும். குளிர்காலம் ஆறு மாசம் பெரும்பான்மையான மக்கள் குளிக்கவே மாட்டார்கள். பதினாங்காம் நூற்றாண்டிலும், பதினேழாம் நூற்றாண்டிலும் ஐரோப்பா முழுவதும் பரவிய பிளேக் என்னும் மகாமாரி தொற்றுநோய்க்கு இதுவும் ஒரு காரணம். (சிற்சில சுகாதார முன்னேற்றங்களால் எப்படி ஐரோப்பாவின் சுகாதாரம் முன்னேறியது என்று ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் எனும் விஞ்ஞானி “வேக்சினேஷன் - ஒரு மாயை” என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். தடுப்பூசியை கண்டிக்கும் புத்தகம் என்பதால் அது அச்சிலும் இல்லை, விஞ்ஞானிகள் படிப்பதும் இல்லை).

சுகாதாரத்தின் வரலாற்றையோ மேற்கத்திய நாகரிகத்தின் வருமையையோ நாம் யாரும் படிப்பதில்லை.
லண்டனில் ஓடும் தேம்ஸ் நதி

தேம்ஸ் நதியின் நிலை

மீண்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டு லண்டனுக்கு வருவோம். குறிப்பாக 1850கள். உலகின் கால் பகுதியை கிழக்கு இந்தியா கம்பெனி ஆண்ட காலம். விக்டோரியா இங்கிலாந்துக்கு ராணியாகவும் இந்தியாவுக்கு சக்கரவர்த்தினி என்றும் பட்டம் பெற்ற காலம். சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சியை பரிந்துரைத்து நூல் எழுதிய காலம். மங்கள் பாண்டே, ஜான்சி ராணி, போன்றோர் தூண்டுதலில் சிப்பாய் கலவரம் நடந்த காலம். இந்த வரலாற்று சம்பவங்கள் நடந்தபோது இங்கிலாந்தின் பாராளுமன்றம் லண்டனில் இல்லை. தேம்ஸ் நதியின் துர்நாற்றம் தாங்கமுடியாமல் லண்டனை விட்டே ஓடிவிட்டனர். “மாபெரும் துர்நாற்றம் ”The Great Stink" (தி கிரேட் ஸ்டிங்க்) என்று இதற்கு ஆங்கிலேய பத்திரிகைகள் பெயர் வைத்தன. 
லண்டன் சுத்தமாகிய வரலாறு
ஆம்! சென்னை, பம்பாய், கல்கட்டா வெய்யில் தாங்க முடியாமல், ஊட்டி, லோனாவ்லா, சிம்லா என்று கோடைக்கால தலைநகரங்களை இந்தியாவில் உறுவாக்கிய ஆங்கிலேயர், லண்டனின் துர்நாற்றம் தாங்காமல் மாற்று தலைநகரை இங்கிலாந்தில் அமைத்தனர். தேம்ஸ் நதியையும் லண்டனையும் சுத்தம் செய்ய பல திட்டங்கள் வடிக்கப்பட்டன. எதிர்ப்புகளும் பலமாக எழுந்தன. சாட்விக் என்பவர் ஒரு திட்டம் வகுத்து பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தார். லண்டன் டைம்ஸ் நாளிதழ் அதை கடுமையாக எதிர்த்தது. “இங்கிலாந்து சுத்தமாக விரும்புகிறது ஆனால் சாட்விக் எங்களை சுத்தம் செய்ய வேண்டாம்” என்றது ஒரு தலையங்கம்.

