சிவகாமியின்
சபதம் படிக்கும் போது அந்த கதையும் வரலாறும் மட்டும் என்னை தாக்கவில்லை. காதலும் வீரமும்
சோகமும் உவகையும் சிரிப்பும் வியப்பும் நம் உள்ளத்தில் மூளுவது விசித்திரமல்ல. ஒரு சிறந்த எழுத்தாளன்,
அதைவிட சிறந்த கதைசொல்லி, இதை எல்லாம் செய்வான்.
கல்கி
சிறந்த கதைசொல்லி.
ஆனால் அதையும் தாண்டி, பல்லவர் காலத்தை கண்முன்னே அவர் கொண்டுவந்த
ஆளுமை அற்புதம். குதிரை வேண்டும் என்று ஆயனர் கேட்க, மகேந்திரனின் சங்கோஜமும், இங்கும்
அங்கும் தூதுவர் மூலம் தகவல் செல்ல எடுத்து கொண்ட கால அவகாசமும், வியப்பூட்டின. நாம் வாழும் நவீன
யுகத்தில் தொலைப்பேசியையும் ரயில்வண்டிகளையும் கார்களையும் விமானங்களையும், சாதாரணமாக கருதும்போது, நாமெல்லாம் மன்னர்களை மிஞ்சிய செல்வந்தர்கள், என்றே எனக்கு வலியுறுத்தியது. வெள்ளத்தை தாண்ட முடியாமல்
சாளுக்கிய படையும் நின்றது என்று அறிந்தபோது, பாலங்களின் அருமை புரிந்தது.
பாலங்களை
பற்றி நாம் யோசிப்பதே இல்லை. நாடுகளின் எல்லைகளாக பெரிய நதிகளே பல நூற்றாண்டுகள் திகழ்ந்தன.
அவற்றை மிஞ்சி பேரரசுகள் அமைந்தது அதிசயம். ஆங்கிலேயர் ஆட்சியில் பாலங்களால் உள்நாட்டு வணிகம்
செழித்ததும், பெரும் வரம். மாபெரும் கோயில்களை கட்டிய மன்னர்களால், ஸ்தபதிகளால் பாலங்கள்
செய்ய முடியாதது பெரிய புதிர். இதை ஆராயும் கட்டுரையோ நூலோ ஏதும் நான் கேள்விப்பட்டதில்லை.
ஆனால்
என்னை மிகவும் கவர்ந்தது அஜந்தா ஓவியம் பற்றிய தகவல் தான். ஆயிரம் ஆண்டுகளாகியும் மங்காத
சிலையும், சாயாத கோயிலும், தேயாத இலக்கியமும், மாறாத சில மரபுகளும் அதுவரை யதார்த்தமாகவே தெரிந்தன.
ஆனால் ஆயிரம் ஆண்டு மங்காத ஓவியம், ஆழமாகவும் அகலமாகவும் சிந்தனையை கிளறியது. பாரதநாட்டை, பக்திக்கும்
இலக்கியத்திற்கும் உணவிற்கும் மட்டுமே சிறந்த நாடாக நான் அன்று வரை கருதியிருந்தேன்.
கலைகளிலும் விஞ்ஞானத்திலும் நாம் சாதனைகள் செய்தோம் என்று எனக்கு அன்று வரை தோன்றவில்லை.
ஸ்தபதி, சிற்பி என்று சொற்கள் வழக்கில் இருப்பினும், அவர்களது கல்வியும் ஆர்வமும் மரபும்
முக்கியத்துவமும் ஏனோ அறிவியல் ஆர்வமுள்ள பலருக்கும் தெரிவதில்லை.
நாட்டில் பஞ்சம்
வரும்போது அதை தீர்க்க ஏதோ கோயில் கட்டினார் என்ற வரட்டு மூடநம்பிக்கை, நம் நாட்டில்
மிக பரவலாக உள்ளது. மூலிகைகளை மருந்தாக ஆய்ந்து உணர்ந்து கற்று நூல்செய்த சரகர் சுஷ்ருதர்,
ஜோதிட கணித நூல்களை இயற்றிய ஆரியபடர், வராஹமிஹிரர், பாஸ்கராச்சாரியர் ஆகியோரை அறிவியல்
ஞானிகளாக கருதும் பாரத மக்கள், சிற்பிகளை, ஸ்தபதிகளை, விவசாயிகளை, அறிவியல் பயில்வோராக
பார்ப்பதில்லை. அறிவுசார் நூல்களை படிப்பவர் சிலரே, ஓரளவேனும் இவர்களின் மரபுகளையும்
திறமையும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக, ஆங்கில கல்வி மரபில் வந்த பலரும் இதை உணர்வதில்லை.
