தமிழ்நாட்டு
ஃபில்டர் காபி அருந்தி பழகியவர்களுக்கு அதன் மேல் அதிக பிரியம் மட்டுமில்லை, ஒரு தனிவிதமான
கர்வமும் உண்டு. காபி பழக்கம் வரலாற்றில் மிக சமீபமானதே என்று நம்மில் பலர் அறிவோமில்லை.
அறிந்தாலும் ஏற்றுக்கொள்ள மனமிறாது; கொஞ்சம் கர்வம்தான். ஃபில்டர் காபி என்றில்லை,
எந்த காபியை பற்றியும் இந்த கர்வமுண்டு. தென்னாடுடைய சிவன் மட்டுமா? காபி உடைய தென்னாடு
அல்லவா?
காபி,
ஒரு அரபிய பானம். நதிமூலம் ரிஷிமூலத்தை போல, காபிமூலம் கேள்விக்குறியது. தேநீரின் சீன
வரலாற்றை போல, காபிக்கு ஒரு வரலாறு உருவாகவில்லை. போதிதர்மரின் கண்ணிமை போல் ஒரு வட்டார
கதையும் இல்லை. நானூறு ஆண்டுகளுக்கு முன் மத்திய ஐரோப்பாவில் அறிவாளிகளின் பானமாக மாறியது.
சக்கரை யுகத்திற்கு முன்னரே காபி யுகம் தொடங்கிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்,
தமிழகத்தில் காவிரிக்கு போட்டியாய் காபிநதி பாயத்தொடங்கியது. பிராமண சமூகத்தில் ஆசாரங்களை
மீறி, உடைத்து, கௌரவத்தை குறைக்காமல், அந்தஸ்த்தை கொஞ்சம் வளர்க்கும் பொருளானது. வடக்கிந்தியாவை
காபி வெல்லவில்லை. தமிழனைக் கேட்டால் பன்ருட்டி பலா, மணப்பாரை முறுக்கு, கும்பகோணம்
காபி என்பான். ஆனால் மயிலாப்பூரில் மானமுள்ள மாமா மாமி ஒருத்தரும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
காபி மயிலையின் ஆஸ்தான பானம்.
பால
பால் காண்டம்
நான்,
காபி அருந்தும் தாய்க்கும் டீ அருந்தும் தந்தைக்கும், மயிலையில் பிறந்த போர்ண்வீட்டா
பயில்வான். ஹார்லிக்ஸ் வீவா நியூட்ரமுல் பூஸ்ட் என்ற பால்ய பருவத்து பான பெருங்கடலை
கடந்து, பதிமூன்று வயதுக்குள் காபி பழக்கத்தை கற்றுக்கொண்டு, தொண்டைக்கு மஞ்சள் நீராட்டுவிழா கண்ட
வித்தகருக்கு நடுவே, பசும்பால் சப்பாணியாக பலவருடம் வளர்ந்துவந்தேன். மற்றவர் இல்லத்தில்
வெங்கடேச சுப்ரபாதமோ விவித் பாரதி சஹஸ்ரநாமமோ ஒலிக்க எங்கள் வீட்டில், “கோபு, காபி
போட்டு தா, டா”, என்று என் தம்பி ஜெயராமனின் உரிமை குரல் கர்ஜிக்க, கூவம் நதிமிசை வெயிலிலே,
சேர நன்னாட்டு டீ புரக்கணித்தே, அரபுவிதை டிகாஷன் கொதித்திடவே, ஆவின் பாலாற்றி அளித்திடுவேன்.
ராமன் எஃபெக்ட்டை காபியில் பார்க்காவிட்டாலும், காபியின் விளைவை ஜெயராமனில் பார்த்து களித்தேன்.
ஆனால் கல்லூரி காலத்திலும் சரி, தொழில் செய்த காலத்திலும் சரி, நான் என்றோ எப்பொழுதோ
அருந்திய அபூர்வ பானமாகவே காபி விளைந்தது.
டெக்ஸாஸ் மாகாணத்தில் படிக்க சென்றபோது,
சூடாக பால் அருந்தும் பழக்கம் போனது. அமெரிக்காவில் பாலை சுடவைத்து குடித்தால், கொமட்டும். ஜில்லென்ற பாலில் சீரியோஸ், கார்ன் ஃப்லேக்ஸ் வகையறா சீரியல் சாப்பிட கற்றுக்கொண்டேன்.