மைக்கேல் ஃபாரடே எனும் அறிவியல் மேதையிடம் இந்த துர்நாற்றத்தை போக்க வழிகேட்கும் சித்திரங்கள் அச்சில் வெளியாகின (படத்தில் காணலாம்).
மைக்கேல் ஃபாரடேவின் திட்டம்
ஒரு அழுக்கு ஆணாக தேம்ஸ் நதி

“நம்மால் இந்தியாவை கைப்பற்ற முடிந்தது; உலகின் எல்லைகளுக்கு கப்பலகளை அனுப்ப முடிகிறது, நாட்டின் ஓயாத கடன்களுக்கு வட்டி கட்ட முடிகிறது, பெரும் செல்வத்தை உருவாக்கி, உலகையே ஆள முடிகிறது, ஆனால இந்த தேம்ஸ் நதியை மட்டும் சுத்தம் செய்ய முடியவில்லை” என்று 1858 இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ் பத்திரிகை புலம்பியது.

“செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடுகிறோம், மலிவாக இணைய செல்போன் வசதிகள் செய்கிறோம், பற்பல கணினி மென்பொருள் கம்பெனி நடத்துகிறோம், கூவத்தை சுத்தம் செய்யமுடியவல்லை,” என்று இந்தியாவில் இதே போல் புலம்பலாம்.

இறந்தாலும் ஆயிரம் பொன்

காலரா தொற்றுநோய் லண்டனில் பரவி பல உயிர்களை பலி வாங்கியது. லண்டன் சேரிகளில் மாண்ட ஏழைகள் அதிகம். ஆனால் இறந்தவர்கள் ஏழைகள் மட்டுமல்ல. உலகின் மிக வல்லமை படைத்த விக்டோரியா ராணியின் கணவர், இளவரசர் ஆல்பர்ட்டும் இறந்தார். நாற்பத்தி இரண்டு சாக்கடைகள் சூழ்ந்த அரண்மனையில் ஆல்பர்ட் இறந்தார், என்று எழுதுகிறார் பீட்டர் மெடாவர் (நூல் : அறிவியலின் எல்லை – The Limits of Science தி லிமிட்ஸ் ஆஃப் சயனஸ்). விதவையான விக்டோரிய தாங்கமுடியாத வருத்தத்தில் லண்டனை சுத்தம் செய்ய ஆணையிட்டார். உலக வரலாற்றிலேயே மனித சமூகத்திற்கு மிகவும் பயனளித்த மரணம், இளவரசர் ஆல்பர்ட்டின் மரணம். இதனால் தான் லண்டனில்  நவீன உலகின் முதல் பாதாள சாக்கடை அமைப்பு அறங்கேறியது. பின்னர் உலகெங்கும் நவீன கழிப்பிட வசதிகள் பரவின. இந்தியாவில் கழிப்பிடங்களை லண்டன் என்று அழைக்கும் வழக்கமிருந்தது; சமீபகாலமாக இல்லை.

பல சட்டங்கள் இயற்றி பெரும் பாடு பட்டு, தேம்ஸ் நதியில் கழிவுகள் நுழைவதை குறைத்தனர். பாதாள சாக்கடைகள் கட்டப்பட்டன. கழிவுகளை ஏற்ற இறக்கம் செய்யும் பம்புகள் தயாரிக்கப்பட்டன. ஜோசப் பால்சாகட் என்ற பொறியாளரின் தலைமையில் இது நடந்தது. முதல் சாக்கடை பம்பு மையத்தை இளவரசர் எடுவர்ட் திறந்து வைத்தார்.

கிராஸ்நெஸ் பம்பு மையம், இங்கிலாந்து

மாசை ஒழித்த மோட்டார் வண்டிகள்

இங்கே குதிரைகளையும் குறிப்பிட வேண்டும். குதிரைச்சாணியை குறிப்பிடவேண்டும். சமீபத்தில் அமெரிக்க பொருளியல் வல்லுனர் ஸ்டீவன் லெவிட்ட எழுதிய சூப்பர்ஃப்ரீக்கனாமிக்ஸ் (SuperFreakonomics) நூலில் 1890களில் நியூயார்க் நகரத்து குதிரைச்சாணி பிரச்சனையை பற்றி விரிவாக எழுதியிருந்தார். 