கல்கி
என் கண்களை திறந்துவைத்தார்.
தமிழ்
இலக்கியத்தில் இருபதாம் நூற்றாண்டில், கவிதையில் சுப்பிரமணிய பாரதி செய்த புரட்சியை விட, கதை உலகில்
கல்கி செய்த புரட்சி அகலமானது. சரித்திர நாவல்களை எழுதிய பெரும் எழுத்தாளர் படைக்கு
முன்னோடி, கல்கி.
முன்னோடிகள்
பிரெஞ்சு
மொழியில் ஜூல்ஸ் வெர்ண் நிலவுக்கு செல்லும் பயணத்தையும், கடல்மூழ்கி கப்பலையும், பலூனில்
ஆப்பிரிக்காவை கடக்கும் சாகசத்தையும் நாவல்களாக எழுதி அறிவியல் கதை யுகத்தை தொடங்கி
வைத்தார். ஆர்த்தர் கிளார்க், ஐசாக் அசிமோவ், ரே பிராட்பரி, ஸ்டானிஸ்லாவ் லெம், லேரி
நிவன், உர்சுளா லிகுயின் என்று பலரும் இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் சார்ந்த கதைகள்
எழுதினார்கள். ஜூல்ஸ் வெர்ணின் ஆழ்ந்த அறிவியல் ஞானம் அவர் கதைகளில் புலப்படும். நான்
படித்ததில், ஆர்த்தர் கிளார்க், லேரி நிவன் மட்டுமே அத்தனை ஆழமாக அறிவியலை சார்ந்து
நாவல்களை எழுதினார்கள். மற்றவர் கதைகளில் சமூகவியல், அரசியல், காதல், மோதல் என்றே முக்கால்வாசி
போகும். இருபதாம் நூற்றாண்டில் நாவல் சிறுகதை தவிற காமிக்ஸ் என்ற சித்திரகதைகளும்
(குறிப்பாக சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஃப்லாஷ் கார்டன் வகையறா), ஸைஃபை சினிமாக்களும்
அறிவியல் முன்னேற்றங்களின் அடிப்படையில் எதிர்காலத்தை நோக்கி, கற்பனை செய்து அற்புத
காவியங்களை தந்தன.
ஆர்த்தர்
கோனன் டோயில் ஆங்கிலத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற நாயகனை படைத்து துப்பறியும் கதைகளின்
யுகத்தை தொடங்கி வைத்தார்; அகாத்தா க்ரிஸ்டி, ஜான் டிக்சன் கார், பெர்ரி மேசன், எல்லரி
குயீன், டிக் ஃப்ரான்ஸிஸ் என்று துப்பறியும் மர்மகதை எழுத்தாளர்ப்படை பின்தொடர்ந்தது.
யாம்பெற்ற
துன்பம் பெருக இவ்வுலகம் என்றே, மெகாத்தொடருக்கு முன்னோடியாய் டால்ஸ்டாய், தோஸ்தோயெவ்ஸ்கி
போன்ற ருஷிய எழுத்தாளர்கள், அம்மிக்கல்லளவு நூல்களை எழுதி, புலம்பி எழுதுக கருமம், என்ற நீதியை நிறுவினார்கள்.
கல்கிக்கு
முன்னரே வரலாற்று கதைகள் தமிழில் இருந்தாலும் அவரை தொடர்ந்து விக்ரமன், சாண்டில்யன்,
ஜகச்சிற்பியன், ஸ்ரீவேணுகோபாலன், பாலகுமாரன் என்று வரிசை நீள்கிறது. மற்றவர் கதைகளை
நான் பரவலாக படித்ததில்லை. கல்கி முன்னோடி என்பதில் சந்தேகமில்லை; சமூக நாவலிலோ, பயண
கட்டுரையிலோ, சிறுகதையிலோ அவருக்கு இந்த அந்தஸ்த்து இல்லை. சரித்திர நாவலில், அவரே
மகேந்திர பல்லவர்.