காரும் காபியும்
பின்
1994இல் தொழில் செய்ய சியாட்டில் நகருக்கு சென்றேன். சியாட்டில் அமெரிக்காவின் காபி
தலநகரம். விமானம் செய்யும் போயிங் கம்பெனி, பின்னர் மைக்ரோஸாஃப்ட், பின்னர் அமேசான்,
எல்லாம் பிரபலமாகுமுன், அது மரம் வேட்டும், காகிதம் செய்யும் நகரமாக தொடங்கியது. துறைமுகமும்
முக்கியம். அங்கே என்றோ காபி கலாச்சாரம், அமெரிக்காவில் எந்த ஊரிலும் இல்லாத அளவு,
பெரிதாக தொடங்கிவிட்டது.
முதல்
ஸ்டார்பக்ஸ் காபி கடை நிறுவபட்ட ஊர் சியாட்டில். மைக்ரோஸாஃப்ட் சியாட்டில் நகருக்கு
அரிசோனாவிலிருந்து இடம் மாறிய பின், உள்ளே அடைந்து கம்ப்யூட்டரை 15 மணிநேரம் பேந்த
பேந்த விழித்து பார்க்கும் ஊராக மாறியதை கண்டு, இத்தாலியில் காபி கலாச்சாரத்தையும்,
அதனால் செழித்திருந்த சமூக உறவுகளையும் கண்ட ஹொவர்ட் ஷுல்ட்ஸ் (கேள்வி: இவர் பெயரை
கிரந்த எழுத்தின்றி, தூய தமிழில் எழுதமுடியுமா? சுலுசு? சுலசன்? சூலசேய காபி நாயனார்?),
ஒற்றை கடையாய் நின்ற ஸ்டார்பக்ஸை வாங்கி பல கடைகளாக பெருக்கினார்.
|
எனக்கு பிடிக்காத காபி வகைகள் |
காபி
கிட்டிய கிட்கிந்தா காண்டம்
Starbucks ஸ்டார்பக்ஸ், Seattle's Best Coffee சியாட்டிலின் பெஸ்ட் காபி, போன்ற கடைகளுள்ள சியாட்டிலுக்கு நான் 1994இல் வந்தேன். ஒரு
கார் வாங்கினேன். கல்லூரி காலத்தில் இல்லாத சம்பளமும், காரும் கிட்டியதால் அக்கம் பக்கம்
சில நண்பர்களோடு சனி ஞாயிறு பயணங்கள் செய்ய தொடங்கினேன். நீண்ட பயணங்களின் போது மட்டும்
பெட்ரோல் கடைகளில் நிறுத்தும் போது, தலைவலி களைப்பு குறைய, காபி அருந்துவேன். வருடம்
இரண்டோ மூன்றோ. அவ்வளவே.
அப்பொழுதெல்லாம் மாலை நேரம் சில நண்பர்களோடும், சக அலுவலர்களோடும்
கூடைபந்து ஆடும்பழக்கமிருந்தது. 1997 இல் ஸீக்வெல் ஸெர்வர் SQL Server குழுவிலிருந்து எம்.எஸ்.என் MSN குழுவுக்கு மாறினேன். அங்கே மதியம் கூடைபந்து ஆடும் பழக்கம் வந்தது. சியாட்டிலில் வெயில்
இல்லை, மதியம் சுகமாக ஆடலாம். விளையாடுவோருக்கு குளியல் அறையை மைக்ரோஸாஃப்ட் செய்திருந்தது.
அங்கேயே குளித்து, மதியம் உணவு அருந்தி, அலுவலகம் சென்றால் திடீரென்று அடித்து தள்ளிக்கொண்டு
தூக்கம் வரும். அதை போக்க, காபி அருந்துவேன். வாரம் நான்கு நாள். சுமாரான காபி தான்.
ஆனால் பழகிவிட்டது.
அதே
நேரம், திடீரென்று சியாட்டில் கடையாக இருந்த ஸ்டார்பக்ஸ் அமெரிக்கவெங்கும் பரவி புகழ்பெற்றது.
பிறகு உலகெங்கும் பரவியது. ஆனால் அவர்களுடைய காப்புசினோ, மோக்கா, லாட்டே, எஸ்ப்ரெஸ்ஸோ
எந்த காபியும் எனக்கு பிடிக்கவில்லை. பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு
ஃபில்டர் காபி தான் மதச்சார்பற்ற ஆறெழுத்து மந்திரம்.
சுந்தர
ஃபில்டர் காபி காண்டம்
அடுத்த
வருடம் என் காபி பிரியன் தம்பி ஜெயராமன் டெக்ஸாஸுக்கு படிக்க வந்தான். அதற்கு முன்
ஒரு மாசம் என்னுடன் சியாட்டில் வாசம். ஊர் சுற்றி பார்க்க தான். அவன் நல்ல காபி போட்டு
அந்த பழக்கத்தை வளர்த்துவிட்டான். நான் மீண்டும் இந்தியா வந்த பின், கூடை பந்தும்,
கார் பயணங்களும் மறைந்துவிட்டன, ஆனால் காபி பழக்கம் தங்கிவிட்டது.