மாஜி அமெரிக்க துணை ஜனாதிபதி ஆல் கோர் முதல், ஸ்வீடன் நாட்டு மாணவி கிரெடா தார்ண்பெர்க் வரை, கார்பன்-டை-ஆக்ஸைட் காற்று மாசையே பெரும் மாசு பொருளாக ஊடகங்கள் ஊதிப் பெருக்கிவந்தன. ஆனால பெட்ரோல் டீசல் எஞ்சின் பொருந்திய கார்களும் பேருந்துகளும் மோட்டார்வண்டிகள் தோன்றும் முன், குதிரைச்சாணியே மேல்நாடுகளில் பரவலான மாசு பொருளாய் திகழ்ந்தது. 

பாரத நாட்டில், வெள்ளைக்காரர் வருகைக்கு முன்னர் படைகளும் பணக்காரர்களும் மட்டுமே குதிரைகள் வைத்திருந்தனர். பாரதத்தில் மாடுகளே அதிகம். மாடுகளை கூட்டம் கூட்டமாக மாலை நேரங்களில் ஊருக்குள் ஓட்டிவந்து கோவில்களிலும் வீடுகளிலும் உள்ள கோசாலைகளில் கட்டிவைப்பது பழக்கம். அப்பொழுது தெருவில் மாடுகள் சாணி போட்டுக்கொண்டே போகும். மாட்டு சாணத்தை பஞ்சகவ்யத்தில் ஒன்றாக, புனிதப்பொருளாக ஹிந்து மக்கள் கருதியதால், எல்லா ஜாதி மக்களும் அந்த மாட்டுச்சாணியை அள்ளி தங்கள் வீட்டுப்பயனுக்கு சேகரித்து வைப்பது பழக்கம். 1980கள் வரை கிராமத்து வீதிகள் மட்டுமல்ல, நகரத்து மண் வீதிகளையும், வீட்டு வாசல்களையும் காலை எழுந்தவுடன் மாட்டுச்சாண நீரால் தெளித்து சுத்தம் படுத்துவார்கள். திராவிட மொழி குடும்பத்தை கண்டுபிடித்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ், சென்னையில் தடுப்பூசி முறையை அறிமுகம் செய்த போது, அதை ஆறாம் பஞ்சகவ்யம் என்று பட்டம் சூட்டி பிரச்சாரம் செய்தார். 

பாரதத்தை தவிர எங்கும் பசுக்களுக்கோ மாட்டுச்சாணிக்கோ இந்த புனித மரியாதை கிடையாது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கோச்சுவண்டிகளை இழுக்கும் குதிரைகளின் சாணிக்கும், தனி நபர் ஓட்டிய குதிரைகளின் சாணிக்கும் எந்த புனிதமும் கிடையாது. 

மழைபெய்து அந்த சாணியை கால்வாய்களிலும் நதிகளிலும் தள்ளிக்கொண்டு போனால் தான் ஊர் தெருக்கள் எல்லாம் சுத்தமாகும். ஒரு காலத்தில் குதிரைச்சாணியை எருவாக விற்றார்கள். பின்னர் இலவசமாக வயல்களுக்கு அனுப்பினார்கள். ஒரு கால கட்டத்தில் எங்களுக்கு இவ்வளவு மலை மலையாய் குதிரைச்சாணி வேண்டாம் என்று விவசாயிகள் தடுத்தார்கள். இதற்கு ஒரு தீர்வுகாண நியூயார்க் நகராட்சி ஒரு பத்து நாள் மாநாடு கூட்டி, எங்களால் தீர்க்க முடியாது என்று மூன்றாம் நாளே மாநாட்டை இழுத்து மூடி விட்டனர்.