கலை ஆர்வம்
நாவலை
எழுத மட்டும் அவர் தூண்டவில்லை. சிற்பங்களின் மேலும், பக்தி இலக்கியத்தின் மேலும், மன்னர்களின் கலை ஆர்வத்தின் மேலும், ஒரு புதிய ஆர்வத்தை பல்லாயிரக்கணக்கான தமிழரிடம் அவர் தூண்டினார். பாடல்
பெற்ற தலமென்றும், தீர்த்த யாத்திரைக்கும் மொட்டையடிக்கவும் பயணித்த தமிழர்களை, பல்லவர்
சிற்பம் சோழர் சிற்பம் என்று தேடிச்செல்லவைத்தார்.
ஹிண்டு
நாளிதழில் பலவருடங்களுக்கு முன், எழுத்தாளர் கங்காதர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில்,
தமிழ்நாட்டை புரிந்துகொள்ள சிவகாமியின் சபதமும் பொன்னியின் செல்வனும் படிக்கவேண்டும்
என்று வலியுறுத்தியதை நான் ஆமோதிக்கிறேன்.
மலைக்கணவாயில்
பரஞ்சோதி குதிரையில் செல்ல, அவனை சூழ்ந்த சிவந்த மலர்களும் பாறைகளும் அவனது மனதில்
அனலாய் கொதித்த ஆர்வமும் அச்சமும் உற்சாகமும் நரம்புகளை புடைத்துக்கொண்டு மேனியெல்லாம்
மின்னலாய் சிலிர்க்க, அவ்வப்போது பின் தொடரும் வேறொரு குதிரை சத்தம் கேட்பதும், இது
வரை போகாத பாதையில் பரஞ்சோதி மட்டுமல்ல, நாமும் போகிறோம் என்ற ஈடில்லா உணர்ச்சி நம்மை
கவ்வும். ஓவியர் மணியம் செல்வத்தை அவர் இல்லத்தில் சந்தித்தப்போது இதே உணர்வை அவர்
என்னிடம் பகிர்ந்தார். அவர் தந்தை மணியம் வரைந்த வாதாபி ஓவியங்கள் சுவரிலிருந்து சிரித்தன.
கல்கி ஆவியாய் என் காதில் வந்து, அப்பனே, மந்தாகினி மாதிரி மௌனமாய் இருக்காதே,
வந்தியத்தேவனை போல் ஏதாவது உளரித்தள்ளு, என்றார். பல்லை இளித்து தலையசைத்தேன்.
பரஞ்சோதியோடு
மனம் அஜந்தாவிற்கும் பயணம் சென்றது. அருகிலுள்ள சித்தன்னவாசலை விட தொலைவிலுள்ள அஜந்தாவே வா வா என்று
அழைத்தது. அங்கே தீட்டப்பட்ட ஓவியத்தை விட, மங்காத வண்ணத்தின் ரகசியத்தின் மேல் ஆர்வம்
பொங்கியது. நான் சிவகாமியின் சபதம் படித்தது 2000இல். அஜந்தாவுக்கு 2006 இல் சென்றேன்.
ஒரு ஓவியமும் புரியவில்லை. அங்குள்ள ஆட்கள் சொல்வது தவறான கதையெனவே உறுத்தியது. காட்சிகள்
ஏதும் புரியவில்லை. ஓவியங்களின் தேய்ந்த நிலை கண்டு மனம் கசந்தது. முந்திய நாள் எல்லோராவை
பார்த்ததில் மிரட்சியும் பிரமிப்பும் நிலைத்ததால், கொஞ்சம் ஆறுதல். எல்லோரா சிற்பங்கள்
சொல்லும் கதைகள் புரிந்ததே? அஜந்தா ஏன் அடையாளமே தெரியவில்லை? குழப்பமான அனுபவம்.
அஜந்தாவை
பற்றி நல்ல நூலிருக்கும், அதை படித்தால் விவரம் கிடைக்கும் என்று பல வருடங்களுக்கு
என் மந்த புத்திக்கு தோன்றவில்லை. அங்குள்ள ஓவியங்கள் தமிழ்நாட்டு கோயிலுள்ள ஓவியங்களை விட பல மடங்கு சிறப்பானவை என்று மட்டும் புரிந்தது.
ஒரு
கோவிலை தவிர்த்து : காஞ்சி கைலாசநாதர் கோவில்.
(தொடரும்)
தொடர்புடைய கட்டுரைகள்