சமீபத்தில்
அமெரிக்கா சென்ற போது, கலிஃபொர்ணியாவில் காபி மட்டுமே பெரிய குறை. ஜெயராம், டிஸ்னிலாண்ட்,
ஸீ வர்ல்ட், யூனிவர்சல் ஸ்டூடியோ, விமான் நிலயத்து ஸ்டார்பக்ஸ் கடைகளில் வாளி அளவு
காபி வாங்கி, தசரதர் பாயசம் பிரித்தது போல் பிரித்து அனைவருக்கும் கொடுத்து வந்தான்.
எனக்கோ, அமெரிக்கா, ஃபில்டர் காபியில்லா சபரி மலையாக தோற்றமளித்தது.
சான்
ஃபிரான்ஸிஸ்கோவில், சித்தி மகன் விவேக் வீட்டில் தங்கினோம். அவனும் அவன் மனைவி டாமியும்
காலையில் தொண்டைகளை தலா ஒரு வாளி கருப்பு காபியில் குளிக்கவைத்துவிட்டே சிற்றுண்டியில்லா
சித்தர்களாய் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இரண்டு நாட்கள் இரண்டு யுகங்களாய் ஓடின;
நகர்ந்தன.
மூன்றாம்
நாள் மட்டும் என்ன நடக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தால், நானும் சாண்டில்யன் நாவல்
சத்திரியர்களை போல நம்பியிருக்கவே மாட்டேன். யவன ராணிகளும், கடல்புறாக்களும், சீன மாலுமிகளும்,
வெண்புரவிகளும், பாய்மர கலங்களும், ஜலக்கிரீடைகளும்… அதாவது கன்னிமாடத்தை தவிற எல்லாம்
உள்ள சான் ஃபிரான்ஸிஸ்கோவில்….மாலை வேளையில்… இதை எல்லாவற்றையும் விட அதிசயமான…. சைவ
உணவுகளை மட்டுமே பரிமாறும் சீன ஹோட்டல். லவிங் ஹட் (அன்பான் குடிசை) அதன் பெயர்.
ஆஹா,
சைவ ஃப்ரென்க்சு ஃப்ரைஸ் கிடைக்குமாம், என்ன சந்தோஷம் என்று நான் கேட்க, ஜெயராம் காபி
கேட்க, அவர்களும் ஒரு வாளி காபி கொண்டுவர, எனக்கு கைகேயி பகுதி காபி கிடைக்க… தேனோடு
கலந்த தெள்ளமுது! கோல நிலவோடு கலந்த குளிர் தென்றல்! ஃபில்டர் காபியை மிஞ்சும் சுவை!
|
சாய் மில்க் காபியுடன், என் தம்பி ஜெயராமன் |
டவுன்
பஸ்ஸிலிருந்து ஹீரோ இறங்கினாலும் மிரண்டு மிரண்டு மயங்குவாளே பஞ்சாபி தேன்மொழி பேசும்
தமிழ்ப்பட ஹீரோயின், அதை போல் அண்ணலும் மிரண்டேன்; அம்பியும் ருசித்து ரசித்தான்.
“உங்கள் அஜந்தா ரகசியம் என்ன?” என்று ஆயன சிற்பி போல நாங்கள் வினவ, “சாய் மில்க்” என்றாள்
சீன மங்கை. சாய் பக்தர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். ஸாய் மில்க்! என்ன டிகாஷண், என்ன
பொடி என்றெல்லாம் வீணாக நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. யாம் பெற்ற காபி, பெறுக இவ்வையகம்
என்ற நல்லெண்ணதில் இதை பகிற்கிறேன். அமெரிக்காவின் நான் ருசித்த தலை சிறந்த காபி, லவிங்
ஹட் கடையில்தான்.
சைவ
உணவை பரப்பும் கொள்கையுடன், சில சைவ பிரபலங்களின் படங்களை - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்,
ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் - லவிங் ஹட் நிர்வாகம், தங்கள் கடை சுவர்களில் பதித்துள்ளது. பார்த்த
இடங்களெல்லாம் ஃப்ராங்க்ளின்…
|
லவிங் ஹட் கடையின் சின்னம் |
|
உலக சைவ உணவு பிரியர்கள் - Loving Hut wall |
இதை ஒத்த பதிவுகள்
1. சுவைத்ததும் ரசித்ததும்
2. எழில் மல்கும் அமெரிக்கா (ஆங்கிலத்தில் )
3. SQL Server ஸீக்வெல் செர்வர் நாட்கள் - எண்ணெழுத்தும் கையெழுத்தும்
4. பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு
5. முயல் கர்ஜனை
6. திருவேப்பம்பாவை