அதிஷ்டானத்தின் ரகசியம்

இந்த சாணி கலந்த சகுதி தங்கள் தெருவிலிருந்து இல்லத்தில் புகாமல் தடுக்க, பணம்படைத்தவர்கள் நாலைந்து படியேறும் அளவு அதிஷ்டானம் கொண்ட வீடுகளை கட்டினர். இன்றும் நியு யார்க், லண்டன் போன்ற நகரங்களுக்கு சென்றால் இந்த மாதிரி நூறு வருடத்திற்கும் முன் கட்டப்பட்ட வீடுகளை பார்க்கலாம். அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் எனும் பல மாடி குடியிருப்புகள், 1950களில் தான் இந்த நாடுகளில் தோன்றின. 1920களிலேயே மோட்டார் வாகனங்களின் வருகையால் குதிரைவண்டிகள் மலியத்தொடங்கின. குஜராத் மாநிலத்தில் சித்தபுரம் என்று ஒரு ஊர் உள்ளது. போஹ்ரா முஸ்லிம்கள் இந்த ஊரில் அதிகம். அவர்கள் பதினேழாம் பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வணிகம் செய்து கட்டிய வீடுகள் என்பதால், அந்த காலத்து ஐரோப்பிய வீடுகளை போலவே உயர்ந்த அதிஷ்டானம் கொண்டவை. ( இக்காலத்தில் பாரத நாட்டிலோ சாலை ஒப்பந்தகாரர்கள் வருடாவருடம் சாலைகளை உயர்த்துவதால், எல்லா வீட்டு அதிஷ்டானங்களும் உயர்கின்றன. வரப்புயர என்றுரைத்த ஔவை சிரிப்பாள்).

சித்தபுரம் குஜராத் - போஹ்ரா முஸ்லிம் வீடுகள் 

மோட்டார் வண்டி வருகையால் குதிரைச்சாணி பிரச்சனை தீர்ந்தது. அரசு நடவடிக்கையாலோ சுற்றுச்சூழல் ஆர்வலர்களாலோ அல்ல.
இன்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பசுமை போராளிகளும் பெட்ரோல் டீசல் எஞ்ஜின்களை வன்மையாக கண்டித்து அதை ஒழிக்கவேண்டும் என நினைக்கின்றனர். கார்பன்-டை-ஆக்ஸைட் புகையை உலகின் பெரும் சாபமாக சித்தரிப்பது வழக்கம். குதிரைச்சாணி வரலாறு தெரிந்தால் கொஞ்சம் கூச்சல் குறையலாம்.

தென் அமெரிக்க கப்பல்கள்

வேறு ஒரு தகவலும் இங்கே பொருந்தும். ஆல்கெமி ஆஃப் ஏர் Alchemy of Air (காற்றின் ரசாயனம்) எனும் நூலில் தாமஸ் ஹாகர் தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வௌவால் சாணியும் பறவைகள் சாணியும் கப்பல் கப்பலாக வந்ததை வர்ணிக்கிறார். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் மலைமலையாய் தென் அமெரிக்க தீவுகளில் வௌவால் சாணியும் பறவைச்சாணியும் குவிந்திருந்தன. மாட்டுச்சாணம் ஆட்டுச்சாணம் பற்றாக்குறையாலும் யூரியா போன்ற செயற்கை எரு அக்காலத்தில் இல்லாததாலும், இந்த தென் அமெரிக்க வௌவால் சாணம், ஐரோப்பிய விவசாயிகளால் ஆவலுடன் வரவேற்கப்பட்டது. இந்தியாவிலிருந்து சென்ற மிளகுக்கும் காபிக்கும் சக்கரைக்கும் ஜவுளித் துணிகளுக்கும் போட்டியாக ஐரோப்பிய துறைமுகங்களில் வரவேற்கப்பட்டன. கடலில் கப்பல் வரும்போதே, துறைமுகத்தில் சாணிக்கு ஏலம் நடத்தப்பட்டது.

