கோயில்களில்
நாம் காணும் சிறபங்களிலும் ஓவியங்களிலும் புராணங்களில் சொல்லப்படும் சமபவங்களையே காணலாம்.
பிரம்மர், விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, முருகர், விநாயகர் மட்டுமே வெவ்வேறு
தெய்வ வடிவங்களில் அதிகமாக காணமுடியும். இவற்களை தவிர சில இடங்களில் சூரியனுக்கு கோயில்கள்
உள்ளதால் சூரியனின் சிலைகளை காணலாம்.
வெகு
சில கோவில்களிலேயே இந்திராதி தேவர்களையோ, வசுக்களையோ காணலாம். மிகவும் அபூர்வம் என்றே
கருதவேண்டும். இந்திரன் வருணன் அக்னி வாயு போன்ற தேவர்களுக்கு வேத காலத்தில் முக்கியத்துவம்
இருந்ததாகவும் பின்னர் சைவ வைணவ நம்பிக்கைகள் ஓங்க, அவர்களின் முக்கியத்துவம் குறைந்ததால்
வழிபாடும் குறைந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர். வேள்வி செய்தே இந்த தேவர்கள்
வழிப்பட்டதாகவும், புத்தரின் மறைவிற்கு பின்தான் கோவில்கள் கட்டும் வழக்கம் பாரதத்தில்
தோன்றியதென்றும் ஒரு கருத்து உண்டு. சூரியனை தவிற முப்பத்துமூவரி எந்த தேவருக்கும்
கோயில் இல்லாததும் இக்கருத்துக்கு வலுவூட்டுகிறது.
புதிதாக
எதை கண்டாலும் லயிக்கும் எனக்கு, அஜந்தாவிலும் காஞ்சியிலும் சில அதிர்ச்சிகள் காத்திருந்தன.
2006இல் முதன்முதல் அஜந்தா சென்ற போது அது சம்பந்தமாக கல்கியின் “சிவகாமியின் சபத”த்தை
எதையும் படித்திருக்கவில்லை. அங்கிருக்கும் எல்லா ஓவியங்களும் புரியா புதிராகவே விளங்கின.
தொல்லியல் துறையின் சிறந்த மலிவான் அஜந்தா புத்தகம் வாங்கவேண்டுமென்றோ, மற்ற ஏதேனும்
சிறந்த புத்தகங்கள் இருக்கும் என்றோ எனக்கு ஏனோ எண்ணமே உதிக்கவில்லை! இப்பொழுதும் நினைத்தால்
வெட்கம் பொங்கும். பின்னர் 2010இல் பேராசிரியர் சுவாமிநாதன் எழுதிய நூலை படித்தபின்னரும்
மதன்ஜீத் சிங், டீட்டர் ஷ்லிங்க்லாஃப், ஸ்டெல்லா கிராம்ரிச், போன்ற மேற்கத்திய கலை
ஆர்வாளர்கள் எழுதிய நூல்களையும் படித்தபின்னும் அஜந்தாவின் ஓவியங்கள் பற்றி கொஞ்சம்
ஞானோதயம் பிறந்தது. 2010இல் கலை உலா சென்ற போது அஜந்தா ஓவியங்களை ரசிக்கமுடிந்தது.
புத்த
மத கதைகளிலும் இந்திரன் பிரம்மா லட்சுமி சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் உண்டு. புத்த ஜாதக
கதைகளில் வரும் பாத்திரங்களின் பல பெயர்கள் புராணங்களிலும் மகாபாரதத்திலும் வருபவை.
சுவர்க்கலோகத்தில்
வீற்றிருந்த புத்தரை பூமியில் பிறக்குமாறு தேவர்கள் வேண்டிக்கொள்ள, அவரும் அதற்கிணங்கினார்.
லும்பினியில் புத்தர் மாயாதேவிக்கு பிறந்த பொழுது அவரை காண இந்திரனும் பிரம்மாவும்
இறங்கி வந்தனர். இச்சம்பவங்களை ஓவியமாக அஜந்தாவின் இரண்டாம் குகையில் காணலாம். கையில்
குழந்தை சித்தார்த்தனை இந்திரன் ஏந்த, பேருவகையுடன் அருகே நின்று பிரம்மர் பார்க்கிறார்.
அவருக்கு சாமரம் வீசும் பணிப்பெண் முகத்தில் ஆச்சரியம் மிளிர்கிறது.