இருக்கிற தேம்ஸ் நதியின் துர்நாற்றம் போதாதோ? இந்த கப்பலகளின் சுமை அதை அதிகரித்தன. ஈக்களும் கொசுக்களும் பெருகி வந்தன. காற்றின் துர்நாற்றம் நோய்களை உண்டாக்கியது என்று தவறாக விஞ்ஞானிகளும் நம்பிய காலம் அது. மலேரியா நோய்க்கு இப்படிதான் பெயர் உருவானது. மல் என்றல் தீயது. ஏர் என்பது காற்று. தீயகாற்றால் வரும் நோய் மல்+ஏர் மலேரியா என்று பெயரிடப்பட்டது. அது கொசுக்கடியால் வரும் நோய் என்று பின்னர் தான் தெரிந்தது.

லண்டனில் காலரா நோய் பரவியதிற்கு கொசுக்களோ, துர்நாற்ற காற்றோ காரணமில்லை. தெருவிலேயே லட்சக்கணக்கான மக்கள் மலம் கழித்துவந்ததால், நிலத்தடி நீர் மாசுபட்டு வந்தது. பம்புகள் மூலம் நிலத்தடி நீரை எடுத்து மக்கள் குடிநீராகவும் சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர். ஜான் ஸ்னோ என்ற மருத்துவர் இந்த பம்புகள் ஏற்றிய நீரை ஆய்வு மேற்கொண்டு, இந்த மாசுபட்ட நீரே காலராவுக்கு காரணம் என்று முடிவுக்கு வந்தார். நீராய் காய்ச்சி குடிக்கவேண்டும், வடிகட்டி குடிக்கவேண்டும், இவ்விரண்டும் செய்தால் காலராவை கட்டுப்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார். இந்த வரலாற்றை ஸ்டீவன் ஜான்சனின் வீடியோவில் நீங்களே கண்டு புரிந்துகொள்ளலாம்.

எதிர்மறையாக தமிழ்நாட்டில் ஊருணி போன்ற நீர்நிலைகள் எப்படி பாதுகாக்கப்பட்டன என்பதை பத்ரி சேஷாத்ரியின் இந்த வலைப்பதிவில் படிக்கலாம் 

லண்டனை தொடர்ந்து பம்பாய் கல்கத்தாவிலும், பின்னர் மதறாஸ் ராஜதானியிலும், குறிப்பாக தலைநகர் மதறாஸில், ஆளுனர் ஹோபார்ட் துரை ஆட்சி காலத்தில் பாதாள சாக்கடை, நவீன நீர் விநியோக திட்டம் எல்லாம் வகுக்கப்பட்டது. சென்னைக்கு செயலாளராக பதவியேற்க வந்த ராபர்ட் எல்லிஸை அவர் இங்கிலாந்திலிருந்து கிளம்புமுன் ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் சந்தித்து, சென்னைக்கு பாதாள சாக்கடை திட்டம் அமைத்தால் தான் காலராவின் தாக்கம் குறையும் என்று அறிவுரித்தினார். ஆளுனர் ஹோபார்ட்டுக்கும் அவர் பல கடிதங்கள் எழுதினார். பரிதாபம்! இளவரசர் ஆல்பர்ட்டை போல் ஆளுனர் ஹோபார்ட்டும் நோய்பட்டு இறந்தார். அடுத்த கவர்னர் தலைமையில் வந்த அரசாங்கம் இந்த திட்டங்களை சுருசுருப்பாக செய்ய ஹோபார்ட்டின் மரணம் தூண்டியது. 

1864-இல், லூயி பாஸ்ச்சூர் எனும் பிரெஞ்சு விஞ்ஞானி பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகளினால் பல நோய்கள் உண்டாகின என்று நிரூபித்தார். அதை மற்ற விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள ஒரு பத்தாண்டுகள் ஆனது. 

இதற்கு முன்பே 1840களில் வியன்னா நகரத்து மருத்துவர் இக்னேஷியஸ் செம்மல்வெய்ஸ், மருத்துவர்கள் கைகழுவாமல் மருத்துவம் செய்வதால் பல நோயாளிகள் மருத்தவமனைகளில் இறக்கிறார்கள் என்று எச்சரிக்கை எழுப்பினார். கை கழுவுவதை கௌரவ குறைவாக் கருதிய மருத்துவர்கள் அவரை நிராகரித்தனர், ஒதுக்கினர். சாதிபிரஷ்டத்துக்கு சமமாக தொழில் பிரஷ்டம் செய்தனர். அவர் அரைக்கூவலை எழுப்பி, அச்சில் பல பிரச்சாரங்கள் செய்து, அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து, எதிர்ப்பை அதிகரித்தார். நீங்களெல்லாம் கொலை செய்கிறீர்கள் என்று பொதுமன்றத்தில் குற்றம் சாட்டியபின் அவரை 1865இல் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைத்தனர். அங்கேயே இறந்தார். அவருடைய கருத்தை ஏற்க ஐரோப்பிய மருத்துவர்களுக்கு ஒரு சில ஆண்டுகள் தேவைப்பட்டது. 

லண்டனை தொடர்ந்து மற்ற ஊர்களில் குடிநீர் விநியோகம் தூய்மை பெற்று, கழிப்பிடங்கள் நவீனமாகி, ஒரு பெரும் சுகாதார முன்னேற்றமும் சுற்றுச்சூழல் புரட்சி நடக்க பல வருடங்களாயின. தெருவிலே மலம் வீசுவது குறைந்தது. ஆனால் குதிரைச்சாணி குறைய இன்னும் ஐம்பது ஆண்டுகள் தேவைப்பட்டன – மோட்டார் வாகனங்கள் புழங்கி தெருவெல்லாம் இன்று நாம் பாராட்டும் தூய்மை எய்த டீசல் பென்ஸ் டைம்லர் ஹென்றி ஃபோர்ட் ஆகியோரின் மோட்டார் வாகன புரட்சி வர அத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன.

லோத்தல் தோலவீரா
லோத்தல் - கழிப்பிடம்

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளியில் (சிந்து சரஸ்வதி சமவெளியில்) மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நகரங்களில் நீர் விநியோக வசதியும், சாக்கடை வெளியேற்று கால்வாய்களும் சிறப்பாக இருந்ததாக நாம் வரலாற்று பாடநூல்களில் படிக்கிறோம். குஜராத் மாநிலத்துல் உள்ள லோத்தல், தோலவீரா எனும் தொன்மையான நகரங்களில் இதை நேரில் பார்த்தோம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நவீன சாக்கடைகள் அமைக்கும் முன் உலகின் மிகச்சிறந்த சாக்கடை திட்டம் என்று புகழ் பெற்றவை.

சுட்டிகள்

The Thames and the Cooum (ஆங்கிலத்தில் இந்த கட்டுரை)
காலராஸ்டீவன் ஜான்சன் வீடியோ (ஆங்கிலம்) 
Vaccination - A Delusion by Alfred Russel Wallace
ஊருணி – பத்ரி சேஷாத்ரி கட்டுரை 
சென்னையில் பாதாள சாக்கடை – ஸ்ரீராம் கட்டுரை (ஆங்கிலம்
 Vaccination in Madras - சென்னையில் தடுப்பூசிஎன் உரை வீடியோ (ஆங்கிலம்


Wednesday, 18 March 2020

பாட்டியை மூஞ்சில் குத்து



ஹான்ஸ் ரோஸ்லிங் (Hans Rosling) எனும் பொருளியல் வல்லுனர் எழுதிய ஃபாக்ட்ஃபுல்நஸ் Factfulness (செழுந்தகவல்) நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். கற்றோரும், சான்றோரும், பொருளியல் வல்லுனரும், பலநாட்டு தலைவர்களும், ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும், இன்றைய உலகை எவ்வளவு தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்று பக்கம்பக்கமாக விவரிக்கிறார். 