அஜந்தா- குழந்தை சித்தார்த்தனை ஏந்தும் இந்திரன் அருகே பிரம்மா, எதிரே மாயாதேவி |
முதல்
குகையிலும் பதினேழாம் குகையிலும் சிபி சக்கரவர்தியின் ஜாதக கதை ஓவியங்களை காணலாம்.
ஆனால் தராசில் தன் சதையை வைத்தபின் சிபிக்கு இந்திரனும் யமனும் காட்சியளிக்கும் மிகவும்
சேதம் அமைந்துள்ளதால் தெளிவாக தெரிவதில்லை.
பதினேழாம்
குகையின் வெளிச்சுவரில் இந்திரன் சுவர்க்கத்திலிருந்து கீழே இறங்கி வரும் காட்சியை
காணலாம். இந்த ஓவியம் இன்றும் பிரகாசமாக இருக்கிறது. பின்புலத்தில் மேகங்கள் பஞ்சுபஞ்சாக
அணிவகுக்க, இந்திரனின் இடது புறம் இரு தேவகன்னிகையர் ஜால்ராவில் தாளத்தை வாசித்து இறங்கி
வர, மற்றும் ஒருத்தி நீண்ட புல்லாங்குழலூதுகிறாள். இந்திரனுக்கு வலது பக்கம் நீண்ட
ஒரு கருவியையும், இந்திரனின் இடுப்புயரத்தில் வேறொருவன் ஒரு குடம் பொருத்திய கருவியையும்
வாசித்தப்படி இந்திரம் பூலோகம் நோக்கி கீழே இறங்குகிறான்.
அஜந்தா : பறந்து இறங்கும் இந்திரன் |
இந்திராதி
தேவர்களும் முனிவரும் சூழ கைலாயத்தில் சிவனும் பார்வதியும் வீற்றிருக்க, சுந்தரமூர்த்தி
நாயனாரும் சேரமான் பெருமாளும் சென்றடையும் ஓவியம் தஞ்சை பெரிய கோவிலிலுள்ளது. இதில்
இந்திரனை மட்டும் தனியாக அடையாளம் காண்பது கடினம். டிசம்பர் 2014 தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின்
பேச்சுக் கச்சேரியில் முனைவர் நாகசாமி, இந்த ஓவியத்தை வர்ணித்து நடத்திய உரையில், ஓவியர்
சந்துரு வரைந்த கோட்டோவியத்தை திரையிட்டார். சந்துருவின் கோட்டோவியத்தில் இந்த கைலாச
காட்சியின் பிரம்மாண்டத்தை உணரலாம். இந்திரனை தனியாக அடையாளம் காண இயலாததை நீங்களும்
உணரலாம். அடையாளம் தெரிந்தால் தயவுசெய்து எனக்கு சொல்லவும்.
தஞ்சை பெரிய கோவில் - கைலாச காட்சி ஓவியம் |
தஞ்சை கோவில் கைலாச காட்சி - சந்துருவின் கோட்டோவியம் |
காஞ்சி
கைலாசநாதர் கோவிலில் ஜலந்தரன் பிறந்த சம்பவத்தின் சிற்பத்தை காணலாம். இந்திரன் சிவனை
பார்க்க கைலாசம் செல்ல அவனை நுழையவிடாமல் சிவகணங்கள் தடுக்கின்றன; எள்ளி நகையாடி சேட்டைகள்
செய்து, இந்திரனுக்கு கோபமூட்டுகின்றன. இந்த கணங்களில் ஒரு கணத்திற்கு மட்டும் நான்கு
கைகள் உள்ளன. வாசலில் ஆரவாரம் கேட்டு சிவனே ஒரு கணமாக தோன்றி கணங்களோடு ஒருவராக இந்திரனை
துன்புறுத்துகிறார். ஆத்திரம் அடைந்த இந்திரன், நான்கு கை கொண்ட பூதகணமா என்று கூட
யோசிக்காமல் எல்லா கணங்களையும் தாக்க வஜ்ராயுதத்தை எடுக்க, என்ன மடைமை இந்திரா என்னும்
பாவனையில் பிரம்மனும் அக்னியும் அவன் கைகளை பிடிக்கின்றனர். பின்னால் நின்று விஷ்ணு
வேண்டாம் என்று தர்ஜன முத்திரையால் எச்சரிக்கை விடுக்கிறார். காமவில்லை எடுத்த மன்மதன்
சாம்பலானது போதாதா சிவனை எதிர்த்து வஜ்ராயுதமெடுத்தால் நெற்றிகண் திறக்காதா என்று அவர்கள்
சொல்லுமுன் நெற்றிக்கண் திறந்துவிடுகிறது. சட்டென்று ஒரு நீர் நிரைந்த குடத்தை எடுத்து
அவர்கள் காட்ட நெற்றிக்கண்ணின் பொறி அக்குடத்தில் விழ, சிவனின் அம்சமாக ஜலந்தரன் பிறக்கிறான்.
இந்த
சிற்பத்தை காமெராவில் எளிதில் படமெடுக்க முடியாது. முன்னிருக்கும் தூண்கள் மறைக்கும்.
நேரில் பார்த்தாலே முழு அழகும் சிற்ப அமைப்பு புரியும்; ரசிக்கலாம். இங்கே இரண்டு படங்களாக
பார்க்கலாம்.
காஞ்சி கைலாசநாதர் கோவில் - பிரம்மனும் அக்னியும் தடுக்கும் இந்திரன் |
வில்லேந்தும் நாலு கை கணமாக சிவன்! கீழே கைக்கூப்புவது - ஜலந்தரன் |
எல்லோரா
கைலாசநாதர் கோவிலில் – பதினாறாம் குகையில் – பிரம்மாண்ட வீற்றிருக்கும் சிவன் சிலை
உள்ளது. சிவனை சூழ்ந்த தேவர்களில் ஒருவனாக ஒரு யானை மேல் வீற்றிருக்கும் இந்திரனை காணலாம்.
இந்திரனுக்கு அருகே எருமை மேல் யமனும், ஆடு மேல் அக்னியும் உள்ளனர்.
எல்லோரா கைலாசநாதர் கோவில் சிவனுக்கு இடதுபக்கம் - இந்திரன் யமன் அக்னி |
புனேவிலிருந்து
மும்பை செல்லும் வழியிலுள்ள பாஜா குகை ஒன்றில் சூரியனையும் இந்திரனையும் காணலாம். குதிரை
பூட்டிய தேரில் சூரியனும் ஐராவதம் என்ற யானை மேல் பவனிவரும் இந்திரனும். இவை இரண்டுமே
அபூர்வ பௌத்த சிற்பங்கள். சாதவாகனர் காலத்தவை, கிபி முதல் நூற்றாண்டு.
பாஜா குடைவரை - சூரியனும் இந்திரனும் |
வாதாபியிலுள்ள
சாளுக்கியர் கால குடைவரை கோயில்களில், சில விதானங்களில் தெய்வ சிற்பத்தை சூழ்ந்து அஷ்ட
திக்பாலர்களை காணலாம். கிழக்கு திசைக்கு திசை தெய்வம், யானை மேல் அமர்ந்துள்ள இந்திரன்.
வாதாபி மூன்றாம் குகையில் பெருமண்டபத்து விதானத்தில் பிரம்மனை மையமாகவும் சுற்றி அஷ்ட
திக்பாலரும் அமைந்த சிற்பங்கள் காணலாம். இதேபோல் விஷ்ணுவை மையமாக வைத்து அஷ்ட திக்பாலரால்
சூழ்ந்த நிலையையும் காணலாம். இதில் யானை மேல் அமர்ந்தகிழ்ககு காவலனாக இந்திரன் உள்ளான்.
வாதாபி மூன்றாம் குகை பிரம்மனை சுற்றி திக்பாலர் |
வாதாபி மூன்றாம் குகை விஷ்ணுவை சுற்றி திக்பாலர் |
படங்களுக்கு நன்றி
அஜந்தா - சித்தார்த் சந்திரசேகர்
எல்லோரா - அரவிந்த் வெங்கட்ராமன்
வாதாபி - விகே ஸ்ரீநிவாசன்
தஞ்சை - முனைவர் நாகசாமி, ஓவியர் சந்துரு
தொடர்புள்ள கட்டுரைகள்
2. கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள்
3. ஞான தேவதைகள்
4. மாந்தாதா
5. மாமல்லபுரத்து உழைப்பாளர் சிலை
6. குந்தவை ஜீனாலய ஓவியங்கள்
7. Paranjothi Yathirai - Ajantha Ellora Site Seminar