வளர்ந்தநாடு வளரும்நாடு எனும் இருவகை பிரிவு 1940களில் உருவாகியது. அந்த நிலமை மாறி நாற்பது வருடங்களாகிவிட்டன. இன்று உலக நாடுகளை செல்வத்தாலும் வளர்ச்சியாலும் மக்கள் நலத்தாலும் நான்கு வகையாய் –இரண்டு வகையாக அல்ல - பிரிக்கவேண்டும் என்று 1999 முதல் உலகின் பல அரங்குகளில் சொல்லி வருகிறார். நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் நாட்டின் கரோலின்ஸ்கா கல்லூரிக்கே இதை புரியவைக்க அவருக்கு பல வருடங்கள் ஆனது.

நூலின் ஒன்பதாம் அத்தியாயத்தில், ஒர் சம்பவம் சொல்கிறார். இந்த அத்தியாயத்தின் பெயர் “பழி வீசும் இயல்பு”.

என் மொழியாக்கம் கீழே.

பழி வீசும் இயல்பு

நான் கரோலின்ஸ்கா கல்லூரியில் பந்நாட்டு மருந்து கம்பெனிகளை பற்றி பாடம் நடத்தி கொண்டிருந்தேன். வருமையான நாடுகளில் மட்டும் நிலவும் மலேரியா, உறக்கநோய் போன்ற நோய்களை ஒழிக்க, பணக்கார பந்நாட்டு கம்பெனிகளில்  ஆராய்ச்சி ஏதும் நடத்துவதில்லை என்று விளக்கினேன்.

முன் வரிசையிலுள்ள ஒரு மாணவன், “அவர்களை மூஞ்சிலேயே குத்தவேண்டும்” என்றான்.

“ஆகா”, என்றேன். “சில நாட்களில் நான் சுவிட்சர்லாண்டிலுள்ள நோவார்டிஸ் எனும் கம்பெனிக்கு உரையாற்ற செல்வேன். யாரை குத்த வேண்டும், குத்தி என்ன சாதிப்பேன் என்று விளக்கினால், நான் போய் குத்திவிட்டு வருகிறேன்.”

“இல்லை, இல்லை. அவர்கள முதலாளியை குத்தவேண்டும்.”

“சரி. கம்பெனி முதலாளி டேனியல் வசெல்லா. அவரை சந்திப்பேன். அவரை மூஞ்சில் குத்தவா? குத்தியதனால் மலேரியா ஆராய்ச்சி தொடங்க ஆணையிடுவாரா?”

பின்னிருக்கையிலிருந்து வேறொரு மாணவன் வாய்மலர்ந்தான். “கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் அனைவரையும், மூஞ்சில் குத்தவேண்டும்.”

“நிச்சயம் செய்யலாம். அன்று மதியம் நிர்வாக இயக்குனர்கள் சிலரை சந்திப்பேன். காலையில் டேனியல் தப்பித்தார். மதியம் ஒரு ரவுண்டு கட்டி மற்றவரை சுழட்டி சுழட்டி மூஞ்சில் குத்துகிறேன். அனைவரையும் குத்தும் வரை என் கூந்தலில் தேங்காய் எண்ணெய் தடவாதிருப்பேன், ரிப்பன் போடமாட்டேன், அன்னை பராசக்தி மேல் ஆணை. ஆனால் நான் வயதானவன், மல்லனோ சண்டியனோ அல்ல, நாலைந்து நபரை குத்தியபின் அங்குள்ள காவலர்கள் என்னை பின்னி பெடலெடுக்கலாம். சரி இதனால் என்ன மாறும்? நான் கொடுத்த குத்தில் தான் செய்த பாவம் அறிந்து, சித்தம் தெளிந்து, சிந்தை குளிர்ந்து, மெய்ஞ்ஞானம் பெற்ற கம்பெனி இயக்குனர்கள் மலேரிய ஆய்வை மேற்கொள்வாரா?”

“இல்லை இல்லை, நோவார்ட்டிஸ் ஒரு தனியார் கம்பெனியல்ல. பங்கு சந்தையில் அந்த கம்பெனி பங்குகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். பங்காளிகள் தான் அந்த கம்பெனியின் உண்மை முதலாளிகள்,” என்றான் ஒளிபடைத்த கண்ணனாம் மூன்றாம் மாணவன்.

“பலே பாண்டியா! சரியாக சொன்னாய். இந்த கம்பெனியின் பங்குதார்ரகளே மலேரிய ஆராய்ச்சியை விரும்பாமல் செல்வந்தர் நோய் மட்டுமே தீர்த்து பணம் சம்பாதிப்பதில் குறியாய் வெறியாய் நரியாய் அரியாய் உள்ளனர். யாரிந்த குறி வெறி நரிகள்?” என்றேன்.

“பணக்காரர்கள்.” என்றான் முன் வரிசை மைக் டைசன்.

“அது தானில்லை. மருந்து கம்பெனிகளின் வருமானம் கச்சா எண்ணெய் கம்பெனிகளின் வருமானம் போல வளர்ந்தும் தேய்ந்தும் ஊஞ்சலாடா. வருடாவருடம் பெரிதாக ஏறியிறங்காமல் நம்பகமாக லாபம் பெற்று, துல்லியமாக பங்குதாரர்களுக்கு பங்கு தருகின்றன. அதனால் இவற்றில் முதலீடு போடுவதும் சில நிதி நிறுவனங்களே. பங்குகளை வாங்கி பலவருடங்கள் விற்காமல் தக்கவைத்து கொள்ளும். அவை யார் யார் என்று தெரியுமா?” என்று கேட்டேன்.

மாணவர்களுக்கு இந்த பங்கு சந்தை விவரம் தெரிந்திருக்கவில்லை. சுட்ட நாவல் பழத்தை கேட்ட அவ்வையை போல் என்னை ஆவலுடன் நோக்கினர்.

“ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் (Retirement funds)” என்றேன். மயான நிசப்தம்.

“அந்த மாதிரி நிதி நிறுவனங்களில் பங்கு வாங்கியுள்ள வயோதிகரை நான் சந்திக்க வாய்ப்பில்லை. ஆனால் நீங்கள் உங்கள் பாட்டியை வாராவாரம் சந்திப்பவராக இருந்தால் இந்த வாரம் உங்க பாட்டி மூஞ்சில் குத்தலாம். சுயநலாமாக தங்களுக்கு மாதாந்திர வருமானம் ஆடாமல் அசையாமல் அள்ளி வரவேண்டும் எனும் ஆர்வத்தில், பணக்காரர்களின் நோய்களுக்கு மட்டும் மருந்து தேடும் ஆராய்ச்சி கம்பெனிகளின் உண்மை முதலாளிகள் அவர்களே.

“மேலும். சமீபத்தில் நீங்கள் ஊர்சுற்றவோ விழா கொண்டாடவோ உங்களுக்கு உங்கள் பாட்டி ஏதேனும் அன்பளிப்பாக கொஞ்சம் பணம் குடுத்திருந்தால் உங்கள மூஞ்சையும் கொஞ்சம் குத்திக்கலாம்.”

மொழியாக்கம் முற்றும்.

என் குறிப்பு : ஓய்வுபெற்றவர்களின் நிதிகளை கையாண்டு, மாதாமாத ஓய்வு வருமானத்தை தவிற, கொஞ்சம் பங்கு சந்தையில் போட்டால் நல்ல வருமானம் கிடைக்கலாம் என்பதால் சில நிறுவனங்கள் அவர்கள் உபரி செல்வத்தில் இந்த மாதிரி கம்பெனிகளில் பங்கு வாங்கி, வருடத்திற்கு மூன்றுநான்கு முறை அவர்களுக்கு பணம்பெற்று தருகின்றன.

ஹான்ஸ் ரோஸ்லிங் பேசும் வீடியோ காட்சி